மேலும் செய்திகள்
அக்கறையின் ரகசியம்!
21-Mar-2025
விட்டுக்கொடுத்தால் வெற்றி !
05-Apr-2025
ஆர்.வேங்கடவன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்தியில் ஆளும்
பா.ஜ., அரசு, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் படிப்பறிவு இல்லாதவர்களாக
வைத்திருக்க விரும்புகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கல்வி முறை
நசுக்கப்படுகிறது. தற்போது, டில்லியிலும் கல்வி முறையை அழிக்க
முயற்சிக்கின்றனர்' என, கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார், ஆம் ஆத்மி
கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்!மத்தியில்
மட்டுமல்ல... மாநிலங்களில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசுகள்
தாய்மொழியையும், தொடர்பு மொழி ஆங்கிலத்தையும் அத்துடன், மூன்றாவதாக ஓர்
இந்திய மொழியையும் கற்றுக்கொள்ள ஆலோசனை கூறுகிறது.தாய்மொழியை
படிக்க வேண்டும் என வலியுறுத்துவதும், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க
வேண்டும் என்று கூறுவதிலும் கல்வி எங்கே நசுக்கப்படுகிறது? ஒட்டுமொத்த
தமிழக மக்களையும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், மூடர்களாகவும்
வைத்திருக்க விழையும், ஒரு கட்சி உண்டு என்றால், உங்கள், 'இண்டியா'
கூட்டணியை சேர்ந்த தி.மு.க., தான்! கல்வியறிவு அற்றவர்களை
அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்ப்பதும், அக்கட்சி தான்... தற்போது,
அவர்களை பல்கலை வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் நியமிக்க திட்டம்
வகுத்துக் கொண்டிருக்கிறது.ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இருமொழிக்
கொள்கை என்ற திட்டத்தை வைத்து, படிப்பறிவு இல்லாதவர்களாக, முட்டாள்களாக,
மூடர்களாக வைத்திருக்க விழைவது பா.ஜ., அல்ல; தி.மு.க., தற்போது அதில், ஆம் ஆத்மியும் சேர்ந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, கெஜ்ரிவாலின் பேச்சு! ஊர் பெயர்களை யும் மாற்றலாமே!
தேவ்.பாண்டே, செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்வி நிறுவன பெயர்களில் உள்ள ஜாதியை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லை என்றால், அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்' என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஆங்கிலேயே அரசு நடத்திய கல்வி நிறுவனங்களை விட, தனியார் கல்வி நிறுவனங்களே அதிகம். இவை, இன்றளவும் தரமான கல்வியை அனைத்து ஜாதியினருக்கும் வழங்கி வருகின்றன.நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் துவக்க பள்ளி முதல் பல்கலை வரை துவங்கி, தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர்.கல்விக் கூடங்களை துவக்கிய அனைவருக்கும், பாமரனும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்ததே தவிர, ஜாதியை வளர்க்க நினைக்கவில்லை. இருப்பினும், பள்ளி மற்றும் கல்லுாரி பெயர்களில் உள்ள ஜாதி தான், மாணவர்களிடையே நிலவும் பிரச்னைகளுக்கு காரணம் எனில், வண்ணாரப்பேட்டை, முதலியார் குப்பம், உடையார்பாளையம், செங்குந்தபுரம், செட்டிப்புண்ணியம், பள்ளப்பட்டி, குறவர்புலம், ராவுத்தர்பாளையம், மரைக்காயர்பட்டினம் என, ஜாதியை தாங்கி நிற்கும் ஊர் பெயர்களையும் நீக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா? 'டிஸ்மிஸ்' செய்யுங்கள்!
டி.பாலநாகேந்திரன், உதவி பேராசிரியர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவம் - வைணவத்தை இழிவுபடுத்தி பேசிய பேச்சு, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் ஓர் அமைச்சர் என்ற எண்ணம் இல்லாமல், தெருப்பொறுக்கிபோல், மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். இவர் மட்டுமல்ல... தி.மு.க., தலைவர்கள் சிலர், தொடர்ந்து ஹிந்து மதத்தை கொச்சையாகவே பேசி வருகின்றனர். ஓட்டு வாங்கும்போது ஹிந்து மத நம்பிக்கையாளர்கள்போல் நடிப்பதும், ஜெயித்த பின், ஹிந்துக்களை கேவலமாக பேசுவதும் தான் இவர்களது வழக்கமாக உள்ளன. இதுபோன்று கிறிஸ்துவத்தையோ, இஸ்லாத்தையோ அவர்களால் பேச முடியுமா? எனவே, எத்தனையோ வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம், கோடான கோடி ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தியுள்ள இவரை ஏன் விசாரிக்க கூடாது?திராவிட மாடல் அரசு, இவர் பதவியை பறிக்காது. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகையால், நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ., பதவியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! சர்ச்சை பேச்சுகள் வேண்டாமே !
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவானவுடனே, எதிர்க்கட்சிகள், 'பொருந்தா கூட்டணி' என்று விமர்சிக்க துவங்கி விட்டன. இந்தியாவில் தேர்தலுக்காகத் தான் கூட்டணிகள் உருவாகின்றனவே தவிர, கொள்கைக்காக அல்ல! இதில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி மட்டும் விதிவிலக்கா என்ன? இன்று, அ.தி.மு.க.,வை விமர்சிக்கும் தி.மு.க., ஒரு காலத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கட்சி தானே!அதேநேரம், பிரதான கட்சியின் கூட்டணியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது இயல்பானது, அரசியலுக்காக செய்யப்படும் தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அதற்கு நேர் மாறாக, அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி எப்போது உறுதிபடுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து, இருகட்சி தொண்டர்களிடையே வார்த்தை போர் துவங்கி விட்டது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், 'நிர்பந்தத்தால், கட்சியை காப்பாற்றவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது; நம் இயக்கத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள், இதை தவறாக நினைக்க வேண்டாம். நாங்கள் என்றும் இஸ்லாமியர்களுக்கு துணை நிற்போம்' என்றார். இதைவிட அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், 'கட்சியை உடைக்கப் பார்த்ததால், கூட்டணி வைத்துள்ளோம்' என்று கூறி, அழுதே விட்டார். பதிலுக்கு, பா.ஜ.,வினர் சமூக வலைதளத்தில் அந்த முன்னாள் எம்.எல்.ஏ., குறித்து கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டனர். தி.மு.க.,வை வீழ்த்த களமிறங்கியுள்ளதாக கூறி, இப்படி முரண்பட்டு நின்றால் எப்படி ஓட்டுகளை அறுவடை செய்வர்? இருதரப்பினரும் மனஸ்தாபங்களை ஒதுக்கி வைத்து, தேர்தல் பணியாற்றினால்தான், வெற்றி கிடைக்கும். இல்லையென்றால், எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று, 'பொருந்தா கூட்டணி'ஆகிவிடும் என்பதை, மறந்து விட வேண்டாம்!
21-Mar-2025
05-Apr-2025