இது உங்கள் இடம்: நவ. 22
அஞ்சல் துறை மறுபரிசீலனை செய்யுமா?
ரா.சாந்தகுமார், முதுநிலை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ( பணி நிறைவு), கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நம் நாட்டில் ராணுவம், ரயில்வே துறைகளுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டது, அஞ்சல் துறை. தற்போது, தகவல் தொடர்பில் கைபேசி, மின்னஞ்சல் என பல்வேறு மின்னணு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இன்னமும் மக்களின் குறிப்பாக, கிராமப்புற மக்களின் தகவல் தொடர்புக்கு அஞ்சலகங்களே முதன்மை ஆதாரமாக உள்ளன. நாட்டில் உள்ள மொத்த அஞ்சலகங்களில், 90 சதவீத அஞ்சலகங்கள் கிராமப்புறங்களில் தான் இயங்குகின்றன. வெறுமனே தகவல் தொடர்பு சேவை மட்டுமல்லாது, மக்களிடையே சிறுசேமிப்பை ஊக்கப்படுத்துவது; ஆயுள் காப்பீடு திட்டம், ஆதார் அட்டை தொடர்பான பணிகள் என, பல்வேறு நலத்திட்டங்களை அஞ்சலகங்கள் தான் மக்களுக்கு அளித்து வருகின்றன. இந்நிலையில், அஞ் சல் துறையை மறுசீரமைப்பு செய்ய அஞ்சல் துறை இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அஞ்சலகங்களின் எண்ணிக்கையை குறைப்பது; அஞ்சல் துறையில், மாநில அளவிலான ஓர் உயர் அதிகாரி பணியிடம், 15 உதவி கண்காணிப்பாளர்கள், 5 ஆய்வாளர்கள், 100 அஞ்சல் உதவியாளர்கள், 25 தபால்காரர்கள் மற்றும் 30 குரூப், ‘டி’ அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இப்பணியிடங்கள், அப்படியே பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதால், தற்போது பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், வேலைப்பளு அதிகரிப்பு, பதவி உயர்வு பெறுவதில் தாமதம் போன்ற சிரமங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். மேலும், தமிழக அஞ்சல் வட்டத்திலுள்ள பணியிடங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதால், அஞ்சல் துறையில் தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்து விடும். எனவே, அஞ்சல் துறை மறுசீரமைப்பை முன்னிட்டு, தமிழகத்தில் செய்யவிருக்கும் சீரமைப்பை மத்திய அரசு, அஞ்சல் துறை இயக்குனரகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்! lll ஆரோக்கியமே முக்கியம்!
எஸ்.செல்வசுப்பிரமணியன், பீளமேடு, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘கேக்’ வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஏனெனில், லட்சக்கணக்கில் கேக் செய்து, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப குறைந்தபட்சம், 10 நாட்களாவது தேவைப்படும். அப்போது, அந்த கேக்கின் தரம் குறைந்து விடும். அதற்கு பதிலாக, எளிதில் கெட்டுப் போகாத கடலை மிட்டாய் மற்றும் சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை வழங்கலாம். இது மாணவர்களுக்கு சத்து தருவதோடு, ஆரோக்கியமானதும் கூட! இனியாவது, இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மாணவர்களின் மகிழ்ச்சியை விட ஆரோக்கியமே முக்கியம்! lll