இது உங்கள் இடம்
பகுத்தறிவு இல்லாத உடன்பிறப்புகள்!எஸ்.வந்தியதேவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட முன்னேற்ற கழகம் துவங்கிய நாள் முதலாக, அக்கட்சி தலைவர்களின் அகராதியிலேயே இல்லாத, 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற வார்த்தையையும், 'பகுத்தறிவு' என்ற கோஷத்தையும் உச்சரிக்காத நாள் இல்லை. ஆனால், உண்மையில் இவர்களது பகுத்தறிவு என்பது, பரமார்த்த குரு கதையில் வரும், 'அதிபுத்திசாலி' சீடர்களின் செயல்களைப் போன்று தான் உள்ளது. கடந்த 1993 ல் தி.மு.க.,விலிருந்து விலகிய வைகோ, 1994ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கினார். தேர்தல் கமிஷன் அக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கிய போது, உடன் பிறப்புகள் குடைகளை பயன்படுத்த மறுத்தனர். பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் பேசும்போது, திடீரென்று மழை வந்து விட்டால், கையில் குடை இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் சொட்டச் சொட்ட நனைந்தவாறுதான் பேச்சை கேட்பர். அந்த அளவு, 'பகுத்தறிவு' கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் உடன்பிறப்புகள்! அவ்வகையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது, 'விசில்' சின்னம் ஒதுக்கியுள்ளது, தேர்தல் கமிஷன். இவ்விபரம் வெளியானது தான் தாமதம், உடன்பிறப்புகள் தங்கள், 'அட்ராசிட்டி'யை ஆரம்பித்து விட்டனர். பொதுவாக, குப்பை சேகரிக்க செல்லும் துாய்மை பணியாளர்கள், தங்கள் வருகையை குடியிருப்புவாசிகளுக்கு தெரிவிக்க விசில் ஊதுவர். மக்களும் தங்கள் வீட்டு குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவர். இதுதான் வழக்கம். ஆனால், த.வெ.க.,விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க செல்லும் போது, விசில் ஊதக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளனராம், உடன்பிறப்புகள். என்னே கழகத்தின் பகுத்தறிவு? இனி, பேருந்துகளில் நடத்துநர்கள் எவரும் விசில் அடிக்கக் கூடாது; 'ரை ரைட்' என்று தான் கூற வேண்டும் என, தி.மு.க., அரசே உத்தரவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாலுடன் தண்ணீரை கலந்து வைத்தால், தண்ணீரை லாவகமாக ஒதுக்கி விட்டு, பாலை மட்டும் பருகுமாம், அன்னப் பறவை. ஐந்தறிவு கொண்ட இப்பறவைக்கு இருக்கும் பகுத்தறிவு கூட, அதை, தங்கள் கொள்கையாக கொண்ட கழகத்திடம் இல்லையே! கூட்டணியே வேண்டாம்... ப்ளீஸ்! என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.,வின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், போதை மற்றும் மது கலாசாரம், குடும்ப ஆட்சி, லஞ்ச லாவண்யம் போன்ற விஷயங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், தி.மு.க., அரசோ, தேர்தல் கால திட்டங்களை அறிவித்து, அதையே தன் சாதனையாக பறைசாற்றி வருகிறது. தங்கள் ஆட்சியில் ஏற்பட்ட பல அவலமான சம்பவங்களை மறக்கடிக்கும் விதமாக, அரசு கஜானா காலியாக இருந்த போதிலும், இலவச திட்டங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது, தி.மு.க., அரசு. இதில், 'நேர்மையான ஆட்சி கொடுப்போம்' என்று கூறும் கட்சிகள் கூட, தங்கள் வெற்றிக்காக, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுடன் கைகோர்த்து, தேர்தலுக்கு தயாராக நிற்கின்றன. பெரிதாக ஓட்டு வங்கி இல்லாத கட்சிகள் கூட, ஆட்சியில் பங்கும், தேர்தல் செலவிற்கு பணம் கறக்கும் பேரத்தில் காட்டும் அக்கறையை, மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகள் குறித்து பேசுவதில் காட்டுவதில்லை. மக்களும் தாங்கள் விரும்பும் கட்சி தனித்து போட்டியிடாமல் கூட்டணி வைப்பதால், தங்கள் தொகுதியில், தாங்கள் விரும்பாத கட்சி போட்டியிடும் போது, மனசாட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கொள்கை பிடிப்பில்லாமல், சந்தர்ப்பவாத அணுகுமுறையுடன், பேரத்தின் அடிப்படையில் கூட்டணி அமைப்பதால், ஜனநாயக சித்தாந்தங்கள் தேர்தல் களத்தில் முறியடிக்கப்பட்டு, தேர்தல் களம் ஒரு சூதாட்ட களமாக மாறி விடுகிறது. தேர்தல் மாண்பு குறையாமல் இருக்க வேண்டும் என்றால், கூட்டணி அமைப்பினால் விருப்பமில்லாத கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை செய்யாவிட்டால், ஜனநாயகம் ஒரு அலங்கோலமாக மாறுவதை, எவராலும் தடுக்க முடியாது! எப்போது முடிவு வரும்? விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பணிமனையிலிருந்து சென்னை மாநகருக்கு தினமும், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை அனைத்துமே, உணவிற்கா க விக்கிரவாண்டி நகரில் நிறுத்தப்படுகின்றன. அப்படி நிறுத்தப்படும் பேருந்துகள், குறிப்பிட்ட ஒரு ஹோட்டல் வாசலில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டுமாம்! அவ்வாறு நிறுத்தாமல், வேறு ஹோட்டல் முன் நிறுத்தினால், அந்த பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும், பணிமனை அதிகாரிகளால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம்! இந்த விபரம் அறியாத ஓர் ஓட்டுநரும், நடத்துநரும், வேறொரு ஹோட்டல் முன் பேருந்தை நிறுத்தி, சிக்கிக் கொண்டனராம். முதல் முறை என்பதால் அவர்களுக்கு, 100 ரூபாய் அபராதமாம். மீண்டும் அவ்வாறு செய்தால், கூடுதல் தண்டனை கிடைக்குமாம். அவர்கள் நிறுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் ஹோட்டலின் உணவுத் தரத்தை, உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்றாவது சோதித்து உள்ளனரா? புளித்துப் போன மாவில் தோசை சுட்டு, அதை, 75 ரூபாய்க்கு விற்கின்றனர். வாயில் வைக்க முடியாத அளவு, பல நேரங்களில் உணவின் தரம் உள்ளது. பசியில் இருக்கும் பயணியர், வேறு வழியில்லாமல் அதை வாங்கி சாப்பிட வேண்டியுள்ளது. அதிகாரிகள் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதற்கு, பயணியர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களின் உடல் நலம் தான் பலிகடாவாக வேண்டுமா? தேர்தல் கூட்டணி போல், போக்குவரத்துத் துறையும், ஹோட்டல்காரர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து 'கலெக் ஷன்' கூட்டணி வைத்துள்ளனர் போலும்! இவர்கள் லாபம் அடைய, அப்பாவிப் பயணியர் தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது! இதற்கெல்லாம் எப்போது தான் முடிவு வருமோ!