உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  நீதி துறைக்கு என்ன மரியாதை?

 நீதி துறைக்கு என்ன மரியாதை?

ஆர்.வேணுகோபாலன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டி விடுதலை வழங்கும் விவகாரங்களில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்' என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்தும், நிராகரிப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இவ்விவகாரம் தொடர்பான ஒன்பது வழக்குகளை, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, இளந்திரையன், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்தல் தொடர்பான விவகாரங்களில், அரசியலமைப்பு 161 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது, கவர்னர், அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவராவார். 'ஏற்கனவே, இவ்விவகாரத்தில், உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வும், ஐந்து நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வும் தெளிவுபடுத்திஉள்ளன' என்று குறிப் பிட்டுள்ளனர். சமீபத்தில் பார்லிமென்ட்டில் பேசிய ஒரு எம்.பி., 'கற்பழிப்பு குற்றவாளிகளுக்காக வாதாட வக்கீல்களும், அந்த குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பும் உள்ள வரை நாட்டில், பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது' என முழங்கி இருந்தார். இந்நிலையில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்ற நீதிபதிகளின் தீர்ப்பு அந்த எம்.பி.,யின் முழக்கத்தையே நினைவூட்டுகிறது. அரசியலமைப்பு பிரிவு 161ல் கோளாறு உள்ளதென்றால், அதை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அந்த கோளாறை வழிமொழியாக்க கூடாது. நல்லவேளை கவர்னர் ரவி தமிழகத்திலிருந்து தப்பி, மே.வங்கத்திற்கு சென்று விட்டார். இதே தீர்ப்பு தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், கவர்னர் ரவி இருக்கும் போது வெளிவந்திருந்தால், தி.மு.க., அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி, தமிழகத்தில் உள்ள அத்தனை சிறைச்சாலைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் அனைவரது தண்டனை காலத்தையும் குறைத்து, உடனடியாக விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, கவர்னரை திக்குமுக்காட வைத்திருப்பர். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த, 'நல்ல' காரியத்தை செய்யாமல் விட்டு விடுவரா என்ன? நீதிபதிகள் கொடுக்கும் தண்டனைகளையே அரசியல்வாதிகள், சட்டசபை தீர்மானங்கள் வாயிலாக பிசுபிசுக்க செய்து விடுவர் எனும் போது, இங்கு நீதி துறைக்கு என்ன மரியாதை?

உவப்பாக இருந்தால் ஓட்டு போடுங்கள்!

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பின், மகளிர் உரிமை தொகை, மகளிருக்கான இலவச பேருந்து பயணம் போன்ற இலவச திட்டங்களை மட்டும் நிறைவேற்றி, அதிலேயே முழு திருப்தி கொண்டுள்ளார். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தல் அறிக்கையிலும், 51 துறைகளில், 498 அறிவிப்புகளை கொடுத்து விட்டு, ஆட்சியை பிடித்து விட்டது போன்ற களிப்பில் மிதக்கிறார். ஒருவேளை மீண்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் என்ன நடக்கும்? கருணாநிதிக்கு கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்; அரசு கட்டடங்களுக்கு கருணாநிதி மற்றும் அவர் மனைவி தயாளு அம்மாள் பெயர்கள் சூட்டப்படும். அதுமட்டுமா... டாஸ்மாக் விற்பனை பெருகும்; கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை என்பது அரசியல்வாதிகளின் இன்னொரு தொழிலாகிவிடும். போதைக்கு அடிமையானவர்களால் குற்றங்கள் அதிகரிக்கும். ரவுடிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகளின் அராஜகத்தால், பொதுமக்களும், பெண்களும் அஞ்சி வாழ வேண்டும்; லாக்- -அப் மரணங்கள் பெருகும். விலைவாசி விண்ணை முட்டினாலும், உற்பத்தியை பெருக்கவோ, தொழில் துறையை முன்னேற்றவோ எந்த முயற்சியும் செய்யாமல், மத்திய அரசு மீது பழி போட்டு விட்டு, 'மிக்சர்' தின்று கொண்டிருப்பார், ஸ்டாலின். மேலும், மகளிர் உரிமை தொகை, 8,000 ரூபாய் கூப்பன் போன்ற இலவச திட்டங்களை நிறைவேற்ற மின்சார கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி, பதிவு கட்டணம் போன்று பல வரிகளை உயர்த்தி, மக்களின், 'பிளட் பிரஷரை' அதிகரிக்க வைப்பார். ஹிந்துக்கள் நிம்மதியாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. தற்போதைய ஆட்சியில், 200க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டது என்றால், அடுத்து ஆட்சி அமைந்தால், 500க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்படும். இவை எல்லாம் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஹிந்துக்களுக்கு உவப்பாக இருந்தால், தி.மு.க.,விற்கு ஓட்டு போடட்டும்!

அபூர்வ சிந்தாமணிகளா?

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியா குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த பார்லிமென்ட் தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க, காங்கிரஸ் தலைமையில், 'இண்டி' கூட்டணி தேர்தலை சந்தித்த போது, 'பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க கூடாது' என, கூட்டணி கட்சிகள் தடை போட்டன. அதற்கும் ஒப்புக்கொண்டு தேர்தலை சந்தித்தது, காங்., பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்க புறப்பட்ட கதையாக, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வடமாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியுமா? வடமாநிலத்தவர் குறித்து தி.மு.க.,வினர் பேசிய, 'மரியாதை' பேச்சுகள், இண்டி கூட்டணிக்கு இங்கே இடமில்லை என்று கூற வைத்து விட்டது. உடனே, 'கூட்டணிக்கு தலைவராக ராகுல் இருப்பதால் தான் தொடர்ந்து தோல்வி ஏற்படுகிறது' என்று கூறி, 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் கூட்டணி தலைவராக வேண்டும்' என்றும், 'மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் மத்திய அரசுக்கு சரியான போட்டியாக இருப்பார். அதனால் அவர் தான் கூட்டணி தலைவராக வேண்டும்' என்றும் கோஷம் எழுப்பி வருகின்றன, கூட்டணி கட்சிகள். இத்தனை அவமானப்பட்டும், தமிழக காங்கிரசாருக்கு கொஞ்சம் கூட வீராப்பு குறையவில்லை. காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், 'கோட்சேவின் தம்பிகள் ஆட்சி கட்டில் அமர வாய்ப்பில்லை' என்கிறார். பா.ஜ.,வினர் கோட்சேவின் தம்பிகள் என்றால், காங்கிரசார் ஆயிரம் சீக்கியர்களின் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிகளா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஏப் 06, 2026 12:12

அன்று இந்திரா அம்மையார் கூறியதுபோல் இது ஒரு ‘கிச்சடிக் கூட்டணிதான்’ என்று ஊசிப்போய் குப்பைக்குப் போகுமோ ?


veeramani
ஏப் 06, 2026 09:45

திரு மாணிக் தாக்குர் கூற்றிற்கு .... தில்லியில் சாஜ்ஜன் குமார் என மிக செல்வாக்குள்ள காங்கிரெஸ்க்காரர் இருந்தார். அவரின் புகழ் கரணம் சுமார் 2000சீக்கியர்களை கொன்றதனால்தான் . சாஜ்ஜன் குமாருக்கு கிழக்கு டெல்லியில் பார்லிமென்ட் பதவி கொடுத்தது இந்த காங்கிரெஸ் கட்சி


அரவழகன்
ஏப் 06, 2026 05:18

தேசிய அரசியலில் எதிர்கட்சிகளின் பலமாக பாலமாக விளங்கிய இண்டி கூட்டணி மாநிலத்துக்கு மாநிலம் தெரு நாய் போல் அடி மிதிப்படுவதை பார்த்தால் இனி காங்கிரஸ் கதி அதோ கதி தானா....?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை