மேலும் செய்திகள்
ஆட்சியாளர்கள் பாடம் கற்பது எப்போது?
22-Oct-2025
கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் போது, ஜாதி, மதம் பாராமல் ஒற்றுமையாக போராடித் தான் அவர்களை விரட்டியடித்தோம். ஆனால், சுதந்திரம் அடைந்த பின், ஓட்டு வங்கி அரசியலுக்காக ஜாதி, மதத்தை அரசியல் கட்சிகள் பிடித்து வைத்துக் கொண்டன. இன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதி, மதத்தை வைத்து பல அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஜாதி பலத்தால் தான், நான்கு முறை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தார். அவரைப் பார்த்து தான், பல மாநிலங்களில் பல ஜாதி, மத கட்சிகள் தற்போது வரை ஆட்சி அதிகாரத்தை பிடிக்க துடித்துக் கொண்டிருக்கின்றன. பீஹாரில் யாதவ் பிரிவை சேர்ந்த லல்லு பிரசாத், மற்றொரு சிறந்த உதாரணம். இக்கட்சிகளால் தான், இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் ஜாதி, மத மோதல்கள் தற்போது வரை தொடர் கதையாக உள்ளன. இந்நிலையில், ஊர்கள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்குவதற்கு நெறிமுறைகளை உருவாக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது, தமிழக அரசு. தமிழக அரசாணை மீது எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உண்மையில், ஜாதிகள் ஒழிய வேண்டும் என்றால், மக்களின் பிறப்பு சான்றிதழில், ஜாதி என்பதற்கு பதில், 'இந்தியன்' என்று பதிவு செய்யப்பட வேண்டும். துவக்கப் பள்ளியில் ஜாதி என்ற இடத்தை நீக்கி, அந்த இடத்தில், 'இந்தியன்' என்று பதிவு செய்யப்படும் போது தான், ஜாதி, மதம் நம் அனைவரின் மனதில் இருந்து விரட்டி அடிக்கப்படும். அதை விடுத்து, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ஜாதி பெயர்களை நீக்குவதற்கு அரசாணை வெளியிடுவதால், ஆணவக் கொலைகளும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் இடையே ஏற்படும் ஜாதி மோதல்களும் நின்று விடப் போவதில்லை. திராவிட மாடல் ஆட்சியாளர்களும், தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, ஜாதி, மதம் பாராமல் வேட்பாளர்களுக்கு சீட்டு கொடுத்து விடப் போவதில்லை. உண்மையில், அரசின் சலுகைகள் அனைத்தும் ஜாதி, மத ரீதியாக வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவரவர் தகுதிக்கு ஏற்ப, கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது தான் ஜாதி, மத பாகுபாடுகள் நம்மை விட்டு ஒழியும்! சட்ட திருத்தம் வருமா? வி.எஸ்.ராமச்சந்திரன், செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வயதை, 25லிருந்து 21 ஆக குறைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்; நாட்டை வழிநடத்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார், தெலுங்கானா முதல்வரும், காங்., கட்சியை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி. மேலும், '25 வயதிற்கும் குறைவானவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரியாக வெற்றிகரமாக பணியாற்றும் போது, 21 வயதில் ஒருவரால் எம்.எல்.ஏ.,வாக பணியாற்ற முடியாதா?' என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இது வரவேற்கத்தக்கது தான்! அதேநேரம், மத்திய அரசு, தேர்தலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைத்து சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும், இங்குள்ள கட்சிகள், அடித்தட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடுவரா என்ன? சிபாரிசு, பணம் படைத்தோர், அரசியல்வாதிகளின் வாரிசுகள் தான் போட்டியிட முடியும். இதனால், நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்து விடும்? அப்பன் செய்த ஊழலை, பதவிக்கு வரும் மகன் செய்ய போகிறார்! இதேபோன்று, ஓர் அரசு ஊழியர் தன் பெற்றோரை கவனிக்க மறுத்து புறக்கணித்தால், அவரது சம்பளத்தில், 10 முதல், 15 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அப்பணம் அவரது பெற்றோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார், ரேவந்த் ரெட்டி. இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வரவும் அவரது அரசு முடிவு செய்துள்ளதாம். இன்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் நல்ல பணியில் கைநிறைய சம்பாதித்தாலும், ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து, அவர்களை தனிமைப்படுத்தி விடுகின்றனர். இது மனித தன்மையற்ற செயல். இதற்கு முடிவுகட்டும் விதமாக, பெற்றோரை கவனியாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் சட்டத்தை கொண்டு வர துணிந்துள்ளார், தெலுங்கானா மு தல்வர். இந்த அறிவிப்பு தெலுங்கானா மூத்த குடிமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதை நாடு முழுதும் செயல்படுத்த மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் பெரும்பாலான முதியோர் இல்லங்கள் மூடப்படும். இளம் தலைமுறையினருக்கு நல்லதொருகுடும்ப பாதுகாப்பு சூழல் அமையும். மத்திய அரசு யோசிக்குமா? காரியத்தில் வீரியமில்லை; ஆனால் பெருமை! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சிபுரம் அருகில் இயங்கி வந்த ஒரு மருந்து கம்பெனியின் இருமல் மருந்தை குடித்து, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல குழந்தைகள் இறந்து உள்ளனர். இந்நிறுவனம் ஒரு சிறிய இடத்தில், போதிய சுகாதாரம், அடிப்படை வசதிகள் இன்றி, கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. ஆய்வு நடத்த வேண்டிய மருந்து ஆய்வாளர்களோ, பல ஆண்டு களாகவே இந்நிறுவனத்தில் ஆய்வு நடத்தவில்லையாம். இவர்கள் அடிக்கடி ஆய்வு செய்திருந்தால், அந்நிறுவனம் எப்போதோ தடை செய்யப்பட்டிருக்கும்; இன்று பல பிஞ்சுகளின் உயிர் பறிபோய் இருக்காது! வழக்கம் போல் பல உயிர்களை காவு கொடுத்த பின், தற்போது, இரண்டு மூத்த மருந்து ஆய்வாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியமோ, தான் 'வாக்கிங்' செல்வதையும், உடற்பயிற்சி செய்வதையும் போட்டோ ஷூட் எடுத்து, பத்திரிகைகளிலும், இணையதள ஊடகங் களிலும் வெளியிட்டு கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், தமிழக அரசு விரைந்து செயல்பட்டதாக சட்டசபையில் பெருமைப் படுகிறார். முன் ஏர் போகும் வழியில் தானே பின் ஏர் செல்லும்! முதல்வரைப் போல், அவரது அமைச்சர்களும் காரியத்தில் வீரியம் இல்லை; பெருமைக்கோ பஞ்சமில்லை!
22-Oct-2025