டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
மதுரையில், த.வெ.க., மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர்
நடிகர் விஜய், '1967, 1977ல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்ததை
போல், 2026 தேர்தலிலும் வரலாறு திரும்பும்' என்றதுடன், 'நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்' என்று எம்.ஜி.ஆரின்
திரைப்பட பாடலை பாடி, தன்னை எம்.ஜி-.ஆரோடு ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், விஜய் ஒன்றை மறந்து விட்டார்... எம்.ஜி.ஆர்., சினிமாவில் என்ன சொன்னாரோ, அதை நடைமுறையில் செய்து காட்டினார். அதற்கு எத்தனையோ சம்பவங்களை கூறலாம். உதாரணமாக, இதயக்கனி திரைப்படத்தில் காபி தோட்ட முதலாளியாக நடித்த
எம்.ஜி.ஆர்., தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது, 'இந்தாண்டு, 7 லட்சம்
ரூபாய் லாபம் வந்துள்ளது; இதை நீங்கள் சமமாக பிரித்து எடுத்துக்
கொள்ளுங்கள்' என்பார். உடனே, அருகில் நின்றிருக்கும் நடிகர்
எஸ்.வி.சுப்பையா, 'முதலாளி வாழ்க' என்பார். 'அப்படி சொல்ல வேண்டாம்; இங்கு
தொழிலாளர்கள் தான் முதலாளிகள்' என்பார் எம்.ஜி.ஆர்., இந்த சினிமா
காட்சியைப் போலவே, நிஜத்திலும் தனக்கு சொந்தமான சத்யா ஸ்டூடியோவில் வந்த
லாபத்தொகையை, அதன் தொழிலாளர்களை சமபங்காக பிரித்து எடுத்துக் கொள்ளச்
சொல்லி, அதற்கான உரிமையையும் அவர்களுக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்., கடந்த 1976, ஜனவரி 31ல் அப்போதைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
ரகுராம ரெட்டி தான் அந்த ஒப்பந்த உரிமையை தொழிலாளர்களிடம் வழங்கினார்.
1987ல் எம்.ஜி.ஆர்., தன் இறுதி காலத்தில் சத்யா ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கு,
தன் சொந்த பணத்தில் குடும்ப நலநிதி வழங்க வந்தபோது, 'ஐயா... உங்களால்
நாங்கள் உயர்வடைந்தோம்; அது- போதும். இந்த பணம் எங்களுக்கு வேண்டாம்' என்று
கூறி, அதை வாங்க மறுத்து, அவர் காலில் விழுந்து, நன்றி பெருக்குடன்
கண்ணீர் விட்டனர். இப்படி சினிமாவில் சொன்னதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்த நடிகர், இந்திய சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவராவது உண்டா? சினிமாவில் பல நுாறு கோடி ரூபாய் சம்பாதிக்கும் நடிகர் விஜய், தன் வாழ்க்கையில் இதுபோன்று ஏதாவது ஒரு காரியத்தை செய்திருப்பாரா? வருமான வரி பாக்கியை நிலுவையில்லாமல் கட்டிய பின்தான், தமிழக அரசிடம்
கைநீட்டி சம்பளம் வாங்கினார், எம்.ஜி.ஆர்., ஆனால், வெளிநாட்டு காருக்கு வரி
செலுத்த முரண்டு பிடித்த விஜய், தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுவது காலத்தின்
கொடுமை! கடந்த 1984ல் சென்னை அண்ணா நகர் தொகுதியில் இடைத்தேர்தல்
நடந்தது. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இருந்த அ.தி.மு.க., தேர்தல்
அலுவலகத்திற்குள், சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உள்ளே
புகுந்ததால், அங்கு துாங்கிக் கொண்டிருந்த தொண்டர் ஒருவர் மரணம் அடைந்தார்.
துாக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி, நள்ளிரவில் நடந்த இந்த
விபத்து குறித்து கூறியுள்ளனர். உடனே விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை
பார்வையிட்டார். இறந்த தொண்டரின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது
வீட்டுக்கு வருவதற்குள், எம்.ஜி.ஆர்., அவரது வீட்டிற்கு சென்று, 25,000
ரூபாய் வழங்கி, அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதுபோல் தனக்காக உயிர்நீத்த தொண்டர்களின் வீடுகளுக்கு இதுவரை, நேரில் சென்று விஜய் ஆறுதல் சொன்னதுண்டா? உதவிகள் செய்ததுண்டா? மதுரை மாநாட்டில் கொடிக்கம்பம் சாய்ந்து, ஓர் இளைஞர் பலியானார். மகனை இழந்த அந்த பெற்றோருக்கு என்ன நியாயம் செய்தார் விஜய்? இவர், தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடலாமா? கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து ஆடியதாம்! அதுபோல், சினிமா நடிகர் என்பதை தவிர, எம்.ஜி.ஆரோடு தன்னை ஒப்பிட்டு பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது? மடியில் கனமில்லை என்றால் பயம் எதற்கு?
கு.காந்திராஜா, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில் கடிதம்: முன்பெல்லாம், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து பா.ஜ., வெற்றி பெறுகிறது' என்று, காங்., - எம்.பி., ராகுலும், தி.மு.க., போன்ற கூட்டணி கட்சியினரும் மூலைக்கு மூலை பேசி வந்தனர். இப்பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றதும், இப்போது, 'வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது; அதனால்தான், பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெறுகிறது' என்று புதிய கதைகளை சொல்ல ஆரம்பித்துள்ளார், ராகுல். உடனே ஸ்டாலினும் அதற்கு சப்பைக்கட்டு கட்டி அறிக்கை வெளியிடுகிறார். தேர்தலுக்கு முன்பே அனைத்து கட்சியினருக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்படுகின்றன; அவர்கள் வீடு வீடாக சென்று அதை சரிபார்க்கின்றனர்; புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இடம் மாறிச் சென்றோர், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இறுதியாக, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப் படுகின்றன. இது, ஒவ்வொரு தேர்தலின்போதும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இதில் எப்படி மோசடி நடக்க முடியும்? அப்படி ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலோ, வாக்காளர் பட்டியலிலோ மோசடி செய்து வெற்றி பெறுவது என்றால், பா.ஜ., கூட்டணி, 2019 தேர்தலை விட, 2024 தேர்தலில் ஏன் குறைவான எண்ணிக்கையில், 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது? 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை பெற்றிருக்கலாமே! தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் கூட, பா.ஜ., கூட்டணி, 350 - 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தானே கூறப்பட்டது? மேலும், மோசடி நடந்திருந்தால் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, 40 தொகுதிகளிலும் எப்படி தோல்வி அடைந்திருக்கும்? தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெற முடியும்? கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில், உ.பி.,யில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., பெரும் தோல்வியை சந்தித்தது; காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவில் பா.ஜ., கணிசமான வெற்றிகளை பெற்றது. இதுபோல் பல மாநில தேர்தல் முடிவுகளை சொல்லலாம்! எனவே, தேர்தல் மோசடி என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையே! ராகுல் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தேர்தல் கமிஷன் ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்து, அவை பொய்யானவை என நிரூபித்து உள்ளது. மேலும் தேர்தல் கமிஷன் கூறியபடி, ராகுல் தன் குற்றச் சாட்டுகளை எழுத்துப் பூர்வமாக அளிக்கவும் மறுத்துவிட்டார். மடியில் கனம் இல்லை என்றால், ராகுல் ஏன் பயப்பட வேண்டும்? எனவே, வாக்காளர் பட் டியல் மோசடியால்தான், பா.ஜ., வெற்றி பெற்றது என்று ராகுல் கூறுவது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்!