தி.மு.க.,வின் கின்னஸ் சாதனைங்க இது!
எஸ்.ஆர்.சுப்பு, நெல்லையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அந்த, 28 + 8 = 36 மாநிலங்களில், தமிழகம் என்ற ஒரு மாநிலத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும், மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் தி.மு,க., மட்டுமே தமிழகத்தின் மாநில மொழியான தமிழ் மொழியை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதோடு அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் அரசியல் கட்சிகளும் சீட்டுக்காகவும், ரேட்டுக்காகவும், தி.மு.க., இசைக்கும் தாளத்திற்கேற்ப தப்பாமல் நடனமாடி கொண்டிருக்கின்றன. ‘மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள் தான். தமிழ்மொழியை கண்டுபிடித்ததே நாங்கள் தான். தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள் தான் என்று ஊரை ஏமாற்ற உரக்க கூவும் கூட்டமே, எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும். இதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக் கண்ணான தி.மு.க.,’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் தமிழக முதல்வர் விஜய். ‘ஈ.வெ.ரா., பெயரை வைத்து கொள்ளை அடிப்பது தி.மு.க., என, த.வெ.க.,வின் முதல் மாநாட்டிலேயே தெரிவித்தேன். தி.மு.க., பற்றி நான் சொன்னது உண்மை என்பதை, அக்கட்சி மெய்ப்பித்து உள்ளது. ‘கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில், தி.மு.க., உயர் ரகம் என்பதும் தெரியவந்துள்ளது. ‘அந்த நுாலகத்தை பார்த்துப் பார்த்து கட்டியதாகத் தம்பட்டம் அடித்து கொள்ளும் தி.மு.க., தலைமை, நுால்கள் கொள்முதல் செய்ததிலும் பார்த்துப் பார்த்து ஊழல் செய்துள்ளதை, உலகமே பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது. ‘தி.மு.க.,ஆட்சியில், நகராட்சி துறை ஊழல், டாஸ்மாக் ஊழல், டெண்டர்களில் ஊழல், என ஒவ்வொரு துறையிலும், ஊழல் என மிகப்பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. ‘ஊழல் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள தி.மு.க.,வை தமிழகத்தின் வருங்கால தலைமுறை மன்னிக்கவே மன்னிக்காது. ‘ஈ.வெ.ரா., பெயரை வைத்தும், தமிழை வைத்தும், கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில், நிரந்தரமாக தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி’ என, தன் அறிக்கையின் வாயிலாக அரங்கேற்றி இருக்கிறார் முதல்வர் விஜய். தி.மு.க.,வினரை பொறுத்தமட்டில், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்’ என்று அவர்களது தலைவர் காலஞ்சென்ற கருணாநிதியே, உடன்பிறப்புக்களின் கல்யாண குணத்தை பாராட்டி புகழ்ந்து இருக்கிறார். ஈ.வெ.ரா.,வின் பேரனும், வடசென்னை தொகுதி, முன்னாள் எம்.பி.,யுமான, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, 1970களிலேயே, ‘பத்து சதவீத கமிஷன் அடிக்கலாம்; தப்பில்லை’ என்று நற்சான்றிதழ் வழங்கியவர். ஆக, ஊழல் என்பது கழக உடன் பிறப்புக்களின் மரபணுவிலேயே ஊடுருவி உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு சமாசாரம். தமிழை வைத்து, கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையும் தி.மு.க., ஒரு வரலாறாக நிகழ்த்தவில்லை. கின்னஸ் உலக சாதனைகளையே நிகழ்த்தி கொண்டுள்ளது.