உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தமிழகத்தின் பொற்காலமான எமர்ஜென்சி!

தமிழகத்தின் பொற்காலமான எமர்ஜென்சி!

கே.ஆர்.அனந்த பத்மநாபன், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ம் தேதி வந்தால் போதும்... 'மிசா' காலத்தில் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து பெருமையாக பேச ஆரம்பித்து விடுவர், தி.மு.க.,வினர். ஆனால், உண்மையில் மிசா காலத்தில் என்ன நடந்தது என்பதை, இன்று, 70 வயதை கடந்தவர்களை கேட்டால் கதை கதையாக கூறுவர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே, திடீரென்று அவசர நிலையை பிரகடனம் செய்தார். பொதுவாக போர்க்காலத்திலோ அல்லது நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டாலோ தான் எமர்ஜென்சி அறிவிக்கப்படுவது வழக்கம்.ஆனால், தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள எமர்ஜென்சியை அறிவித்தார், இந்திரா. எமர்ஜென்சி காலத்தில் அரசை எதிர்த்து எதுவும் பேச முடியாது; முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் எவரை வேண்டுமானாலும் அரசு கைது செய்யலாம்; அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை.இதைப் பயன்படுத்தி வடமாநிலங்களில், தன் அரசியல் எதிரிகளை பழிவாங்கினர் காங்கிரசார். குறிப்பாக, இந்திராவின் மகன் சஞ்சய், சொல்லொணா கொடுமைகளை செய்தார். அதேநேரம், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் வரலாறு காணாத ஊழல்கள், அராஜகம் போன்றவற்றால் மக்கள் படாதபாடு பட்டனர்.சர்க்கரை மூட்டை வாங்கியதில், கூவம் நதியை சுத்தம் செய்ததில் என்று பல நுாறு கோடிகளை, 'ஸ்வாகா' செய்தது, தி.மு.க.,அத்துடன், வீராணம் ஊழலும் பரபரப்பாக பேசப்பட்டது. அத்திட்டத்தை எடுத்த ஆந்திர கான்ட்ராக்டர் தி.மு.க., செய்த ஊழல்களால், மேலும் திட்டத்தை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.இப்படி, தி.மு.க.,வின் ஊழலும், அராஜகமும் தமிழகத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நிலையில், எமர்ஜென்சி வரவே, இதுதான் சரியான தருணம் என்று கருதிய இந்திரா, ஊழல் மற்றும் அராஜகம் செய்த தி.மு.க.,வினரை பிடித்து சிறையில் அடைத்தார்.இதனால், தங்களை தி.மு.க.,வினர் என்று வெளியே சொல்லவே அச்சப்பட்டனர். அந்த அளவுக்கு, சட்டம் - ஒழுங்கு கண்காணிக்கப்பட்டது.வடமாநிலங்களில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை மிசா காலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே சொல்வர், அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள்! எனவே, தி.மு.க.,வினர் கொடுமைகள் அனுபவித்ததாக கூறினாலும், அதுவே, தமிழக மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்த காலம் என்று சொன்னால் மிகையில்லை!

வெல்டன் சுபான்ஷு!

அ.குணசேகரன், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாடு வல்லரசாக கருதப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம், நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளியில் நிகழ்த்தி வரும் சாதனைகள்!முதன் முறையாக, 1984ல் சோவியத் யூனியன்விண்கலம் வாயிலாக ராகேஷ் ஷர்மாவை விண்வெளிக்கு அனுப்பிய நாம், 41 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவின் நாசா உதவியுடன் சுபான்ஷுவை அனுப்பி வைத்துள்ளோம். விண்வெளி பயணம் மிகவும் ஆபத்தானது; அதையும் தாண்டி சாதனை படைக்க வேண்டும் என்ற உணர்வுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்.கல்பனா சாவ்லாவை இழந்தாலும், நம் நாட்டிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற முயற்சியை கைவிடவில்லை.அதற்காகத்தான் ககன்யான்- திட்டத்தில் நம் நாடு ஈடுபட்டு வருகிறது. அதற்கு, சுபான்ஷுவின் டிராகன் விண்கலப் பயணம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது, செவ்வாய் மற்றும் சந்திரன் கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதை விட சவாலானது. இந்நிலையில், சுபான்ஷு விண்வெளியில் தங்கி, சக வீரர்களுடன் தேவையான ஆய்வுகளை செய்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.நாசாவுக்கு இணையாக உருவாகிக் கொண்டிருக்கும் நம் இஸ்ரோவை போற்றுவதுடன், சுபான்ஷும், அவருடன் பயணித்துள்ள மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வர இறைவனை பிரார்த்தனை செய்வோம்!

கொள்ளையடிக்கும் மருந்தகங்கள்!

ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளத்திலிருந்து எழுதுகிறார்: 'மருத்துவர்கள், 'ஜெனரிக்' மருந்துகளையே நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், மருத்துவர்கள் இத்தீர்ப்பை மதித்து நடக்கின்றனரா என்பதை இந்திய மருத்துவ துறை கவுன்சில் கண்காணிக்க வேண்டும். காரணம், கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமின்றி, சிறிய மருத்துவமனைகளில் கூட மருந்தகங்களை வைத்து, தங்களை வெகுவாய் கவனிக்கும் கம்பெனிகளின் மருந்துகளை, எம்.ஆர்.பி., விலைக்கே விற்று, நோயாளிகளிடம் காசு பார்க்கின்றனர், மருத்துவர்கள். தற்போது, சிறிய மருந்து கடைகள் கூட எம்.ஆர்.பி., விலையில் இருந்து, 5 முதல், 20 சதவீதம் வரை குறைத்து விற்கின்றனர். அத்துடன், 'ஜன் அவுஷதி' எனும் மத்திய அரசின் மருந்தகங்களிலும், 'டாடா மெட்பிளஸ்' போன்ற தனியார் மருந்து கம்பெனி கடைகளிலும், 50 முதல், 80 சதவீதம் வரையிலும், கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்களில், 20 சதவீதம் வரையிலும் விலை குறைக்கப்படுகிறது. ஆனால், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டும் எம்.ஆர்.பி., விலைக்கே மருந்துகள் விற்கப்படுவது ஏன்? இது மாபெரும் கொள்ளை அல்லவா?இதேபோன்று, மருத்துவ ஆய்வுக்கூடங்களும் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றன. உதாரணமாக, மூன்று மாத சர்க்கரை அளவை பரிசோதிக்கும், 'எச்பிஏ1சி' என்ற பரிசோதனைக்கு, 250 ரூபாயிலிருந்து, 600 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உண்மையில், இப்பரிசோதனைக்கு சரியான கட்டணம் தான் என்ன? இதையெல்லாம் அரசு சரிப்படுத்த இயலாதா? பாவம் நோயாளிகள்!மருந்தகங்கள், ஸ்கேன் சென்டர்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் அரசு தன் கவனத்தை செலுத்த வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மனிதன்
ஜூலை 13, 2025 20:47

கதை விடாமல் போங்கப்பா.. எங்க அப்பாவெல்லாம் எமர்ஜென்சி பற்றி நிறைய சொல்லியிருக்கார்...நீங்கல்லாம் இப்படித்தான் நிறைய அடிமைகளை உருவாக்குகிறீர்களோ???


Easu
ஜூலை 10, 2025 21:56

உண்மை கார்த்திகேயன் தலைமையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேசப்பட்டது .போலீஸ் கைகள் கட்டப்படவில்லை.அநாவிசய வேலை நிறுத்தங்ங்கள் முற்றிழும் முடங்கிப் போய் விட்டது


D.Ambujavalli
ஜூலை 10, 2025 17:05

Cycle gap இல் 'எந்தக் காரணத்துக்கோ' உள்ளே பிடித்துப் போட்டதை மறைக்க மிசா' உதவியது அல்லவா ? இன்னும் அந்த 'மிசா தியாகி' பஜனையை, பாடிக்கொண்டிருக்கிறார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை