உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே தேவை!

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே தேவை!

சி.காந்திமதி, பேராசிரியை, செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், நெல்லையில் மாணவன் ஒருவன் வகுப்பறையில், சக மாணவனை கத்தியால் குத்திய சம்பவத்தை கேட்டவுடன், ஓர் ஆசிரியராக அதிர்ந்து விட்டேன். புத்தகப் பையில் கத்தியை வைக்கும் அளவுக்கு அவனின் மனநிலை மாறியுள்ளது என்றால், இதற்கு யார் காரணம்? கேலிகளும், பட்டப் பெயர் வைத்து அழைப்பதும், சிறு சிறு சண்டைகளும் பள்ளிப் பருவத்தில் தொன்றுதொட்டு வருவது தானே... இதற்காக, ஒவ்வொரு மாணவனும், சக மாணவனை கொலை செய்ய துணிந்தால், மாணவர் சமூகம் என்னவாகும்? மாணவர்கள் எளிதாக கடந்து சென்ற இவ்விஷயங்கள், இன்று ஏன் கத்தியை துாக்க வைத்துள்ளன?பெற்றோரின் வளர்ப்பா, ஆசிரியர்களின் கவனக்குறைவா, சினிமா, தொலைக்காட்சியா என்று கேட்டால், அனைத்தும் தான் காரணம். நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்காத பெற்றோர், வகுப்பறையில் புத்தக அறிவை மட்டும் போதித்தால் போதும் என்று நகர்ந்து விடும் ஆசிரியர்கள், கேங்ஸ்டர் தான், 'கெத்து!' என்று, அடுத்த தலைமுறை குறித்து துளியும் அக்கறை இல்லாமல் எடுக்கப்படும் திரைப்படங்கள் என, இவர்கள் அனைவருமே இதில் குற்றவாளிகள் தான்! 'ஒழுக்கத்தை கற்றுத் தராத கல்வியைக் கற்பது வீண்' என்று சொல்வது எத்தனை சத்திய வார்த்தைகள்!அன்று, மாணவர்களின் மனதை செம்மைப்படுத்த, நீதிபோதனை வகுப்பும், மன இறுக்கத்தை தவிர்க்க விளையாட்டு வகுப்பும் இருந்தன.இன்று இவை இரண்டும் பெயரளவில் மட்டுமே உள்ளன. அவை முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதுடன், யோகா, என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., பயிற்சிகளை அளிப்பதுடன், 'கவுன்சிலிங்' அளிக்கப்பட வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே, மாணவர் மனதை செம்மை அடையச் செய்யும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது! 

எப்படி சரியாக பேசுவார்?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உடலில் குறைபாடு உடையவர்களை அருவருப்பான பெயர் கொண்டு அழைப்பதை தவிர்க்கவே, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என பெயரிட்டவர் கருணாநிதி. 'அவரால் வளர்க்கப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயர் கொண்டு அழைத்து, தவறு செய்து விட்டேன். அவர்களின் உள்ளம் புண்பட்டு இருக்கும். அதற்காக, நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன். மாற்றுத்திறனாளிகளின் பழைய பெயரான ஊனமுற்றோர் என்று உச்சரித்து இருந்தால்கூட, துரைமுருகன் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டு இருக்காது. அவர்களை கிண்டல், கேலி செய்யும் பெயரை உச்சரித்து விட்டு, இப்போது, 'கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படி பேசி விட்டேனே' என்று சமாளிக்கிறார்.கருணாநிதி என்ன பேச்சில் நாகரிகம் பார்ப்பவரா... கருப்பு நிறத்தில் இருந்த கர்மவீரர் காமராசரை, 'அண்டங்காக்கா' என கிண்டல் செய்தவர்தானே...எம்.ஜி.ஆர்., சிகிச்சை முடிந்து, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சமயம், அவரால் சரியாக பேச முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். அதற்காக சிறிதும் இரக்கம் கொள்ளாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியில், அவரது இயலாமையை ஏளனம் செய்வதுபோல், 'தமிழகத்தில் ஊமை ஆட்சிதான் நடக்கிறது' என்று விமர்சனம் செய்தவர் கருணாநிதி. இன்று, 'உடலில் குறைபாடு உள்ளவர்களுக்கு, கருணை உள்ளத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டினார் கருணாநிதி' என்கிறார், துரைமு-ருகன். 'ஊமை' எனும் சொல் எம்-.ஜி.ஆரை மட்டுமல்ல... வாய்பேச முடியாத அத்தனை பேரையும் குறிக்கிறது. கருணாநிதியின் கருணை உள்ளம் அப்போது எங்கே போனது?அன்று, 'ஊமை' என்று கிண்டல் செய்தார் கருணாநிதி; இன்று, 'நொண்டி' என்று கிண்டல் செய்துஉள்ளார், துரைமுருகன். கருணாநிதியே சரியில்லை எனும்போது, அவரால் வளர்ந்த இவர் மட்டும் எப்படி சரியாக இருப்பார்? சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதும், பின், மன்னிப்பு கேட்பதும் தி.மு.க.,வினரின் வழக்கமாக உள்ளது. 'தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்' எனும் எம்.ஜி.ஆர்., பாடலை, துரைமுருகன் உட்பட அனைத்து தி.மு.க.,வினரும் நினைவில் கொள்வது நல்லது!

சட்டம் வேறுபடுமா ?

பழ.சுந்தரமூர்த்தி, கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனை குறித்து, 'மாநில அரசின் அனுமதி இன்றி இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் இரவு நேரத்தில் துன்புறுத்தப்பட்டனர். 'எனவே, இச்சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்' என, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக, பள்ளிகளில் சோதனை செய்ய வரும் அதிகாரிகள், முன்கூட்டியே தேதியை அறிவித்து விடுவர். தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியர்களும் மாணவர் வருகை பதிவேடுகளையும், புத்தகங்களையும் முறையாக பராமரித்து நேர்த்தியாக வைத்திருப்பர்; வகுப்பறைகள் சுத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், சோதனைக்கு வரும் கல்வி அதிகாரிகள், பள்ளி குறித்து நற்சான்று அளித்து விட்டு செல்வர். அதுபோன்று அமலாக்கத்துறையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறதா திராவிட மாடல் அரசு? சோதனைக்கு முன், எல்லா தடயங்களையும் அழித்து, ஊழல் செய்த அதிகாரிகளையும், ஊழியர்களையும் காப்பாற்றத்தான் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்கிறதா அரசு? ஒவ்வொரு துறையிலும் இதுபோல் நடக்க ஆரம்பித்தால், எவர்தான் அதை கட்டுப்படுத்துவது? அரசு மற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் செய்யும் சட்ட விரோத பண பரிமாற்றத்தை எப்படி கண்டுபிடிப்பது, தடுப்பது? டாஸ்மாக் பணியாளர்களை குறிப்பாக பெண்களை இரவு நீண்ட நேரம் துன்புறுத்தி சோதனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். சோதனை என்று வந்துவிட்டால் நேரத்தை அறுதியிட முடியுமா?அப்படியெனில், திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரிடம், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி, மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய அங்கித் திவாரி என்பவரை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய தொடர்ந்து, 13 மணி நேரம் சோதனை நடத்தியது எப்படி?லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு சட்டம், அமலாக்கத்துறைக்கு ஒரு சட்டமா?மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 23, 2025 06:29

பள்ளி ஆய்வாளர் முன்னறிவிப்புடன் வரும்போது எந்த மாணவன்/ மாணவியை என்ன கேள்வி கேட்பது, என்ன பதில் சொல்ல வேண்டும் என்று சிலரைத் தயார்ப்படுத்தி வைப்பார்கள் அதுபோல நோட்டீஸ் கொடுத்து அமலாக்கத்துறை வருமாம், இவர்கள் நன்றாக 'ஒளிக்க வேண்டியதை ஒளித்து , அழிக்க வேண்டியதை அழித்து clean ரிப்போர்ட் வாங்குவார்களாம் அதை செய்யாத துறைமேல் வழக்குப் போடுவார்களாம் நல்ல மாடல், நல்ல கொள்கை


சமீபத்திய செய்தி