எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப் பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி கொடுத்தும், ஹிந்து விரோத தி.மு.க., அரசு, அதை தடுத்து நிறுத்தியுள்ளது.ஹிந்து கோவில்களை காக்க வேண்டிய ஹிந்து அறநிலையத் துறையோ, தீபத் துாணில் தீபம் ஏற்ற மறுத்து, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அநியாயம் உலகில் வேறு எங்கும் நடக்குமா?ஹிந்துக்களின் உண்டியல் பணத்தில் வயிறு வளர்க்கும் ஹிந்து அறநிலையத் துறை, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்க்கிறது.காரணம், சிறுபான்மையினர் ஓட்டு!தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு, பெரும்பான்மை மக்களின் மத உணர்வை காயப்படுத்துகிறது, தி.மு.க., அரசு.இத்தீர்ப்பை எந்த இஸ்லாமியரும் எதிர்க்கவில்லை; ஆனாலும், இஸ்லாமியர்களின் ஓட்டை பெறுவதற்காக, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது, தி.மு.க.,இப்படித்தான், சி.ஏ.ஏ., சட்டம் வந்தபோதும், சிறுபான்மையினரை துாண்டிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக போராட வைத்தது.சமீபத்தில் பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதாக கூறி ஒரு போராட்டத்தை நடத்தியது. அதன்பின், அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.என்னமோ இவர்கள் போராட்டம் நடத்தினால், இஸ்ரேல் ராணுவம் பயந்து தாக்குதலை நிறுத்தி விடும் என்பது போல், இங்கிருந்து இஸ்ரேலுக்கு எதிராக அறைகூவல் விடுத்தனர். இப்போது, அந்தகூவல் எங்கே போயிற்று என தெரியவில்லை!இவர்களது நோக்கம் இஸ்லாமியர்களை பாதுகாப்பது அல்ல; அவர்களது ஓட்டுகளை பெறவே இத்தனை நாடகங்களும்!சிறுபான்மையினர் ஓட்டு வங்கி என்று ஒன்று இருப்பதாக நம்பும் இவர்கள், ஹிந்துக்கள் ஓட்டு வங்கி என்று ஒன்று உருவானதாக தெரிந்து விட்டால், பெரும்பான்மை ஓட்டுகளை அறுவடை செய்ய, சிறுபான்மையினரை துாக்கி அடிக்க தயங்க மாட்டார்கள்!மரியாதையாக பேசுவரா? டாக்டர்.பொன்னு சேதுராஜ், காரைக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:- --- போக்குவரத்து தேவைக்காக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் நாடுவது அரசு பேருந்து தான். அதேநேரம், சில நடத்துநர்கள் பயணியரிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் மோசமாக உள்ளது. வயதானவர்களை கூட மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவது, ஏளனம் செய்வது, டிக்கெட்டுக்கு சரியான சில்லரை கொடுக்கவில்லை என்றால், பயணியரை இறக்கி விடுவது என்று அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று தான், சமீபத்தில், கர்ப்பிணி ஒருவர், கைக்குழந்தையுடன் திருப்புத்துார் செல்வதற்காக, நின்றிருந்த காரைக்குடி - மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உடனே நடத்துநர், 'பேருந்து எப்போது புறப்படுகிறதோ அப்போது தான் ஏற வேண்டும்' என்று கூறி, அவரை விரட்டாத குறையாக கீழே இறக்கி விட்டார். பேருந்து புறப்படும் நேரத்தில் கூட்டத்திற்குள் கைக்குழந்தையுடன் ஏற முடியாது என்று கருதி, நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தார், அப்பெண். இது ஒரு குற்றமா? ஏதோ நடத்துநரின் சொந்த வாகனத்தில் அத்துமீறி ஏறி அமர்ந்தது போல், கர்ப்பிணி என்றும் பாராமல், அடித்து துரத்துவது போல் கீழே இறக்கி விட்டது எந்த வகையில் நியாயம்? நடத்துநர்கள் பயணியரிடம் கண்ணியத்துடன், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசின் போக்குவரத்து விதி இருப்பது இவர்களுக்கு தெரியாதா? இன்னும் சிலர், சரியான சீருடை மற்றும் அடையாள அட்டை அணிவது இல்லை; பயணியர் சீட்டு மற்றும் லக்கேஜுக்காக வசூலிக்கும் கட்டணத்திற்கு டிக்கட் தருவதில்லை. அதிலும், சில ஓட்டுநர்கள் காதில் ப்ளூ டூத் வைத்து பாட்டு கேட்டபடி பேருந்து ஓட்டுகின்றனர். டிக்கெட் பரிசோதகர் களோ பயணியர் டிக்கெட் வாங்கியுள்ளனரா என்று சோதனை செய்வதுடன், தங்கள் பணி முடிந்தது என்று சென்று விடுகின்றனர். பேருந்து சரியான நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறதா, நடத்துநர், ஓட்டுநர் மரியாதையாக நடந்து கொள்கின்றனரா என்பது குறித்தும் டிக்கெட் பரிசோதகர்கள் பயணியரிடம் கேட்கலாம்! மேலும், அரசு விதிகளை பின்பற்றாத நடத்துநர், ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தவறுகள் களையப்படும்! தி.மு.க.,வின் கனவு பலிக்குமா? எஸ்.டி.ஸ்ரீனிவாசன், சென் னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் 2026 சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கு கொண்டாட்டத்தையே தரப்போகிறது. ஏனெனில், பா.ஜ.,வில், இருக்கும் திராவிட ஆதரவாளர்கள் பலர், தி.மு.க.,வின் ஸ்லீப்பர் செல்களாக இருந்து தமிழக பா.ஜ.,வை பலவீனப்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., குறித்து கேட்கவே வேண்டாம்... தி.மு.க.,வை வீழ்த்த நாங்கள் ஒன்றுபடவே மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்து, தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியிலோ, பாகப்பிரிவினையில் தந்தையும், மகனும் பங்காளிகளாக மாறி எவருக்கு கட்சி என்று அடித்துக் கொள்கின்றனர். நாம் தமிழர் கட்சி தன் பங்கிற்கு, எந்த கட்சியுடனும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை; நாங்கள் தனியாகவே நின்று டிபாசிட்டை இழப்போம் என்கிறது! அடுத்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்! அது, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., போன்ற எந்தக் கட்சிகளையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. என் வழி தனி வழி என்பது போல் தனி ரூட்டில் செல்கிறது. 'ஸ்டியரிங்' இல்லாத கார் போல் இஷ்டத்திற்கு செல்லும் த.வெ.க.,வை கண்டு, தி.மு.க., மிரண்டு போயுள்ளது. எங்கே அது போகும் வேகத்தில் தன்னை இடித்து தள்ளிவிட்டு போய் விடுமோ என்று உள்ளூர பயந்தாலும், த.வெ.க.,வால் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளே சிதறும்; ஆதரவு ஓட்டுகளும், கூட்டணி ஓட்டுகளும் ஆட்சியை காப்பாற்றி கொடுத்து விடும் என்று கனவு காண்கி றது. தமிழக அரசியல் நிலவரத்தைப் பார்த்தால், தி.மு.க.,வின் கனவு பலித்தாலும் ஆச்சரியமில்லை!