உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அழுது துடித்தது ஏன்?

அழுது துடித்தது ஏன்?

பொ.ருக்மணி தேவி, பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது வராத மத்திய நிதியமைச்சர், இப்போது கரூருக்கு மட்டும் வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழுவை அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் அனுப்புகின்றனர். அதற்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை காரணம் அல்ல; அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்கின்றனர்' என்று கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது. கடந்த ஆண்டு தென்மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து, மக்கள் பாதிக்கப்பட்ட போது, அம்மக்களை பார்க்காமல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக, முதல்வர் டில்லி சென்றதை மறந்து விட்டாரா? சமீபத்தில், எண்ணுார் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளர்கள், 9 பேர் உயிரிழந்தனர். அவர்களை பார்க்க முதல்வர் செல்லவில்லை. அங்கு சென்ற அமைச்சர் சிவசங்கர் கண்ணீர் விட்டு கதறவும் இல்லையே ஏன்? அவர்களுக்கு ஓட்டு இல்லை என்பதாலா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் இறந்தனர். அப்போது முதல்வர் கள்ளக்குறிச்சி செல்லவும் இல்லை; எந்த அமைச்சரும் கண்ணீர் விட்டு துடிக்கவும் இல்லையே... ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றனரே... அவர்கள் குடும்பத்தை ஒருமுறையேனும் முதல்வர் சந்தித்தது உண்டா, இல்லை எந்த அமைச்சராவது அவர்களின் நிலைமையை கண்டு கண்ணீர் விட்டது உண்டா? மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனரே... அவர்களை பார்க்க முதல்வர் சென்றாரா, அமைச்சர்கள் தான் கண்ணீர் விட்டு அழுதனரா? இப்படி எதையும் கண்டுகொள்ளாத முதல்வர், கரூருக்கு மட்டும் இரவோடு இரவாக சென்றது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் அழுது துடித்தது எதற்கு? இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறதே... அதற்காகத் தானே இந்த அக்கறை? மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா? நீங்கள் செய்தால் இரக்கம், கருணை; மத்திய அரசு செய்தால் அரசியலா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை