பாடம் கற்பிப்பர்!
க.சோணையா, திருமங்கலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், ஆளுங்கட்சி விசுவாசி ஒருவர், திருட்டு மின்சாரம் வாயிலாக, வணிக வளாக கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளார். இதைக் கண்டுபிடித்து ஆய்வுக்கு சென்ற மின் ஊழியர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். மேலும், சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணி மேற்கொண்ட ஒரு நிறுவனத்தின் முறைகேடுகளை கண்டுபிடித்து, அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்தார், நகர்நல அலுவலர் சரோஜா. இவ்விஷயம் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, தற்போது, அப்பெண் அதிகாரி காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். திராவிட ஆட்சியாளர்களின் செயல்பாடு இப்படியென்றால் கூட்டணி கட்சிகளோ அதற்குமேல்!மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., மாநாட்டின் துாய்மை பணிக்கு, மாநகராட்சி ஊழியர்கள் 200 பேரை முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர், அக்கட்சி நிர்வாகிகள்.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுவோரை, ஒரு கட்சி மாநாட்டின் வேலைக்கு பயன்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு... தொழிலாளர்களுக்கான கட்சி என்று மார்தட்டுவோருக்கு, தொழிலாளர் சட்டம் தெரியாதா? தமிழக அரசின் நிர்வாகத்திறன் இப்படியென்றால், சட்டம் - ஒழுங்கோ நடுங்க வைக்கிறது! கனிமவளக் கொள்ளையை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் ஒருவர், புதுக் கோட்டையில் லாரி ஏற்றி கொல்லப்பட்டார். திருநெல்வேலியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்தில் வைத்தே வெட்டி கொலை செய்யப்பட்டார். துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, கூட்டணிக் கட்சித் தலைவரின் உறவினர் கணக்கிற்கு மடைமாற்றம் செய்ததை சுட்டிக்காட்டிய, 'யு - டியூபர்' சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டது. இதுதான், ஜனநாயகமா? இதே நிலை தொடர்ந்தால், வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் அதற்கான பாடத்தை கற்பிப்பர் என்பதை மறந்து விட வேண்டாம்! நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்!
சு.ஸ்ரீனிவாசன்,
கோவையில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில், தமிழக நகராட்சி
நிர்வாகத்திற்காக, 781 உதவி பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில்
பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் மூன்றே நாட்களில்
நியமிக்கப்பட்டனர். பொதுப்பிரிவில் நியமிக்கப்பட்டோரில் எட்டு பேர் மட்டுமே
முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இது, ஒரு சதவீதத்திற்கும் குறைவே!தமிழகத்தில்
உள்ள, 69 சதவீத ஒதுக்கீட்டிலும், முற்பட்ட ஜாதியினர் இல்லாதவர் பதவிகளை
பெறுவதுடன், மீதமுள்ள பொதுப்பிரிவிலும், 31 சதவீத பதவிகளை அவர்களே
பெறுகின்றனர். முற்பட்ட பிரிவினருக்காக, 31 சதவீதம் ஒதுக்கீடு
செய்யப்பட்டிருந்தால், நியமனம் பெற்ற, எட்டு பேருக்கு பதில், 242 பேர்
அல்லவா இருந்திருப்பர்? முற்பட்ட ஜாதியினர் என்று ஒருசிலரை முத்திரை குத்தி, அவர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து அநீதி இழைப்பது தான் சமூக நீதியா? பழைய
பாபிலோனிய நாட்டின் பேரரசன் ஹம்முராபி; மனித வரலாற்றில், முதன் முதலில்
எழுதப்பட்ட சட்டங்களில், இவர் வகுத்த சட்டங்களும் ஒன்று! அவரது ஆட்சிக் காலத்தில், அந்த சட்டத்தின்படி, 'கண்ணுக்கு கண்; பல்லுக்கு பல்' என்று பழிவாங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஒருவன்
கண்களை, மற்றவன் பறித்து விட்டால், பறித்தவனுடைய கண்களும் பறிக்கப்பட்டு
விடும். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கு காரணங்களாக, திராவிட மாடல்
ஆட்சியாளர்கள் கூறுவனவும், அந்த ஹம்முராபியின் சட்டத் தொகுப்பையே
நினைவுபடுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைத் தவிர, பிற ஜாதியினர் எவருக்கும் இடஒதுக்கீடு தேவையில்லை. பிற
ஜாதியினருக்கு கால வரம்புடன் கூடிய இட ஒதுக்கீடு வழங்கலாம்; ஜாதி
சான்றுகள் வழங்கும் நடைமுறையை ஒழித்துவிடலாம்; அரசியல்வாதிகளின்
ஆதாயத்திற்காக செய்யப்படும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள், ஜாதியக்
கட்டமைப்பை மேலும் இறுக்கி, நாட்டுக்கு பெருந்தீங்கையே ஏற்படுத்தும்.இதைத்தான் அரசியல்வாதிகள் விரும்புகின்றனரா? ஓட்டுக்காக கூப்பாடு போடாதீர்கள்!
எஸ்.சதுர்வேதி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. மதம் சார்ந்த விஷயங்களில், அரசு தலையிடுவதை இது உறுதி செய்கிறது. இந்த மசோதாவை, சிறுபான்மையினர் நலத்துறை தான் தயாரித்ததா அல்லது வேறு ஏதாவது துறை தயாரித்து அளித்ததா? 'இந்த மசோதா வாயிலாக அரசியலமைப்பு சட்டத்தை அரசு நீர்த்து போகவும், சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பும் செய்துள்ளது, இந்திய சமூகத்தை பிளவுபடுத்திஉள்ளது. 'இதே நிலைமை, நாளை வேறு சமூகத்திற்கும் நடக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார், எதிர்க்கட்சி துணை தலைவரான காங்கிரசின் கவுரவ் கோகோய்!இந்தியாவை பிளவுபடுத்தியது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., அல்ல; 1947ல் இந்தியாவை பிரித்து பாகிஸ்தானுக்கு பங்கு போட்டு கொடுத்தது, காங்கிரஸ். அதைத் தொடர்ந்து, 1954ல் வக்ப் வாரிய சட்டத்தின் வாயிலாக, இந்தியாவில் எந்த இடத்தை வேண்டுமானாலும், வக்ப் வாரியம் உரிமைகோரி கையகப்படுத்த சட்டம் கொண்டு வந்ததும் காங்., கட்சி தான்!இன்று சட்டப் புத்தகத்தை துாக்கிக் கொண்டு திரிகின்றனர், காங்., தலைவர்கள். ஆனால், இவர்களது ஆட்சியில் தான், நுாற்றுக்கணக்கான திருத்தங்களை செய்து, அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக்கி, நீர்த்து போகச் செய்தனர்!எதை வைத்து அரசியல் செய்வோம் என்று காத்திருக்கும் பிரிவினைவாத அரசியல்வாதிகள் தான், வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனரே தவிர, இஸ்லாம் மதத்தை சேர்ந்த குருமார்கள் வரவேற்று, திருத்தப்பட்ட இச்சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்கின்றனர். சிறுபான்மையினர் பாதுகாவலர்களாக வேடமிடும் காங்., மற்றும் தி.மு.க.,வினர், இதுவரை வக்ப் வாரிய சொத்துக்களால் எத்தனை ஏழை இஸ்லாமியர்கள் பயன்பெற்றனர் என்ற புள்ளி விபரத்தை காட்ட முடியுமா?சிறுபான்மையினர் மீது உண்மையான அக்கறை இருந்தால், ஓட்டுக்காக கூப்பாடு போடாமல், அச்சட்டத் திருத்தத்தில் உள்ள நன்மைகளை கவனியுங்கள்!