உள்ளூர் செய்திகள்

 இது உங்கள் இடம்

பீடிக்கும், ஊதுபத்திக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்!ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, பராசக்தி என்றொரு திரைப்படம் வெளியானது. இப்படத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தி.மு.க., பங்கேற்றது போலவே ஒரு போலி பிம்பத்தை காட்சிப்படுத்தியுள்ளனர், இத்திரைப்பட குழுவினர்.கடந்த 1937 ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்தபோது, சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணையிட்டார். அதே ராஜாஜி, 1965ல் தன் நி லைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.அதற்கு காரணமாக அவரே கொடுத்த விளக்கம்... 'அப்போது ஹிந்தி தேவைப்பட்டது; இப்போது தான் ஆங்கிலம் வந்து விட்டதே' என்று கூறி, 'சின்ன வயதில் போட்டுக் கொண்ட சட்டையை, இப்போதும் போட்டுக் கொள்ள முடியுமா?' என்று கேட்டு தன் மாறுபட்ட நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டார்.ஆனால், ஹிந்தி எதிர்ப்பு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது...ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பல வண்டிகள் கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்தது; பலர் மாண்டனர். திருப்பூரில் ஒரு போலீஸ் அதிகாரியை, வண்டியில் கட்டி வைத்து கொளுத்தினர்.அப்போது, 'காலிப்பயல்கள் கலாட்டா செய்கின்றனர்; அதை கையாலாகாத இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்களை சுட்டுத்தள்ள வேண்டாமா' என்று கூறியவர், ஈ.வெ.ராமசாமி.இதை, அப்படத்தில் கூறினரா? இல்லையே!அதேநேரம், இப்போராட்டத்தில் தமிழக காங்கிரசாரின் நிலைப்பாட்டை இப்படத்தில் காட்சிப்படுத்தவில்லை.கடந்த 1965ல் மத்திய அரசின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அழகேசனும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதை ஏன் படத்தில் கூறவில்லை?காங்கிரசாராவது இது குறித்து வெளியில் கூறினரா?காங்கிரசார் வந்த மாட்டை கட்டவும் மாட்டார்கள்; போன மாட்டை தேடவும் மாட்டார்கள். அதனால் தான் தமிழக காங்., தேய்ந்து சுருங்கி, இன்று தங்களை அழித்த கட்சியான தி.மு.க.,விடம் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறது.ஆனால், தி.மு.க.,வினர் கில்லாடிகள். நாட்டில் நடக்கும் அனைத்து நல்ல விஷயத்துக்கும், தங்கள் பெயரை அதில் ஸ்டிக்கர் ஒட்டி, களத்தில் ஆடாமலேயே வெற்றி வாகை சூட நினைப்பவர்கள்.சென்னையை ராஜாஜி மீட்டார்; திருத்தணியை மா.பொ.சிவஞானம் காப்பாற்றினார்; குமரி முனையை நேசமணி தக்க வைத்தார். இந்த வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து, தமிழகத்தை கட்டமைத்தவர் கருணாநிதி என்று கதை பரப்புகின்றனர். பொய் வரலாறுகள் பாடப்புத்தகங்களில் திணிக்கப்படுகிறது.அதுசரி... பீடிகளுக்கும், ஊதுபத்திகளுக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் இருக்கும் வரை கட்டுக்கதைகளுக்கு பஞ்சமேது!காங்., 'வடை'யை தவற விடுமா? வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------ வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி விஷயத்தில், தி.மு.க., மற்றும் பா.ஜ., மட்டும் தான் தெளிவாக உள்ளன. அதேபோன்று, இந்த இரு கட்சிகளிடம் தான் அதிகாரமும், பிரசாரத்திற்கான நிதி வசதியும் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை உட்கட்சி கட்டமைப்பு, பூத் முகவர்கள், மீடியாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பது, அடிமட்ட தொண்டன் வரை பணத்தை கொண்டு சேர்க்கும் கலை, தி.மு.க.,விடம் மட்டும் தான் உள்ளது. அதேநேரம், நிதி வசதி, பிரசார சாதனம் கைவசம் இருந்தாலும், அதை முறையாக பயன்படுத்த தெரியாத கட்சியாகவே தமிழக பா.ஜ., இருக்கிறது. இதற்கிடையில், பராமரிப்பு இல்லாத பங்களா போல் பாழடைந்து காணப்படுகிறது தமிழக காங்., கட்சி! இதன் காரணமாக அக் கட்சியை 'டீலா - நோ டீலா' என்ற நிலையில் தான், தி.மு.க., கையாள்கிறது. சமீபத்தில் புதுச்சேரியில் தேர்தல் கூட்டணி பேச்சுக்கு காங்.,கை அழைக்கவில்லை, தி.மு.க., காரணம், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கேட்டு நிர்ப்பந்திப்பதால், புதுச்சேரியில் காங்.,கிற்கு நெருக்கடி கொடுத்து, தமிழகத்தில் அக்கட்சியை பணிய வைக்க நினைக்கிறது, தி.மு.க., இது ஒரு மறைமுக மிரட்டல் தான்! நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என்று தமிழக காங்., கணக்கு போடுகிறது. ஆனால், அது வெறும் மனக்கணக்காவே போகும். ஏனெனில், விஜய்க்கு பின் இளைஞர் பட்டாளம் இருக்கிறது என்றாலும், கட்சி கட்டமைப்போ, சரியான தேர்தல் வியூகம் தெரிந்த அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களோ அவரிடம் இல்லை. எனவே, புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் எனில், காலதாமதம் இல்லாமல் கூட்டணி முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், அந்த இடத்தை பிடிக்க பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா தயாராக இருக்கின்றனர். அதனால், 'ஏசி' ரூமில் அமர்ந்து, வெறும் டேட்டாக்கள், மீடியாக்களை மட்டும் நம்பி, அரசியல் ஆருடம் சொல்பவர்களை புறம் தள்ளி, விரைவில் தி.மு.க.,வுடனான கூட்டணியை காங்., உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், பாட்டி வடை சுடும் கதையில் வரும் காகம் போல், கடைசியில், 'வடை போச்சே' என்று காங்., வருந்த வேண்டியிருக்கும்! அதிகாரம் உதவுமா? ரா.செந்தில்முருகன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க, அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள் முன்னால் சென்று கடவுளை தரிசிப்பது, தமிழக கோவில்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. உண்மையில், இவர்கள் பக்தியுடன் தான் கோவிலுக்கு வருகின்றனரா அல்லது தங்கள் அதிகாரத்தை காண்பிக்க வருகின்றனரா என்று தெரியவில்லை. அதிகாரம், பணம் எல்லாம் கடவுள் நமக்கு அளித்தது; அவருக்கு முன் நாம் மிகச்சிறியவர்கள் என்று உணர்ந்தால், இந்த பாவச்செயலை செய்யமாட்டார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்தர்களின் அடியை வணங்கி, கடவுளை அடைந்தனர். ஆனால், அதிகார பலம் படைத்தவர்களோ கடவுளை வணங்குகிறேன் என்ற பெயரில் வந்து, பாவமூட்டைகளை தங்கள் மீது ஏற்றிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களை திருத்திக் கொள்வது எப்போது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 13, 2026 06:52

இந்தப் ‘பணக்கார, உயர் பதவி’ பக்தர்களுக்காக விடிய விடிய வரிசையில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்படும் பக்தர்களை அவமதித்துப் பேசும் துறை அமைச்சரைப் பெற்றிருக்கும் இவர்கள் பயப்படுவார்கள் ? ஆணவம்தான் இவர்கள் கண்களை மறைக்கிறதே