உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  மக்கள் காதில் விஜயும் பூ சுற்றுகிறார்!

 மக்கள் காதில் விஜயும் பூ சுற்றுகிறார்!

எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவரும், நடிகருமான விஜய், வரும் சட்டசபை தேர்தலில் ஜெயித்தால், அனைவருக்கும் இலவச வீடு, நிரந்தர மாத வருமானம் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நல்ல வாக்குறுதி; பாராட்ட வேண்டியது தான்! அதேநேரம், அவர் இத்தனை நாள் சம்பாதித்து வைத்துள்ள பணத்தை வைத்து, தமிழகத்தின், 5 சதவீத மக்களுக்கு கூட வீடு கட்ட முடியாது எனும்போது, மீதமுள்ள, 95 சதவீத மக்களுக்கு வீடு கட்ட நிதிக்கு என்ன செய்வார்? ஏற்கனவே, தி.மு.க., அரசின் மகளிர் இலவச பயணத் திட்டத்தால், போக்குவரத்து துறை நஷ்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதில், மகளிர் உரிமைத் தொகை, பள்ளி, கல்லுாரி மாணவியருக்கான உதவித் தொகை என்று மாதந்தோறும் பல நுாறு கோடி ரூபாய் விரயம் ஆவதால், தமிழக அரசின் கஜானா காலியாகி, மாநிலம் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை எதையும் மனதில் கொள்ளாது, சினிமாவில் ஒருவர், 10, 20 பேரை தனி ஆளாக அடித்து துவைப்பது போல், மனதிற்கு தோன்றுவதை எல்லாம் வாக்குறுதியாக அள்ளி வீசுயுள்ளார். விஜய். அனைவருக்கும் வீடு, நிரந்தர மாத வருமானம், இருசக்கர வாகனம் கிடைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளார்; அதை எப்படி செயல்படுத்த உள்ளார்; அத்திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து பெறுவார் என்பது குறித்தெல்லாம் விஜய் விளக்கி இருந்தால் கொஞ்சமாவது நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும்! அதை விடுத்து, 'மேகத்தை வில்லாக வளைப்பேன், வீட்டுக்கொரு ஏரோப்பிளேன் கொடுப்பேன்' என்பது போன்ற வாக்குறுதிகளை கொடுத்து, தமிழக மக்களின் காதுகளில் விஜய் பூ சுற்றலாமா? lll உதயநிதியின் குடும்ப நிதியை உயர்த்த நிதி கிடையாது! பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி வெறும், 150 கோடி ரூபாய்; ஆனால், செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு, 10 ஆண்டுகளில், 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் தமிழ் பாச நாடகம்' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், 18 சமஸ்கிருத பல்கலை உள்ளன. அதனால், அவற்றிற்கு, 2,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது, மத்திய அரசு. தமிழுக்கு எத்தனை பல்கலை உள்ளது, 2,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்க? தி.மு.க.,வினரால் மலையாளி என்று ஏகடியம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆராவது, தன்னை வாழ வைத்த தமிழகத்திற்கு நன்றிக் கடனாக, தஞ்சையில் தமிழ் பல் கலையை அமைத்தார். ஆனால், தன்னைத் தானே தமிழின தலைவர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதி, தமிழை வைத்து, தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டதை தவிர, தமிழுக்கு என்ன செய்துள்ளார்? கடந்த 2006 - 2014க்கு இடைப்பட்ட ஆட்சிக்காலத்தில், தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசு, தமிழுக்கென ஒதுக்கிய, வெறும், 75.05 கோடி ரூபாய் குறித்து, இப்போதைய, 'செங்கல்' உதயநிதி, வாயே திறக்கவில்லையே! அடுக்குத்தொடரில் ஆபாச வசனம் எழுதிவிட்டால், அது தமிழுக்கு செய்த தொண்டாகி விடுமா அல்லது பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி அலுவலக கட்டடங்களில் சிறு அட்டையில், 'தமிழ் வாழ்க' என்று எழுதி தொங்கவிட்டு விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா?தமிழை வைத்து பிழைப்பு நடத்தி, ஆறு முறை ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க., தமிழுக்காக ஏதேனும் ஒரு பல்கலை அமைத்துள்ளதா? இல்லாத பல்கலைக்கு நிதி கேட்க உதயநிதிக்கு வெட்கமாக இல்லையா? தமிழக மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குமாறு தி.மு.க., அரசை கேட்டுக் கொண்டாரே பிரதமர்... அதற்காக திராவிட மாடல் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தமிழக அரசு, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும் கடிதத்தை தமிழில் எழுதாவிட்டாலும் பரவாயில்லை; தாய் மொழியை மதித்து தமிழில் கையெழுத்திட்டு அனுப்புங்கள் என்று பிரதமர் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு திராவிட மாடல் அரசின் தமிழ் பற்று உள்ளது! குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட பிரதமர், தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் காரணமாக, தான் செல்லும் நாடுகளில் எல்லாம் தமிழின் சிறப்பையும், திருக்குறளின் உயர்வையும் பறைசாற்றுகிறார். தி.மு.க., என்ன செய்கிறது... திராவிட, 'மாடல்' என்று, 'தங்கிலீஷ்' பேசி தமிழ் வளர்க்கிறது! பிரதமர் தமிழுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார் உதயநிதி. காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார் மோடி. புதிய பார்லிமென்ட் கட்டட வளாகத்தில், தமிழ் மண்ணின் பெருமையை பேசும் செங்கோலை நிறுவியுள்ளார். இலங்கையில், 107 கோடி ரூபாயில் கலாசார மையம் நிறுவி, அதற்கு, 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டியுள்ளார். இது பிரதமர் தமிழுக்கு செய்த சேவையாக தெரியவில்லையா? தமிழ் வளர்ச்சிக்குத் தான் மத்திய அரசு நிதி தரும்; உதயநிதி தன் குடும்ப நிதியை உயர்த்துவதற்கு நிதி கேட்டால் எப்படி கிடைக்கும்? lll முதல்வருக்கு தெரியாதா? கா.கோவிந்தன், பெரிய குளத்தில் இருந்து எழுது கிறார்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் தள்ளி வைப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இரண்டு நீதிபதி கொண்ட அமர்வு, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்தது. இத்தீர்ப்பு கடும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார், ஜனாதிபதி. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வு, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசன சட்டத்தில் இடம் இல்லையென்று அறிவித்து விட்டது. ஆனால், கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். முதலைக்கு கடலும், குட்டையும் ஒன்றுதான்; அது எந்த இடத்தில் இருந்தாலும் தன் முட்டாள்தனமான மூர்க்கத்தனத்திலேயே இருக்குமாம்! அதுபோல், இதுவரை மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு அரசியல் செய்து வந்த முதல்வர், இப்போது, உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து கூறுகிறார். இத்தகைய செயல்பாடு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று முதல்வருக்கு தெரியாதா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை