உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பயத்திற்கு காரணம் என்ன?

பயத்திற்கு காரணம் என்ன?

எஸ்.ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் செயல் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்' என, தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நம்மை ஆள நினைக்கும் அரசியல் கட்சி தலைமையும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளும் எவ்வளவு அறிவுஜீவிகள் என்பதையும், மக்களை அவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக உருவகப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்பதையும், இத்தீர்மானத்தின் வாயிலாக உணர முடிகிறது. வாக்காளர் பட்டியலில், இறந்து போனவர்களின் பெயர்களை நீக்க தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றமும், அதற்கு பச்சை கொடி காட்டி விட்டது. ஆனாலும் இவர்கள் எதிர்க்கின்றனர்; நீக்கக் கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர். மனித உடலில் உயிர் இருக்கும் வரைதான் அதற்கு மரியாதை. அந்த உயிர் பிரிந்து விட்டால், அதை சவம் என்று தான் அழைப்பர். பெயர் சொல்லிக் கூட விளிக்க மாட்டர். அப்படி சவமானவர்களின் பெயர்களைத் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்று, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் கூட்டம் போட்டு, தீர்மானம் போட்டுள்ளனர். திராவிட மாடல் முதல்வரின் தந்தை கருணாநிதியும், அவரது அண்ணன் முத்துவும் மரணமடைந்து விட்டனர். வரும், 2026 சட்டசபை தேர்தலில் அவர்கள் ஓட்டை யார் போடுவர்? தி.மு.க.,வுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? இறந்தவர்களின் ஓட்டுகளை எல்லாம் கபளீகரம் செய்ய முடியாமல் போய்விடுமே என்ற பயமா? பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் பன்னீர்செல்வம்! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:- ----------------------------------------------------------- வரும், 2026 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க.,வே வெற்றி பெறும் என்று மக்கள் பேசிக்கொள்வதாக திருவாய் மலர்ந்துள்ளார், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். 'தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்' என்ற மனோபாவத்தின் வெளிப்பாடு தான் இப்பேச்சு. பன்னீர்செல்வம் என்ற தனி மனிதருக்கு அடையாளம் கொடுத்து, அங்கீகாரம் அளித்து, அரியணையில் அமர்த்தி அழகு பார்த்த கட்சி, அ.தி.மு.க., பழனிசாமி எனும் தனிநபரின் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, நன்றி மறந்து, தனக்கு கட்சியில் இடமில்லை என்றால், அக்கட்சி இருந்தால் என்ன, அழிந்தால் என்ன என்று எண்ணும் நிலைக்கு துணிந்து விட்டார், பன்னீர்செல்வம். 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்கிறது திருக்குறள். எத்தகைய கொடும் பாவங்கள் செய்திருந்தாலும், அதற்கென்று ஒரு பரிகாரம் உண்டு. ஆனால், செய்நன்றி மறந்தவர்களின் செயல்களுக்கு பரிகாரம் என்பதே இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின், கட்சியில் பிரிவினை தலைதுாக்கியபோது, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால், பன்னீர்செல்வம் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். ஆனால், முதல்வர் கனவில் மிதந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 'ஸ்டாலினைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரிக்கிறார்; தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்' என்று குற்றம் சுமத்தி, முதல்வர் நாற்காலியிலிருந்து அவரை துாக்கவே, ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து, தர்ம யுத்தம் செய்வதாக கூறி, மக்களின் அனுதாபத்தைப் பெற முயன்றார், பன்னீர்செல்வம். இதனால் கோபமடைந்த சசிகலா, தன் காலில் விழும் பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தார். அதிர்ஷ்டம் வந்தால், அஷ்டமத்தில் பிறந்தவன் கூட அரசாள்வான் என்பது போல், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல, முதல்வர் நாற்காலியை இறுக பற்றிக் கொண்டதுடன், கட்சியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார் பழனிசாமி. இது, கட்சியின் சீனியர்களான செங்கோட்டையனுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் பிடிக்கவில்லை. அதனால்தான், தி.மு.க., ஜெயித்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க., தோற்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பதவியும், அதிகாரமும் இருந்தால் தான் கட்சி மீது விசுவாசம் வருமா? பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் இவர்கள் எப்படி கட்சியின் விசுவாசிகளாக இருக்க முடியும்? *** ராகுல் இத்தாலியில் குடியேறலாம்! எஸ்.ஜி.பிரபு, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ​'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் பெயரில், இந்திய முப்படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து, பயங்கரவாதிகளை அழித்தொழித்ததையும், பாகிஸ்தான் பயந்து போர் நிறுத்தத்திற்கு கெஞ்சியதையும், உலகமே அறியும். மேலும், பிரதமர் மோடியின் தலைமை பண்புகளால் இன்று, உலக நாடுகளிடையே இந்தியா புகழ் பெற்று இருப்பதையும் அனைவரும் அறிவர். ​ஆனால், காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலுக்கு, இதில் எப்போதும் சந்தேகம் தான். பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், முப்படைகளின் தளபதிகள் என எவர் விளக்கம் கொடுத்தாலும் அவரது தலைக்குள் ஏறுவதில்லை. நாட்டின் இறையாண்மை, ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமரியாதை செய்வது போலவே தொடர்ந்து பேசிவருகிறார். கடந்த ​2001ல் பார்லிமென்ட்டிலும், 2008 ல் மும்பையிலும் பயங்கரவாத தாக்குதல் நடந்த போது, எதிர் தாக்குதல் நடத்த திராணி அற்று இருந்தது தான், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. அதையெல்லாம் மறந்து, ​இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த எவரும் அழுத்தம் தரவில்லை என்று, பிரதமர் மோடி கூறியும், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆறு விமானங்களை நம் விமானப்படை சுட்டு வீழ்த்தியது என்று, நம் விமானப்படை தளபதி கூறியுள்ள போதும், ஆப்பரேஷன் சிந்துாரில், தன் குடும்பத்தினர் இறந்து போயினர் என்று பயங்கரவாதி மசூத் அசார் பேட்டி அளித்தும் கூட, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்தையே தொடர்ந்து மேற்கோள் காட்டி பேசி வருகிறார், ராகுல். ராகுலுக்கு இந்திய நாட்டின் இறையாண்மை மீதும், நம் ராணுவ வீரர்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்றால், அவர், தன் தந்தையின் தேசமான இந்தியாவை விட்டு, தன் தாயின் நாடான இத்தாலியில் குடியேறுவது உத்தமம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venkatesan Srinivasan
நவ 07, 2025 09:48

ராகுல் காந்தி, இந்தியாவின் எதிர்கட்சித் தலைவராக பேசவில்லை. இந்தியாவின் எதிரியாகவே மாறி பேசுகிறார். அவர் மோடி, பாஜகவை எதிர்த்து அவதூறு பேசியது போக இப்போது இந்திய இராணுவத்தையும் அவர்கள் பாதுகாப்பில் இருந்து கொண்டு அவதூறு பேசுகிறார். இந்திய இராணுவம் தன்னை அவதூறு செய்பவர்களை பொறுக்கலாகாது.


chennai sivakumar
நவ 07, 2025 09:22

காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இராசாசி செயல் பட்டதால் இன்று திராவிட கட்சிகளின் பிடியில் தமிழ் நாடு இருக்கிறது. அதே உத்தியை கடைபிடிக்கிறார் பன்னீர் அவர்கள்??


புதிய வீடியோ