சிதம்பரம், அப்ரூவராக மாறுவது ஏன்?
எஸ்.சுந்தரலிங்கம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குள் பதுங்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற, 1984ல், 'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கைக்கு, அப்போதைய பிரதமர் இந்திரா உத்தரவிட்டது தவறானது' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம். 'பா.ஜ.,வின் குறைகளை சுட்டிக்காட்டாமல், 40 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை பேசுவது ஏன்?' என, காங்., மூத்த தலைவர்கள் பலர், சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர். காரணமில்லாமல், சிதம்பரம் இப்படி பேசுவாரா... அவர் மீது ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு மற்றும் ஏர்செல் மேக்சிஸ் போன்ற வழக்குகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. ஏறக்குறைய, 75 முறை ஜாமினுக்கு மேல் ஜாமின் வாங்கி, வழக்கை இழுத்தடித்து, சிறைக்கு செல்லாமல், 'டிமிக்கி' கொடுத்து வருகிறார், சிதம்பரம். இந்நிலையில் தான், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து பயன்படுத்தி வந்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்களை கடந்த ஆண்டு ஜூலை 1ல் மத்திய அரசு அமல்படுத்தியது. இப்புதிய சட்டங்களின்படி எந்தவொரு வழக்கும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்காது. அடிக்கடி வாய்தா வாங்கி தப்பிக்க முடியாது; குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது. அப்படியே வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினாலும் வழக்கு விசாரணை தடையின்றி நடந்து, தண்டனை வழங்கப்படும். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், 'பழைய சட்டங்களின்படி, 30 ஆண்டுகள் வரை தண்டனை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த வழக்குகளை, புதிய சட்டங்கள் அதை மாற்றும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளபடி, இனி, சிதம்பரம் தன் மீதுள்ள வழக்குகளுக்கு அவ்வளவு எளிதில் ஜாமின் பெற முடியாது. எனவே, தன் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சிறை வாசம் என்ற தண்டனையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில், 40 ஆண்டுகளுக்கும் முந்தைய பிரச்னைகளை பேசுவதன் வாயிலாக, 'அப்ரூவர்' ஆக முயன்று கொண்டிருக்கிறார், சிதம்பரம். ஆதாயமில்லாமல், சிதம்பரம் குடுமி ஆடாதே! lll தி.மு.க.,விற்கு உச்ச நீதிமன்றம் வைத்தது குட்டு! வெ.சீனிவாசன், திருச்சி யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, தி.மு.க., ஆட்சியில் ஹிந்து விரோதமும், சிறுபான்மையினரை தாஜா செய்தும் அரசியல் செய்வர். ஏதாவது பிரச்னை என்று வந்தால், சிறுபான்மையினர் பக்கமே தி.மு.க., சாயும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவ்வகையில், திருப்பரங்குன்றம் மலை வழக்கில், தி.மு.க.,வின் ஆதரவு நிலைப்பாட்டிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிலடி கொடுத்துள்ளது. இதேபோன்று, தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் மருத்துவமனையில், ஏழை - எளிய மக்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டதை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமிக்க உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, தமிழக அரசு. இக்கோரிக்கையை ஏற்க மறுத்து, கட்சிக்காரர்களை காப்பாற்ற தி.மு.க., எடுத்த முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது, உச்ச நீதிமன்றம். இந்நிலையில், 'கரூர், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தது குறித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கை விசாரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அவசர விசாரணை நடத்தியது ஏன், நான்கு மணி நேரத்தில், 41 உடல்கள் போஸ்ட் மார்ட்டம் என்பது எப்படி சாத்தியம்? ஏன் இத்தனை அவசரம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது, உச்ச நீதிமன்றம். விசாரணை குழுக்களில் தமக்கு வேண்டியவர்களை நியமனம் செய்து, தவறு செய்யும் கட்சிக்காரர்களை காப்பாற்றிவிட துடிக்கும், தி.மு.க.,வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டுகளே இவை! இதுபோன்ற பித்தலாட்டங்களை இனிமேலாவது தி.மு.க., கைவிட வேண்டும், இல்லையென்றால், மக்களே, தி.மு.க.,வை கைகழுவி விடுவர்! lll ஜாதி பெயரை நீக்குவதில் ஏன் இந்த முரண்பாடு? பொ.ருக்மணி தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒருபுறம் ஜாதி பெயர்கள் நீக்கம்; மறுபுறம் ஜாதி அடையாளத்துடன் பெயரிடுவது... இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ஏனென்றால், 'காலனி' என்பது தீண்டாமைக்கான வசைச்சொல்லாக இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து அந்த சொல்லை நீக்க வேண்டும். அத்துடன், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களையும் நீக்க வேண்டும் என்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அரசு பள்ளி - கல்லுாரி விடுதிகளை, 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கவும் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில், முத்துராமலிங்க தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு, பின், முத்துராமலிங்கனார் சாலை என்று பெயர் மாற்றியது. இப்படி ஒருபுறம் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடும் சமத்துவ நாயகனாகவும், சமூகநீதியை காப்பவராகவும் தன்னை கட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ் டாலின், கோவையில், 1,791 கோடி ரூபாயில், 10 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப் பட்டுள்ள கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலத்துக்கு, 'ஜி.டி.நாயுடு மேம்பாலம்' என ஜாதி பெயரை சூட்டியுள்ளார். அதேபோன்று, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா கல்வெட்டில், சிலையை திறந்து வைத்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பெயரில் உள்ள நாயுடுவுக்கும் தடையில்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? தமிழ் ஜாதிகளுக்கு மட்டும்தான் தமிழகத்தில் தடையா? ஜாதியை வைத்து அரசியல் செய்யும் இவர்களா ஜாதியை ஒழிக்கப் போகின்றனர்? இப்போது, சாலை மற்றும் தெருப்பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை மாற்ற முயற்சிப்பதே, அங்கெல்லாம் கருணாநிதியின் பெயரை வைப்பதற்காகத்தானே தவிர, ஜாதியை ஒழிக்க அல்ல! lll