உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ராகுல் கையெழுத்திட்டது ஏன்?

ராகுல் கையெழுத்திட்டது ஏன்?

கண்ணன் திருமலை, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அதன்வாயிலாக, மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்து விட மாட்டோமா என்று துடிக்கிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.'ஓட்டு திருட்டு' என்று கூறினார்; ஆனால், பீஹார் சட்டசபை தேர்தலில், காங்.,கை அம்மாநிலத்திலிருந்து துடைத்து எறிந்து பதிலடி கொடுத்தனர், மக்கள்.ஆனாலும், பாடம் கற்காத ராகுல், எப்போதும் போல், தான் செல்லும் வெளிநாடுகளில் எல்லாம், மோடியின் அரசு, சிறுபான்மை மக்களின் எதிரி என்று கூப்பாடு போடுகிறார்.அந்தோ பரிதாபம்... அரேபிய - ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தம் நாட்டின் உயரிய விருதை மோடிக்கு அளித்து பெருமைப்படுத்தி, ராகுலின் முகத்தில் கரியை பூசுகின்றன.இப்படி மோடிக்கு எதிராக ராகுல் விடும் ஒவ்வொரு அம்பும் செயலிழந்து போகவே, இப்போது, பெண் எம்.பி.,களை வைத்து, பிரதமரை அவமானப்படுத்தும் அளவுக்கு துணிந் துள்ளார்.பார்லிமென்டில் பிரதமர் முன் சென்று வம்பு இழுத்து கூச்சலிட்டு, சபையின் மாண்பையும், மோடியின் கண்ணியத்தையும் சிதைக்க பின்னிய சூழ்ச்சி, தெய்வாதீனமாக முறியடிக்கப் பட்டுள்ளது.தங்கள் கேவலமான செயல் குறித்து மக்கள் பார்வைக்கு சென்றதும், ராகுலை பேசவிடுவதில்லை என்றும், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் அத்துமீறலில் மோடியின் நிலைப்பாடு குறித்து கேட்டு, ஜனநாயகத்தை காக்கவே பிரதமர் இருக்கையை நெருங்கியதாக காரணம் கூறுகிறார், காங்., - எம்.பி., சுதா.ஏன் தங்கள் இருக்கையில் இருந்தபடியே எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டியது தானே... பிரதமர் இருக்கை அருகே சென்று தான் எதிர்ப்பை காட்ட வேண்டுமா?ஜனநாயகத்தை காக்கவே இப்படி நடந்து கொண்டதாக கூறும் காங்கிரசார், கடந்த 2008ல் சோனியாவும், சீன அதிபரும் பின்நிற்க, சீனாவின் எந்த ஒப்பந்தத்தில் ராகுல் கையொப்பமிட்டார்? இது குறித்து ராகுல் ஏன் பேச மறுக்கிறார்?இக்கேள்விக்கு பதில் அளிப்பதும், ஜனநாயகத்தை காப்பது தானே!காங்கிரசார் பதில் கூறுவரா? -----

 ஆட்சியாளர்கள் யோசிக்க மாட்டார்களா?

மதி.சுவேதா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் காலிப்பணி இடங்களுக்கு, போட்டி தேர்வுகள் வாயிலாக பணியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். என்னை போன்ற பலர் கல்வி கடன் பெற்று படித்து, படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால், கிடைத்த வேலையை செய்தபடி போட்டி தேர்வுகளை எழுதி வருகிறோம். ஆனால், சமீபகாலமாக போட்டித் தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் உயர்ந்து வருகிறது. பணியின் தன்மைக்கேற்ப, ஒவ்வொரு தேர்விற்குமான விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் வரை உள்ளது. போதிய வருமானம் இல்லாத என்னை போன்றோர், 100, 200 ரூபாய்க்கே சிரமப்பட்டுதான் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, தேர்வு எழுதி வருகிறோம். இதில், 3,000 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி வருவதால், சில தேர்வுகளை எழுத தகுதி இருந்தும், பணமின்மையால் எழுத முடியவில்லை. இதுகுறித்து எந்த அரசியல்வாதிகளும் பேசுவதில்லையே ஏன்? ஒரு போட்டி தேர்வு எழுதக் கூட, பணம் தடையாக இருக்கும் போது, ஏழை பட்டதாரிகளின் வாழ்வில் எப்படி விடிவு வரும்? கல்வி கற்கத்தான் வங்கிகளில் கடன் வாங்கினோம் என்றால், இனி, போட்டி தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்கக் கூட கடன் வாங்க வேண்டும் போலிருக்கு! ஏழைகள் குறித்து ஆட்சியாளர்கள் யோசிக்கவே மாட்டார்களா?-----

அதிகாரிகளின் பேராசையால் பயணியருக்கு தண்டனையா?

க.சிவகுமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு பேருந்துகள் குறிப்பிட்ட சில உணவகத்தில் நிறுத்துவதால், தரமற்ற உணவுகளை உண்ண நேர்வதாக, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.அவரது குமுறல், 100 சதவீதம் உண்மைதான். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒரு பயணத்தின் போது, கட்டாயம் இதை அனுபவித்திருப்பர்.இந்த ேஹாட்டல்களின் உணவு பட்டியல் விலையை கேட்டால் தலை சுற்றும். தோசை ஆர்டர் செய்தால், 'ரோஸ்ட் தான் போடுவோம்' என்பர்; இட்லி வாங்க வேண்டும் என்றால், குறைந்தது நான்கு இட்லி வாங்கவேண்டும் என்பர்; டீ கேட்டால், ஒரு பேப்பர் கப்பில் பாதி கொடுத்துவிட்டு, 15 ரூபாய் கேட்பர்.பாக்கெட்டில் அடைத்து வைக்கப் பட்டுள்ள தின்பண்டங்களின் விலையோ, அரசு நிர்ணயித்துள்ள எம்.ஆர்.பி., ரேட்டை விட இருமடங்கு அதிகமாக இருக்கும்.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இந்த உணவகங்களில் நிகழும் அடாவடிகளை!கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள உணவகங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணிக்காக சென்றிருந்தேன்.அப்போது, ஓர் ஹோட்டல் உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, 'என்ன சார் செய்வது... எங்கள் உணவகம் இருக்கும் வழித்தடத்தில் செல்லும் நெடுந்துார பயண பேருந்துகள், ஓராண்டுக்கு எங்கள் உணவகத்தில் நின்று செல்ல, பேருந்து ஒன்றுக்கு, 10,000 ரூபாய் கொடுத்து, பஸ் டிப்போவில் முன்பதிவு செய்கிறோம். இதில், டிப்போ மேலாளர்களுக்கு தனியாக அன்பளிப்பு வேறு கொடுக்க வேண்டும்.'எத்தனை பேருந்துகளுக்கு பணம் கட்டி பதிவு செய்துள்ளோமோ, அத்தனை பேருந்துகளின் பதிவு எண்களையும், அப்பேருந்து வரும் நேரத்தையும் எங்களுக்கு கொடுத்து விடுவர், டிப்போ அதிகாரிகள். அதன்படி, ேஹாட்டலில், 10 முதல், 20 நிமிடங்கள் பேருந்தை நிறுத்தி செல்வர்.'இதில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவுடன் அவித்த முட்டை, ஆம்லெட்களும் இலவசமாக கொடுக்க வேண்டும்.'ரோந்து வாகன காவல் துறையினர், போக்குவரத்து அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் என்று பலருக்கு, உணவுடன் கப்பமும் கட்ட வேண்டும். இத்தனை செலவுகளை எப்படி சமாளிப்பது? பயணியர் மீது தான் திணிக்க வேண்டியுள்ளது...' என்று, அவர் தன் சோகக் கதையை கூறினார்.அரசு அதிகாரிகளின் பேராசைக்கு, பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் பணத்தை இழப்பதுடன், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.பலர் வாழ, ஒருவர் தன் வாழ்வை தியாகம் செய்யலாம்; இங்கோ, ஒரு சிலரின் பேராசைக்கு பலர் இரையாகின்றனர்!------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
பிப் 24, 2026 21:02

நெடுந்தூர பஸ் மார்கத்திலுள்ள ஹோட்டல்களின் அடாவடி வசூலை நிறுத்த ஒரு வழி. முடிந்தளவு இரவு பயணங்களை மேற்கொள்வது. இரவு புறப்படும் முன் சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்ப வேண்டும் சிரமம் பார்க்காமல் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட், flask ல் டீ அல்லது பால் கொண்டு சென்றால் செலவு மிச்சம். சுகாதார பிரச்னையுமில்லை.


veeramani
பிப் 24, 2026 10:06

தென் தமிழ்நாடு மதுரை வாசகர் கருத்து.. வடக்கு வாழ்கின்றது தெற்கு துவள்கிறது/ நடை பி னமாகிறது. தென் தமிழகம் ..விரைவில் சீனியர்கல் மட்டுமே வசிக்கும் ஒரு நிலமாக மாறிவிடும். இங்கு தாமிரபரணி மட்டும்தான் குடிநீர் சேவை ய்க்கு உள்ளது பல பகுதிகள் வானம் பார்த்த பகுதிகள் மழை இல்லையென்றால் பலர் பட்டினிதான். மதுரை சிவகங்கை ராம்நாடு திண்டுக்கல் தேனீ புதுகை விருதுநகர் மாவட்டங்களில்யிலான கிடையவே கிடையாது ஏனென்றால் பெரிய தொழில்சாலைகள் இல்லை. முன்பு இருந்த மதுரை கார்ட்ஸ் மூடியாகிவிட்டது கம்யூனினிஸ்ட்களின் களவாணித்தனத்தினால் ஸ்டெரிலைட் தொழிற்ச்சாலை பலரின் வற்புறுத்தலால் மூடப்பட்டது பின்னர் விவசாயம் தவிர வேறு தொழில் இல்லை. இதனால் யிலானார்கள் திருப்பூர் சோயாவை ஓசூர் சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம் .தென் தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம்வல்ல இறைவனை கும்பிடுவதுதவிர வெரி வழி தெரியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை