மேலும் செய்திகள்
முகமூடி கிழிந்து விட்டது!
13-May-2026
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தோல்வியில் இருந்து பாடம் கற்பவர்கள் தான், எதிர்கால வெற்றியை தீர்மானிக்கின்றனர்' என்பது ஆன்றோர் வாக்கு! ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்தும், அதுகுறித்து சிறிதும் ஆராயாமல், '65 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர்' என்று, தி.மு.க.,வின் தோல்விக்கு, 'நற்சான்று' வழங்கியுள்ளார், அக்கட்சியின் இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில், 68 சதவீத ஓட்டு பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட, பா.ம.க., வேட்பாளரை, 69,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார், உதயநிதி. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க.,வின் கோட்டை என கூறப்படும் அதே சேப்பாக்கம் தொகுதியில், 45 சதவீத ஓட்டு பெற்று, வெறும், 7,140 ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் அதிருப்தி அடைந்த, 55 சதவீத மக்கள் உதயநிதியை வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், தன் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயாமல், வெற்றி பெற்றவருக்கு எத்தனை பேர் ஓட்டு போட்டுள்ளனர் என்று ஒப்பீடு செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், இவரது அறிவுத்திறனை என்னவென்று சொல்வது! lll 'ரியலா, ரீலா?' என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எவரும் எதிர்பார்க்காத வகையில், தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஆகிவிட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தயவில், மெஜாரிட்டியை நிரூபித்து விட்டார். இது தற்காலிக வெற்றி தான்! ஏனெனில், 'நாங்கள் இன்னும், தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம்' என்று விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் கூறுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம், எப்போது வேண்டுமானாலும் ஆதரவு விலக்கப்படும் என்பது! விஜயை ஐந்து ஆண்டுகள் ஆள விடுவதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒன்றும் ஏமாளி அல்ல; ஓராண்டோ, இரண்டு ஆண்டோ ஆளவிட்டு, பின், தன் கூட்டணி கட்சிகள் வாயிலாக ஆதரவை வாபஸ் வாங்க வைத்து, விஜய் ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்பார். ஒருவேளை, விஜயின் ஆட்சி நீடித்தால், தான் கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக விஜய் நிறைவேற்றும் பட்சத்தில் நிச்சயம் அவருக்கு பேரும், புகழும் அதிகரிக்கும்; அதேநேரம் ஸ்டாலினுக்கு கலக்கத்தை கொடுக்கும். மீண்டும் நாம் ஆட்சிக்கு வர முடியாமல் போய் விடுமோ என்று எண்ணி, த.வெ.க., ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இவற்றை எல்லாம் சமாளித்து, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது, விஜய், 'ரியல்' ஹீரோவா, 'ரீல்' ஹீரோவா என்பது! lll தி.மு.க.,வை மன்னிக்க மாட்டார்கள்! அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள, நடைபயணம் மேற்கொள்வது, வாடிக்கையாகி விட்டது. அவ்வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி நடைபயணம் கிளம்ப உள்ளார்; சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்ததால், இழந்த செல்வாக்கை மீட்கவே இந்த நடைபயணமாம்! கடந்த, 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப் போறாரு' என்று பாட்டு பாடியபடி நடைபயணம் கிளம்பினார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். நடைபயணத்தின் போது சந்திக்கும் மக்களிடம் எல்லாம், வாக்குறுதிகளை வள்ளல்போல் வாரி இறைத்ததுடன், தேர்தலுக்காக பல போலி வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அவற்றை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றினார். இதை, தி.மு.க., மறந்திருக்கலாம்; மக்கள் மறக்கவில்லைஎன்பதை, நடைபயணம்மேற்கொள்ளும் உதயநிதி நினைவில் கொள்வது நல்லது. ஏனெனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில், 'நீட்' தேர்வு ரத்து என்றும், நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தனக்கு தெரியும் என்றும் மந்திரவாதி போன்று, மேடைதோறும் ஒரு முட்டையை உதயநிதி காட்டியதையும் மக்கள் மறக்கவில்லை. அத்துடன், மாதந்தோறும் மின்சார கணக்கீடு, காஸ் மானியம், சிலிண்டருக்கு, 100 ரூபாய், கல்வி கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் என அள்ளிவிட்டதும், ஆட்சிக்கு வந்த பின், அது எதையும் கண்டு கொள்ளாமல், 'சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று கூறியும், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் விளக்கேற்றும் விவகாரத்தில், சண்டித்தனம் செய்ததையும் மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். அதனால், இன்றைய நிலையில் உதயநிதி நடைபயணம் அல்ல; குட்டிக்கரணமே போட்டாலும், தி.மு.க.,வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! lll நீதியின் பிடி இறுகுமா? மாம்பாக்கம் நாணா, செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024- - 25 ஆண்டுகளில் நடந்த உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், அப்புகாரை வழக்காக பதிய மறுத்து விட்டது, அப்போதைய தி.மு.க., அரசு. அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 'முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை' என்று நேரு தரப்பு வாதாடியபோது, 'நேருவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை; துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது' என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் வாயிலாக, முறைகேடு நடந்திருப்பது உறுதி என்றும், அந்த முறைகேட்டிற்குப் பின்னால் இருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதும் தெளிவாகிறது. கிட்டத்தட்ட, 2,500-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களை விலை பேசி விற்றது என்பது, தகுதியுள்ள இளைஞர்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். நேரு தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 'வழக்கை ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும்' என்றார். அதன்படி, ஜூன் மாதத்திற்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், நேருவின் மீதான நீதியின் பிடி இறுகுவது என்னவோ உறுதி! lll
13-May-2026