உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மக்களுக்கு தெரியும்!

மக்களுக்கு தெரியும்!

சி.ஸ்ரீதேவி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், புதிய மின்திட்டத்துக்காக பணம் ஒதுக்கீடு செய்து, மின்நிலையங்களை அமைத்து, மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். ஆனால், கடந்த கால திராவிட கட்சி ஆட்சியாளர்கள், ஓட்டு வாங்குவதற்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தை, புதிய மின்நிலையங்கள் அமைப்பதில் காட்டவில்லை. விளைவு... தற்போது, 4,850 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை உள்ளது. அதில், 3,000 மெகா வாட் மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு, 9 ருபாய் விலையில் தான் வாங்குகிறது, தமிழக வெற்றிக் கழக அரசு. குறைந்த விலையில் மேலும் மின்சாரம் கிடைக்காததால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க, யூனிட் ஒன்றுக்கு, 35 ருபாய் விலையில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, இரண்டு வாரங்களுக்கு மட்டும் வாங்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை, பல அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன; அதில் தவறில்லை. ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தை ஆட்சி செய்த, தி.மு.க., – அ.தி.மு.க., விமர்சிக்கலாமா? இவர்கள் நினைத்திருந்தால், இலவச திட்டங்களுக்காக செலவிட்ட பணத்தில், எத்தனையோ புதிய மின் நிலையங்களை துவக்கி, மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கலாம்; ஆனால், கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் அல்லவா ஆர்வம் காட்டினர்! கடந்த தி.மு.க., ஆட்சியில் கூட, மின்தேவை அதிகரிக்காத சூழ்நிலையிலும், ஒரு யூனிட் மின்சாரத்தை, 21 ருபாய்க்கு வாங்கியுள்ளனர். இப்படியே, தமிழகத்தின் கடன் சுமையை, 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, கடன்கார மாநிலமாக மாற்றிவிட்டு, இப்போது ஏற்படும் இந்த சிறிய தொகை இழப்புக்காக கண்ணீர் விடுகின்றன, இரண்டு திராவிட கட்சிகளும்! இவர்களை பொறுத்தவரை, மின் பற்றாக்குறை பிரச்னை தொடர வேண்டும்; மக்கள் அவதிப்பட வேண்டும்; அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம். இதை மக்கள் புரிந்து கொள்ளாமலா இருப்பர்!

lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !