வழக்கு தொடுக்க மனம் வராதது ஏன்?
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்ற, 2015ல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரே நீதிமன்றத்தில் ஆஜராகி, 'சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு குழு அமைத்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை; குழு அமைத்தும் நடவடிக்கை இல்லை' என்று வாதாடியுள்ளார். விசாரணை முடிந்து வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம், 'ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடாக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, தமிழக அரசு செயல் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்' என்று பேட்டி அளித்துள்ளார். உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதேநேரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது போல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கேடாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வழக்கு தொடுக்காதது ஏன்? டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் ஆலைகளில் பெரும்பாலானவை தி.மு.க.,வினருக்கு சொந்தமானது என்பதால், கூட்டணி லாபத்தை மனதில் வைத்து, வழக்கு போடவில்லையோ? அதுசரி... டாஸ்மாக் வாயிலாக அரசுக்கு ஆண்டுதோறும், 50,000 கோடி ரூபாய் நேரடியான வருமானம் கிடைத்தாலும், மறுபுறம் ஆட்சியாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பல வழிகளில் மறைமுக வருமானம் கிடைக்கிறதே! இந்த வருமானத்தை எவர் தான் இழக்க விரும்புவர்? அதனால் தான், சீமைக்கருவேல மரங்களின் கேடுகளுக்காக வழக்கு தொடுக்க முடிந்த வைகோவால், மதுவின் கேடுகளுக்காக வழக்கு போட மனம் வரவில்லை போலும்! lll பி ம்பம் மறையும்போது கரைந் து போகும்! ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1972ல் தி.மு.க., பிளவுபட்டு அ.தி.மு.க., உருவானபோது, இந்திய அரசியலின், 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்ட காமராஜர் தீர்க்கதரிசனத்துடன் சொன்னார், 'இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று! அவர் சொல்லி, 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று, அ.தி.மு.க., தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக, தி.மு.க.,வில் இணைவதை பார்க்கும்போது, காமராஜர் அன்று சொன்னது வெறும் சொற்கள் அல்ல; அது, வரலாற்று உண்மை என்பது நிரூபணமாகிறது. ஆளுமை என்பதே அரசியலின் விதி; ஆனால், இந்திய அரசியல் என்பது, தனிமனித, 'ஈகோ'க்களால் உருவான கட்சிகளின் சிதைவுகளால் நிரம்பியுள்ளது. கடந்த 1969-ல் காங்கிரஸ் கட்சி, இந்திரா - காமராஜர் - தேசாய் காங்கிரசாக பிளவுற்றபோது, அதை ஒரு கொள்கை மோதல் என்றனர். உண்மையில், அது முன்னாள் பிரதமர் இந்திராவிற்கும், 'சிண்டிகேட்' தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப் போர்! காமராஜர், மொரார்ஜி தேசாய் ஆளுமையால் மட்டுமே இயங்கிய நிறுவன காங்., - தேசாய் காங்., அவர்கள் காலத்திற்குப் பின் காணாமல் போயின. தமிழகத்தில் திராவிட இயக்கம் என்பது, ஈ.வெ.ராமசாமியின் கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு என்ற கொள்கையை அடித்தளமாக கொண்டது. அண்ணாதுரையால் உருவாக்கப்பட்ட தி.மு.க., அவருக்குப் பின் கருணாநிதி, இப்போது ஸ்டாலின் என, மூன்று தலைமுறைகளைக் கடந்து, இன்றும் வலுவான ஒரு இயக்கமாக நிலைத்து நிற்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வோ எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட செல்வாக்கின்மீது கட்டமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., மற்றும் அவருக்குப் பின் ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகளின் நிழலில் மட்டுமே அக்கட்சி வாழ்ந்தது. கடந்த 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அந்த பிரமாண்டமான இடைவெளியை நிரப்ப ஆளுமை யான தலைமை இல்லைஎன்பதே நிதர்சனம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சிறந்த நிர்வாகிகளாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஆளுமைச் சின்னங்கள் அல்ல. தலைமை பலவீனமடையும்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் லாபக்கணக்குப் பார்க்கத் துவங்கி, அதிகாரம் இருக்கும் இடத்தை நோக்கி நகர்கின்றனர். அவ்வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் எனத் துவங்கி, இன்று பன்னீர்செல்வம் வரை அதிகாரத்தை நோக்கி நகரும் வரிசை நீள்கிறது. இவர்கள், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் ஆசியுடன், ஸ்டாலினை ஆதரிப்பதாகச் சொல்வது, ஓர் அரசியல் முரண்நகை. பா.ஜ., - காங்., - கம்யூ., - தி.மு.க., என எந்தக் கட்சியாக இருந்தாலும், தனிமனிதர்களைக் கடந்து ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்து நிற்கும் கட்சிகளே நீண்ட காலம் அரசியலில் நிலைத்து நிற்கும். அவ்வகையில், வைகோவின் ம.தி.மு.க., விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள், தனிமனிதர்களுக்காக எழுப்பப்பட்ட கற்சிலைகள்; கால ஓட்டத்தில் அக்கட்சிகள் தேய்வது தவிர்க்க முடியாதது! தனிமனித பிம்பங்களால் கட்டப்பட்ட இக்கட்சிகள், அந்த பிம்பம் மறையும்போது கரைந்து போவது நிச்சயம்! lll தனிமனித ஒழுக்கம் தேவை! ஜெயஸ்ரீ எம்.சாரி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆமதாபாதில் சமீபத்தில் நடைபெற்ற, 'டி-20' கிரிக்கெட் இறுதி போட்டியில், உலக கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன் தோழியும், காதலியுமான மஹிகா சர்மாவுடன் மைதானத்திலேயே அநாகரிமாக நடந்து கொண்டது, முகம் சுளிக்க வைத்துள்ளது. வெற்றி மிதப்பில் தன் நிலை மறந்தாரோ அல்லது தோழியிடம் கொண்ட மோகம், விளையாட்டு மோகத்தை மிஞ்சி விளையாடி விட்டதோ தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற சுயசிந்தனை இல்லாமல், மைதானத்தில் படுத்தும், உருண்டும், அணைத்தும் என்று அவர்கள் செய்த செயல், உண்மையில் முகம் சுளிக்க வைத்தது. மேலைநாட்டு கலாசார சீரழிவின் வெளிப்பாடு இது! இது இந்தியா என்பதும், இங்கு பொதுவெளியில் தனிமனித ஒழுக்கம் முக்கியம் என்பதையும், ஹர்திக் பாண்டியா போன்ற பிரபலங்கள் மனதில் கொள்ள வேண்டும்! lll