உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / டிரம்பின் எண்ணத்திற்கு ஆடும் இண்டி கூட்டணி

டிரம்பின் எண்ணத்திற்கு ஆடும் இண்டி கூட்டணி

வி.சுந்தரராஜ், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க, 30 நாட்கள் தற்காலிக விலக்கு வழங்கப்படுவதாக தெரிவித்து இருந்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.அதைத் தொடர்ந்து, 'இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா ஏன் அனுமதி வழங்க வேண்டும்?' என்று கேட்டுள்ளார், தி.மு.க., முதல்வர், ஸ்டாலின். பல ஆண்டுகளாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது; அமெரிக்கா அனுமதி கொடுத்ததால் தான் வாங்கியதா? கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போதும், இப்படித்தான், 'நான் சொல்லித் தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நின்றது' என்றார், டிரம்ப். அதற்கு மோடி ஏதாவது பதில் சொன்னாரா? டிரம்பின் ஆணவத்தனமான உளறலை அலட்சியம் செய்தார். அதேநேரம், பார்லிமென்ட்டில், 'பாகிஸ்தான் ராணுவ தளபதி கேட்டுக் கொண்டதால் தான், இந்தியா போரை நிறுத்தியதே தவிர, எவரது பேச்சையும் கேட்டு அல்ல' என்று ஒட்டு மொத்த இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகிற்கே பதில் சொன்னார். அப்போதும் கூட டிரம்ப் பெயரை பிரதமர் உச்சரிக்கவில்லை. அந்த ஆத்திரம் கொடுத்த உச்சமே, அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவிற்கான வரியை, 25 சதவீதமாக உயர்த்தியதுடன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்தியா மீது, 50 சதவீதம் வரியை உயர்த்துவேன், 200 சதவீதம் உயர்த்துவேன் என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார், டிரம்ப். அதை கண்டுகொள்ளாமல் மாற்றுத் திட்டங்களில் மோடி கவனம் செலுத்தினாரே தவிர, டிரம்பிற்கு பதில் அளிக்கவும் இல்லை; ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதையும் நிறுத்தவில்லை. மேலும், சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டு, எவருடைய அனுமதியோ, அதிகாரமோ இந்தியாவின் எந்த நடவடிக்கையையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை, ஒட்டுமொத்த உலகுக்கே தெளிவாக உணர்த்தி விட்டார், மோடி. இது, உலகிற்கே முன்னோடியாக ஆட்சி செலுத்தும் திராவிட மாடல் முதல்வருக்கு தெரியாதா? பா.ஜ., தலைவர் எவராவது ஒருவர், 'நாளை முதல் ஒரு வாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின், கட்சி வேட்டி அணியக் கூடாது' என்று அறிக்கை வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்... அப்படி அறிக்கை வெளியிட்டவரின் அனுமதியோடு தான், இதுவரை ஸ்டாலின் கட்சி வேட்டி அணிந்தாரா இல்லை பா.ஜ., தலைவர் அனுமதியோடு தான், நாளை முதல் கட்சி வேட்டி அணியப் போகிறாரா? இந்தியாவின் வளர்ச்சி டிரம்பிற்கு பிடிக்கவில்லை; தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவிற்குள் புரட்சியை ஏற்படுத்தி, அந்நாட்டு அதிபர் போதை பொருள் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டி, அவரை சிறையில் தள்ளி, தன் சொல்லுக்கு தலையாட்டும் ஒருவரை, அதிபர் நாற்காலியில் அமர வைத்ததுடன், அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கைக்குள் போட்டாகி விட்டது. ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் பேச்சு என்ற பெயரில், உக்ரைனின் கனிம வளங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாகி விட்டது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்து, அந்நாட்டு அரசின் நிர்வாகத்தை தேக்கமுற செய்து, மக்கள் புரட்சியை உருவாக்கி, இப்போது ஆட்சியை கவிழ்க்க யுத்தமும் செய்து வருகிறது, அமெரிக்கா. அதே வேலையை இந்தியாவிற்குள் செய்ய நினைக்கிறார், டிரம்ப். இதுபோன்று பேசுவதன் வாயிலாக எதிர்க்கட்சிகளையும், மக்களையும் துாண்டி, புரட்சி ஏற்படுத்தி மோடி அரசை கவிழ்த்தால், எளிதாக இந்தியாவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம்; உலக அளவில் மோடியின் செல்வாக்கும் ஆட்டம் கண்டுவிடும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்துகிறார், டிரம்ப். டிரம்பின் இந்த சூழ்ச்சிக்கு, 'இண்டி' கூட்டணியினர் துணை போகலாம்; மக்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்!

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துங்கள்!

ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வயிற்று வலி காரணமாக, என் மனைவியை சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்த்தோம். பலவித மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின், அவருக்கு கல்லீரல் முழுதும் செயல் இழந்து விட்டதாக கூறி, கல்லீரல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர், மருத்துவர்கள். அதேநேரம், மனித உறுப்புகள் வியாபாரமாக்குவதை தடுக்க, அரசு கடுமையான சட்டத்தை பின்பற்றுகிறது. அதனால், நோயாளியின் குடும்ப உறுப்பினர் எவராவது கல்லீரல் தருவதாக இருந்தால், நோயாளிக்கும், அவருக்குமான உறவு முறையை நிரூபிக்க வேண்டும். அப்போது தான், சட்ட சிக்கல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வர். உறவினர்கள் உறுப்பு தானம் தர முன்வரவில்லை எனில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நோயாளியின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மூளைச்சாவு அடைந்தவர்கள் வாயிலாக கல்லீரல் கிடைக்கும் வரை நோயாளி காத்திருக்க வேண்டும். வேறு வழியின்றி நாங்கள் ஓமந்துாரார் மருத்துவமனையில் பதிவு செய்து விட்டோம். என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, ஏற்கனவே, ஒருமுறை கல்லீரல் மாற்றுச் சிகிச்சை செய்து விட்டதால், அடுத்த முறை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டது. இதனால், என் மொத்த குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது. உடனடி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ள என் மனைவி போன்றோருக்கு, அரசு மருத்துவமனைகள் மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கலாம். அத்துடன், தனியார் மருத்துவமனைகள் போன்று, அரசு மருத்துவமனைகளில் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய போதுமான உபகரணங்கள் இருந்தால், என் போன்று நடுத்தர வர்க்கத்தினர் லட்சக்கணக்கான பணத்தை கடனாக வாங்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு கொட்டிக் கொடுக்கும் அவல நிலை ஏற்படாது. அரசு இலவசங்களை தருவதற்கு பதில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தினால் போதும்; மருத்துவ செலவுகள் செய்து, பல குடும்பங்கள் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வருவது நிற்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Radhika Venugopal
மார் 13, 2026 14:21

திரு சந்திரசேகர் அவர்களின் கூற்று முற்றிலும் சரியானதே, இந்த விஷயத்தை அரசு. சிறமேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க.வேண்டும் என்பதே என் போன்ற மக்களின் கருத்து


Anantharaman Srinivasan
மார் 12, 2026 19:14

அரசு மருத்துவமனைகள் தரம் உயர சூரியன் மேற்கே உதிக்கும் வரை வெயிட் பண்ண வேண்டும். அல்லது காமராஜர் போன்ற தன்நலம் கருதாத ஒருவர் முதல்வராக வரவேண்டும் .. இரண்டும் நடக்கப்போவதில்லை.


Natarajan Ramanathan
மார் 12, 2026 17:19

உடன் பிறந்தவர்களோ அல்லது உறவினர்களோ கல்லீரல் தானம் செய்ய முன்வராத போது அரசு மட்டும் எதற்காக காத்திருப்பவர்களை மீறி இவருக்கு மனிதாபிமானம் எல்லாம் பார்க்கவேண்டும்?


D.Ambujavalli
மார் 12, 2026 06:38

எப்படி….. ? தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகராக அரசு மருத்துவ மனையகளை தரம் உயர்த்த வேண்டுமா? பெரும்பாலான மருத்துவ மனைகளே அரசியல்வாதிகளின் சொத்தாக இருக்கையில், இவ்விதம் வசதி செய்து தன கையால் தன கண்ணைக் குத்திக்கொள்ள முன் வருவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை