உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  விரைவாக நீதி வழங்க வேண்டும்!

 விரைவாக நீதி வழங்க வேண்டும்!

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட, 5.65 கோடி வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக, மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இவற்றில், உச்ச நீதிமன்றத்தில், 10,000க்கும் அதிகமான வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட, 16 லட்சம் வழக்குகளும், கீழ் நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், கொடுமை என்னவென்றால், உச்ச நீதிமன்றத்திலேயே, 600 வழக்குகள், 20 ஆண்டுகளை கடந்தும் நிலுவையில் இருப்பது தான்! உயர் நீதிமன்றங்களிலோ, 81,000 வழக்குகள், 30 ஆண்டுகளை கடந்தும் தீர்ப்பு வழங்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இப்படி இருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? நட்டநடு சாலையில், பலர் கண்ணெதிரில் நடக்கும் குற்றங்களில் கூட, இறுதி தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன. தேர்தலில் முறைகேடுகள் செய்து, வெற்றி பெற்றவருக்கு எதிராக போடப்படும் தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள், அந்த ஆட்சியே முடிந்து போகிறது. எளியோரை வலியோர் அடித்தால், எளியோர் நாடுவது நீதிமன்றங்களையே! ஆனால், அங்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஆகும் போது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுகின்றனர். இதனால், பாதிக்கப்படும் பலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பிறருக்கு அநீதி இழைத்தால், நாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வு இருந்தால் தான் குற்றங்கள் குறையும்! ஒருவன் கொலை செய்தால், ஒருவரது சொத்துக்களை பறிமுதல் செய்தால், 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு பின்தான் தண்டனை கிடைக்கும் என்றால், குற்றங்கள் எப்படி குறையும்? நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது; அது விரைவாகவும் வழங்கப்பட வேண்டும். குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் விரைவாக நீதி வழங்கப்படுவதும் முக்கியம்! ----

கண்ணதாசனை புறக்கணிக்கலாமா?

ஆர்.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் திரைத் துறையில் காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர், கவிஞர் கண்ணதாசன். 'கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று, கன்னியன் காதலி என்ற தன் முதல் திரைப்பட பாடலிலேயே, சோர்ந்து போன மனங்களுக்கு ஊக்கம் தந்தவர்; தந்து கொண்டு இருப்பவர், கண்ணதாசன்.குடும்பம், காதல், இயற்கை, தத்துவம், தாலாட்டு, சோகம், வீரம் என்று, 1949ல் கன்னியின் காதலி திரைப்படத்திலிருந்து, 1982ல் வெளி வந்த மூன்றாம் பிறை படம் வரை, 4,500 பாடல்களுக்கும் மேல் எழுதி, தமிழக மக்களின் நெஞ்சில் இன்றும் நிலைத்து நிற்பவர், கண்ணதாசன்.திருடனாக இருந்த வால்மீகி, நாரதரால் மனம் திருந்தி, 'ராமாயணம்' என்ற இதிகாசத்தை எழுதியது போல், ஆரம்ப காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்த கண்ணதாசன், மஹாபெரியவர் சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் அறிவுரையால் மனம் மாறி, தன் நாத்திக கொள்கையை கைவிட்டு, பாமரர்களும் ஹிந்து மதத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்ற தலைப்பில், ஹிந்து மத தத்துவங்களை, 10 பாகங்களில் எழுதி சிறப்பித்துள்ளார்.அந்த புத்தகங்கள் இன்றுவரை மறுபிரசுரம் ஆகிக் கொண்டிருக்கின்றன. அவர் ஹிந்து மதத்தின் பெருமைகளை மட்டும் உயர்த்தி பிடிக்கவில்லை. தன் மரணத்திற்கு முன், 'இயேசு காவியம்' என்று கிறிஸ்துவம் குறித்தும் பாடியுள்ளார்.அதுமட்டுமல்ல... 'ஆட்டனத்தி ஆதிமந்தி' முதல், 10க்கும் மேற்பட்ட காவியங்களையும், சிற்றிலக்கியங்கள், புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள் என்று, ௨௩௨க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி, தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியவர், கண்ணதாசன்.ஆனால், அவரது, 'சேரமான் காதலி' நாவலுக்காக, 'சாஹித்ய அகாடமி' விருது வழங்கியதை தவிர, இதுவரை அவரை 'ஞானபீட' விருது குழுவினர் கண்டு கொள்ளவில்லை.கண்ணதாசனின் நுாற் றாண்டு விழா கொண்டாடும் இத்தருணத்திலாவது, அந்த மகா கவிஞரின் தமிழ் இலக்கிய சேவையை போற்றி, ஞானபீட விருது வழங்க வேண்டும்!-----

கோடீஸ்வரர்களுக்கு எதற்கு இலவசம்?

எஸ்.ஆர்.ராஜகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், 'சுங்கச் சாவடிகளை காரில் கடந்து போக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு காருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலவச, 'பாஸ்ட் டேக்' அனுமதி போதாது; இன்னொரு காருக்கும் இலவச பாஸ்ட் டேக் கொடுக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு.கழுத்தளவு பணம் இருந்தாலும், பேராசைக்காரனுக்கு போதும் என்று மனம் வராதாம்!அதுபோல், அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து, அரசியலுக்கு வந்து, தன் கடுமையான உழைப்பால், இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் வேலுவிற்கு, சுங்கச் சாவடியில் கட்டணம் கட்ட பணமில்லையாம். அதனால், இலவச பாஸ்ட் டேக் பிச்சை கேட்கிறார்!தினமும், எம்.எல்.ஏ.,க்கள் பல முறை சுங்கச்சாவடிகளை கடக்கின்றனர். உதாரணமாக, ஒரு எம்.எல்.ஏ., சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்று வந்தால், பல சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். இதற்கு குறைந்தது, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.அதன்படி பார்த்தால், ஐந்து ஆண்டுகளுக்கு அவர் கட்டணமாக செலுத்த வேண்டியது, பல ஆயிரம் ரூபாய்!இப்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் காரும், மாதம் பலமுறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதால், அரசுக்கு தான் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.இதில், கூடுதலாக இன்னொரு காருக்கு இலவச, பாஸ்ட் டேக் கேட்கிறார் வேலு.சுங்கச்சாவடிக்கு பணம் கட்ட முடியாத அளவிற்கா வேலு வறுமையில் இருக்கிறார்?மத்திய - மாநில அரசுகள் இதுபோன்று எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு கூடுதல் சலுகை அளிப்பதை நிறுத்த வேண்டும். சாமானியர்கள் கட்டணம் கட்டி செல்லும் போது, வேலு போன்ற மகா கோடீஸ்வரர்களுக்கு எதற்கு இலவசம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lakshminarasimhan
ஆக 12, 2026 07:12

பொய்யான வழக்குகளை ஆளும் கட்சிகள் புனைவதன் காரணமே இப்படி பல வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு காரணம்


புதிய வீடியோ