கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இயேசுவின் வாழ்க்கை எளிமையானது; அவரை போல் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி. பிறர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என கிறிஸ்துவம் சொல்வதை தி.மு.க., பின்பற்றுகிறது. கிறிஸ்துவ கொள்கைகளுக்கும், தி.மு.க.,கொள்கைகளுக்கும் வேறுபாடு ஏதும் கிடையாது; இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை வலியுறுத்துபவை' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி.கடந்த 1972ல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலை மாணவர் தலைவர் உதய குமார், அடித்துக் கொல்லப்பட்டார்.அதேபோன்று, இன்றைய கல்வி துறை அமைச்சர் மகேஷின் தாத்தா, தர்மலிங்கம் அமைச்சராக இருந்த காலத்தில், மாணவர்கள் சிலர் அவரது உறவினர் ஒருவரை விமர்சனம் செய்ததற்காக, திருச்சி கிளைவ் விடுதி மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினர், தி.மு.க.,வினர்.முன்னாள் தி.மு.க., அமைச்சர் தா.கிருட்டிணன் நடை பயிற்சியின் போது சொந்த கட்சிக்காரர்களால் கொலைசெய்யப்பட்டார். கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியையும், அன்றைய மதுரை துணை மேயர் மன்னன் உட்பட, 13 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கின் முடிவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.அதுமட்டுமா... கருணாநிதியின் அரசியல் வாரிசு குறித்து கருத்து கணிப்பு வெளியிட்ட, 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதில், அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் மூவர் பலியாயினர்.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்று எத்தனையோ மனித நேய மரணங்கள் அக்கட்சியினரால் நிகழ்த்தப்பட்டன!'ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டுங்கள்' என்று அன்பை மட்டுமே உலகிற்கு போதித்த இயேசுபிரானோடு, அதிகார பசிக்காக பஞ்சமாபாதகங்களை நிகழ்த்திய கூட்டத்தை இணையாக ஒப்பிடுகிறார், உதயநிதி.அதுமட்டுமல்ல... இல்லற இன்பங்களை முற்றிலும் துறந்த இயேசுபிரானோடு, மனைவிக்கும், வளர்ப்பு மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல், 70 வயதில், 30 வயது நிரம்பிய மணியம்மையை திருமணம் செய்த ஈ.வெ.ராமசாமியுடன் ஒப்பிடுகிறார், உதயநிதி.'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்றும், 'நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை; அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் இல்லை' என்று, தன் ஒழுக்கத்திற்கு பல்லக்கு துாக்கிய அண்ணாதுரையுடனும், மனைவி இருக்கும் போது துணைவியும் இருக்கலாம்; பல இணைவிகளும் இருக்கலாம் என்று இல்லற இன்பத்துக்கு புது இலக்கணம் எழுதிய கருணாநிதியையும், இயேசுபிரானுக்கு இணையாக ஒப்பிட்டு பேசியுள்ளார்.இதைவிட இயேசுபிரானை எவரும் இழிவு செய்து விட முடியாது.சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற இக்கடவுள் மறுப்பாளர்களை, இன்று, இயேசு பிரானோடு ஒப்பிட்டு பேசும் உதயநிதி, நாளை, ரம்ஜான் நோன்பு காலத்தில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதியை அல்லாவுடனும் ஒப்பிட்டு பேசலாம்.பின், இயேசுபிரான், அல்லாவிற்கே ஈ.வெ.ராமசாமி தான் பகுத்தறிவு ஊட்டினார் என்று கூட பரப்புரை கிளப்புவர்.எனவே, ஆரம்பத்திலேயே இதுபோன்ற அறிவற்ற பேச்சுகளுக்கு சிறுபான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், ருசி கண்ட பூனையாக, கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களையும், இக்கூட்டம் இழிவுபடுத்த துவங்கி விடும்!கருணாநிதியாக மாறாமல் இருந்தால் போதும்! பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'நடிகர் விஜய் எக்காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது' என அறைகூவல் விடுத்துள்ளார், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி. தமிழக மக்களை பொறுத்தவரை, விஜய் எம்.ஜி.ஆராக முடியாவிட்டாலும் பரவாயில்லை; கருணாநிதியாக மட்டும் மாறிவிடக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், தமிழக அரசியலில் காமராஜர், கக்கன், ஜீவா, முத்துராமலிங்கத் தேவர் போன்ற சேவை மனம் படைத்தவர்கள் தலைவர்களாக இருந்த போது, தேர்தல் வெற்றி குறித்து சிறிதும் சிந்திக்காமல், மக்கள் நல்வாழ்வை நினைத்தே திட்டங்களை வகுத்தனர்; அதற்காகவே உழைத்தனர். ஆனால், திராவிட கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வந்தபின், அரசியலை பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றி, பணபலம் மிக்கவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டனர். கடந்த 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தொலைநோக்கு சிந்தனை ஏதுமின்றி, வெறும் ஓட்டு வங்கியை கணக்கிட்டே இலவச திட்டங்களை தீட்டி, இன்றும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் கையேந்தும் நிலையிலேயே வைத்துள்ளனர். எனவே, தமிழகத்திற்கு தற்போதைய தேவை தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்சம் ஊழலற்ற நிர்வாகமே! அதை, கண்டிப்பாக திராவிட கட்சிகளால் கொடுக்க முடியாது. அதேநேரம், சினிமாவில் ஆண்டிற்கு, 400 கோடி ரூபாய் சம்பாதித்த நிலையில், அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய், கண்டிப்பாக ஊழல் செய்ய மாட்டார். தலைவன் ஊழல் செய்யவில்லை என்றால், அவனுக்கு கீழ் இருப்பவர்களும் ஊழல் செய்ய மாட்டார்கள். அப் படியே, எவராவது ஊழல் செய்தாலும், அவர்கள் மீது துணிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து ஊழலை தடுக்க முடியும். ஊழல் இல்லாத நல்லாட்சி அமைந்து விட்டாலே, மக்களுக்கு பல்வேறு நன்மைகள் தானே வந்து சேரும். எனவே, விஜய், எம்.ஜி.ஆராக முடியாவிட்டாலும் பரவாயில்லை; கருணாநிதியாக மாறாமல் இருந்தாலே போதும்; தமிழகம் முன்னேறி விடும்! 'தினமலர்' படியுங்கள் முதல்வரே! வெ.சீனிவாசன், பின்னத்துார், சிதம்பரம் மாவட் டத்தில் இருந்து எழுதுகிறார்: 'தீபத்துாண் அல்ல; நில அளவுகோல்' என்று கூறிய தமிழக அரசு தற்போது, 'அது சமணர்கள் நிறுவியது' என்கிறது. அதற்கு ஆதாரமாக ஒரு நுாலையும் நீதிமன்றத்தில் காட்டியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை பின்புறமுள்ள தக்கோலம் சிவன் கோவில் தொல்லியல் துறை வசம் உள்ளது. பங்குனி மாதத்தில், இக்கோவிலின் தேர், முழு மலையையும் வலம் வருகிறது. தக்கோலம் சிவன் கோவில், தொல்லியல் துறை வசம் உள்ளது போல், திருப்பரங்குன்றத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு என்றால் மயிலை, சீனி.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நுாலை துாக்கிக் கொண்டு வரும் அரசு, திருப்புகழ் ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்ட சிதம்பரம் பின்னத்துார் வெங்கடாசலம் தோட்டத்தில், அருணகிரி நாதருக்கு மணிமண்டபம் கட்ட, 'தினமலர்' வெளியிட்ட செய்தியை சிரமேற்கொண்டிருந்தால், இந்நேரம் மக்கள் மனம் மகிழ்ந்திருப்பர்! 'தினமலர்' நாளிதழ் படியுங்கள் முதல்வரே!