உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எதற்கு ஓரணியில் தமிழ்நாடு?

எதற்கு ஓரணியில் தமிழ்நாடு?

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்று, வீடு வீடாக ஏறி இறங்கி, மக்களை தி.மு.க., உறுப்பினர் ஆக்கும் வேலையில் இறங்கியுள்ளது தி.மு.க., அரசு. இதற்கு, 'ஓரணியில் தமிழ்நாடு' என்று பெயராம்!உண்மையில், நல்லாட்சி கொடுத்திருந்தால், எதற்கு வீடு வீடாகப் போய் வாக்கு சேகரிக்க வேண்டும்? மக்களே தி.மு.க.,விற்கு வாக்களிப்பரே!ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இதில், 2 கோடிக்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்று உலக சாதனை புரிந்துள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி, 'தாய்க்கு வணக்கம்' எனும், 'தல்லிகி வந்தனம்' என்ற திட்டத்தின்படி, பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆண்டுக்கு, 15,000 ரூபாய், மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது குறித்த சந்திப்பு இது!இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், பெற்றோர்களே விருப்பப்பட்டு பள்ளியின் கட்டமைப்பிற்காக, 2,000 ரூபாய் கொடுத்து உதவுவது தான்!உதவி என்ற பெயரில் நிதியை மாணவர்களுக்கே நேரடியாகக் கொடுத்து வீணடிக்காமல், மாணவனின் தாயார் வங்கிக் கணக்கில் செலுத்தி, பெற்றோரின் நன்மதிப்பை பெற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு!ஆனால், தமிழகத்தில் அரசு கல்லுாரி மாணவ - மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகையை நேரடியாக வழங்குகிறது தி.மு.க., அரசு. இது மாணவர்களின் சொந்த செலவிற்குத்தான் பயன்படுமே தவிர, பெற்றோருக்கு போய்ச் சேராது.இதேபோன்று, பீஹாரில் கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி, ஆட்சிக்கு வந்ததும் மதுக் கடைகளை மூடினார், முதல்வர் நிதிஷ்குமார்.இதனால் ஏற்படும் நிதி இழப்பு குறித்து அவர் கவலைப்படவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மதுப்பழக்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக மட்டுமே கருதினார்.மதுக்கடைகளை மூடியதால் பீஹாரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடவில்லை. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் இறந்து போய்விடவில்லை. மாறாக பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.அதேநேரம், தமிழகத்தில் தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருந்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, நுாற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரப்படும் நலத் திட்டங்கள் எல்லாம், ஓட்டு வங்கியை குறி வைத்து கொண்டு வரப்படுகின்றனவே தவிர, மக்களின் வளர்ச்சிக்காக அல்ல.மக்களை கவர்வதற்காக தேவையற்ற இலவசங்களுக்கு நிதியை வீணடித்து விட்டு, மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்று பழியை மோடி அரசு மீது சுமத்தி, மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது தி.மு.க., அரசு!இதில், 'ஓரணியில் தமிழ்நாடாம்!' எதற்கு, இன்னும் ஊழல் செய்து, தமிழகத்தை திவாலாக்கவா? 

இனிக்கும் உருது கசக்கும் ஹிந்தி!

ஆர்.தர்மலிங்கம், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க.,வும், தமிழக மக்களும் நடத்தும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் கடந்து, மஹாராஷ்டிராவில் சூறாவளியாக சுழன்றடிக்கிறது. மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, பா.ஜ., இரண்டாவது முறையாக பின்வாங்கிஉள்ளது' என பெருமைப்பட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.அவரது பெருமையை பீஸ் பீஸாக கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ளார், உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த எம்.பி., சஞ்சய் ராவத்.'மஹாராஷ்டிராவில் துவக்கப் பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை தான் எதிர்க்கிறோம்; ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை. ஹிந்தி தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் ஹிந்தி பேச மாட்டார்கள்; எவரையும் பேசவும் விடமாட்டார்கள். 'ஆனால், நாங்கள் ஹிந்தி பேசுகிறோம், திரைப்படங்கள் பார்க்கிறோம், இசையை கேட்கிறோம். மேலும், மற்றவர்கள் ஹிந்தி பேசுவதை தடுத்ததும் கிடையாது. துவக்கப் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பதை தான் ஏற்க மறுக்கிறோம்' என்று கூறியுள்ளார் சஞ்சய் ராவத்.தேவையா முதல்வருக்கு இந்த அவமானம்? இந்திய மொழிகளில் ஒன்றான, ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தி, பம்மாத்து காட்டும்தி.மு.க., அயல் நாட்டு மொழியான உருது மொழியை எதிர்த்து, ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை என்பதுடன் உருது கற்பிக்க, பள்ளிகளையும் திறந்து வைத்து, அதற்கு ஆசிரியர்களையும் நியமித்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து போஷித்து வருகிறது.ஓட்டுக்காக உருது இனிக்கிறது; ஹிந்தி கசக்கிறது போலும்!தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் வரை தமிழர்கள் குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்!

ஆறுகளை துாய்மைப்படுத்துவரா?

ஜெ.மனோகரன், மதுரையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ளது, சியன் நதி. கழிவுநீர் கால்வாயாக ஓடிய இந்நதியை வெறும், 1,405 கோடி ரூபாய் செலவில் துாய்மைப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துஉள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருகாலத்தில், உள்நாட்டு போக்குவரத்திற்கு பயன்பட்ட இந்நதி, தொழிற்சாலை மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நாட்டின் மிகப்பெரிய சாக்கடையாக மாறியது. இந்நிலையில், 1923ல் இந்நதியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின், 1990ல் சியன் நதியை துாய்மைப்படுத்த ஓர் இயக்கம் ஏற்படுத்தப்பட்டு, தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவுகள் நதியில் கலப்பது தடுக்கப்பட்டது. பின், படிப்படியாக சீரமைக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, மக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தாமிரபரணி, வைகை உள்ளிட்ட பல ஆறுகள் மாசடைந்து காணப்படுகின்றன. வெகு விரைவில் அவையும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, பிரான்ஸ் நாட்டை பின்பற்றி மத்திய - மாநில அரசுகள் தனியார் பங்களிப்புடன் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, நதிகளை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாட்டுக்கே, ஆற்றை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு, 1,405 கோடி ரூபாய் தான் செலவு ஆகியுள்ளது என்றால், தமிழகம் போன்ற மாநிலத்திற்கு நிச்சயம் செலவு குறைவாகத் தான் இருக்கும். எனவே, மத்திய - மாநில அரசுகள் தமிழக ஆறுகளை துாய்மைப்படுத்தும் திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 16, 2025 17:00

France நாட்டில், ஒதுக்கப்படும் நிதியில் பாதி அமுக்கப்படும் நிதி ஆகாது போலும் அதனால் இந்த தொகைக்குள் முடிந்தது நம் நாடு… தமிழகம், நினைத்துக்கூடப் பார்க்க முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை