உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / என் அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றனரே!

என் அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றனரே!

அழகர், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், ஏன்... பிரதமரே கூட, முப்பது நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும் என்ற மசோதாவைக் கேள்விப்பட்டதும், நம் முதல்வர் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், எண்ணெயில் விழுந்த சீடை போல துள்ளிக் குதிக்கத் துவங்கி விட்டனர். கறுப்புச் சட்டம், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் சட்டம் என, ஒவ்வொருவரும் ஏதோ நாட்டுக்கு விரோதமான ஒரு சட்டத்தைக் கண்ட மாதிரி பொங்கி எழத் துவங்கி விட்டனர். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளே தெரியாமல், இவர்களெல்லாம் பதவிக்கு வந்தது காலத்தின் கொடுமை. ஒரு அரசு ஊழியர், 24 மணி நேரம் ஜெயிலில் இருந்தாலே, அவரை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் குற்றமற்றவர் என நிரூபணமானால் தான், அவர் மறுபடியும் பணியில் சேர முடியும். குற்றம் நிரூபணமானால், பணியில் இருந்து நிரந்தரமாகநீக்கப்படுவார். ஒரு சாதாரண அரசு ஊழியருக்கே இப்படி சட்டம் இருக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்களான எம்.எல்.ஏ.,க்களுக்கும், எம்.பி.,க்களுக்கும், பதவிப் பறிப்பில் இருந்து ஏன் விலக்கு அளிக்க வேண்டும்? அவர்களுக்கு அரசு தானே ஊதியம் கொடுக்கிறது? ஓய்வூதியமும் அரசு தான் வழங்குகிறது! 'நாங்கள் நேர்மையானவர்கள். இந்த மாதிரி சட்டம் அவசியம் தேவை. குற்றம் புரியும் எங்கள் சகாக்கள், இது போன்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்' என, ஏன் இவர்களால் சொல்லவே முடியவில்லை? இவர்கள் இப்படி, 'ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் சட்டம்' என ஒப்பாரி வைப்பதைப் பார்த்தால், 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஊழல் மன்னர்கள் நிறைந்த கட்சிக்காரர்கள் தான் இப்படி கூக்குரல் இடுகின்றனர் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அது நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் சட்டம் எதை இயற்றினாலும், அதை உளப்பூர்வமாக வரவேற்க, அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக எதிர்த்தால், அது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, ஓட்டு போடும் மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்! எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்? பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ' தி .மு.க., ஆட்சி அமைந்தது ம் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, 2019ல் மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அன்றைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், நேரில் உறுதியளித்தார். இருப்பினும், இன்றுவரை சொன்னதை செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, யார், எங்கு, எதற்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களை துாண்டி விட்டதுடன், 'தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படும்' என்று வாக்குறுதியும் கொடுத்தார். அவரது வாக்குறுதியை நம்பி ஓட்டளித்து ஏமாந்தோர் அநேகர்! அவ்வரிசையில், ஏமாந்தவர்களில் அரசு ஊழியர்களும் உண்டு. 'மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்' என்று இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி, ஆட்சிக்கு வந்ததும் காற்றோடு போச்சு. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த அல்வாவோ, 'சம வேலைக்கு, சம ஊதியம்!' இதே போன்று, 'டாஸ்மாக் மதுவிற்பனையால் தமிழகத்தில் இளம் விதவையர் அதிகமாக உள்ளதால், தி.மு.க., ஆட்சி வந்தவுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்து வோம்' என்று, 2016 லிலேயே வாக்குறுதி அளித்தார், ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், எப்படியெல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கலாம் என்று திட்டமிடுகிறார். கொடுத்த வாக்குறுதியோ கடற்கரை மணலில் எழுதிய எழுத்தாக காணாமல் போய் விட்டது. விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக, 4,000 ரூபாயும் வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதிகள், இன்று வரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடக்கின்றன. கூடவே, 'நீட்' தேர்வு ரத்து முதல், விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து என ஏகப்பட்ட ரத்துகளும், அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, 1,000 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய், டீசல் விலை குறைப்பு என்று பல்வேறு தரப்பினரின் ஆசையைத் துாண்டி, ஓட்டாக பெற்று, ஆட்சியை பிடித்தவுடன் அனைத்தையும் மறந்து விட்டார். 'செய்வதைச் சொல் வோம்; சொல்வதைச் செய் வோம்' என்று வசனம் பேசியதை நம்பி, ஏமாந்து போனது மட்டுமே கடைசியில் மிச்சமாகியுள்ளது. இதோ... மீண்டும் தேர்தல் நெருங்கி விட்டது. இப்போதும் தி.மு.க.,வினர் கூறுவர்... 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும்' என்று! அதை உண்மை என நம்பி ஏமாறாமல், விழிப்புடன் ஓட்டளிப்பது நம் கடமை!  தேர்வுகள் அவசியம்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் மாநில பள்ளிக் கல்வி கொள்கையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைபெறும் பொதுத் தேர்வுகள் தரும் அழுத்தத்தை மாணவ - மாணவியருக்கு கொடுக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை காரணம் கூறுகிறது. இனி, ஆசிரியர்கள், மாணவர்களும் பிளஸ் 1 பாடங்களை சற்றே எளிதாக எடுத்துக் கொண்டு, பிளஸ் 2 பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். ஆனால், ஐ.ஐ.டி., நெட் மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படுவதால், இது மாணவ - மாணவியருக்கு பின்ன டைவை ஏற்படுத்தலாம். பொதுத்தேர்வு இல்லாததால், அனைவருமே தேர்ச்சி பெற்று விடுவதால், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் விகிதாச்சாரம் குறையவும் வாய்ப்புள்ளது. அத்துடன், எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது, மாணவர்களின் கல்வித்தரம் குறைவதற்கு ஏதுவாக உள்ளது. குறைந்தபட்சம் துவக்கப்பள்ளி நிலையில் ஐந்தாம் வகுப்பிலும், நடுநிலைப்பள்ளி நிலையில் எட்டாம் வகுப்பிலும் தேர்வுகள் வைத்து, அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். தேர்வில் தோல்வியடைந்த சிலர் படிப்பை விட்டு விடலாம். அதேநேரம், இது, திறமையான மாணவ - மாணவியரை உருவாக்கும் என்பது நிச்சயம்! இதுகுறித்து, கல்வி யாளர்கள் தான் அரசுக்கு வழிகாட்ட வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 25, 2025 21:37

யார் இந்த 'முன்னாள் வாக்குறுதிகளை' நினைவில் வைத்திருப்பார்கள்? அடுத்த முறை 1000 ஐ 2000 என்றும், மற்ற வழக்கமான 'default ' வாக்குறுதிகளை புதுப்பித்தும் கூறிவிட்டு, 'கைக்காசு' லஞ்சம் என்று கொச்சைப்படுத்தினால் உ. பிக்கள் உதைக்க வருவார்கள் 0 200/ 300. ஐ, 2000 என்று ஆக்கிவிட்டால், மனம் குளிர்ந்து ஓட்டுக்களை கண்ணை மூடிக்கொண்டு போடமாட்டார்களா என்ற மிதப்புத்தான் மக்களும் திருந்தப்போவதில்லை, வாக்குறுதிகளும் மாறப்போவதில்லை விடிவும் வரப்போவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை