உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பிரேமலதாவின் ஆசை நிறைவேறுமா?

பிரேமலதாவின் ஆசை நிறைவேறுமா?

எஸ்.ஆர்.கவுதமன், சிவகங்கையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில் மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் பெரும்பாலும் முதல்வர் கனவில் மிதப்பதில்லை. அவர்களுடைய வேலையை மட்டும் பார்க்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், ஓரிரு படங்களில் நடித்த உடனேயே, அவர்கள் மனதில் முதல்வர் கனவு கொழுந்து விட்டு எரிய துவங்கி விடுகிறது.அவ்வகையில் தற்போது, முதல்வர் கனவிற்குள் இழுத்து விடப்பட்டிருப்பவர் மறைந்த நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!'சண்முக பாண்டியனை தொடர்ந்து படங்களில் நடிக்க வைத்தால், அதன் வாயிலாக, தே.மு.தி.க.,வுக்கு விளம்பரம் கிடைக்கும். மக்கள் மத்தியில், கட்சி மீண்டும் எழுச்சி பெறும். பிற்காலத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலராகவும் அவரை நியமிக்கலாம்...' என, பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அதற்கு, 'சண்முக பாண்டியனை வைத்து தொடர்ந்து படம் எடுக்கவும், வெளியிடவும், நிர்வாகிகள் உதவ வேண்டும்' என, பிரேமலதா கேட்டுள்ளாராம்.சண்முக பாண்டியன் ஒன்றும் விஜயகாந்த் அல்லவே!தி.மு.க.,வில் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் பிரச்னை ஏற்பட்டபோது, கருணாநிதிக்கும் இது போன்றதொரு ஆசை துளிர்விட்டு எழுந்தது.தன் மூத்த மகன் மு.க.முத்துவை வைத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் மற்றும் அணையா விளக்கு என்று நான்கு படங்களை தயாரிக்க வைத்து வெளியிட வைத்தார்.இதில், அணையா விளக்கு படத்தில், மு.க.முத்து, ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.ஆனாலும், அவர் நடித்த படங்கள் வெளியான தியேட்டர்கள் காற்று வாங்கியது தான் மிச்சம்!புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, எம்.ஜி.ஆரை., ஓரங்கட்ட நினைத்து, தன் மகனை நடிக்க வைத்த கருணாநிதியின் ஆசை நிராசையானது!அதுபோன்று, பிரேமலதாவின் ஆசைக்கு எத்தனை ஆண்டு ஆயுள் என்பது, இன்னும் ஒரு சில படங்களில் தெரிந்துவிடும்!

பத்தும் பக்கத்தில் கூட வராது!

ஜி.கே.இனியன், கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து, தொகுதி நிலவரம் குறித்தும், எவர் எவ்வளவு செலவு செய்ய தயாராக இருப்பர் என்பது குறித்தும் கருத்து கேட்டுள்ளார், ஸ்டாலின்.அத்துடன், 'கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்போடு செயல்படவேண்டும். இதற்காக, கட்சி தலைமை மற்றும் ஆட்சி நிர்வாகம் வாயிலாக என்ன கேட்டாலும் செய்து தருகிறேன்...' என உறுதி அளித்துள்ளார்.அதற்கு, 'நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது மாற்றுக் கட்சிகளிலிருந்து ஓடி வருவோருக்கு, 'சீட்' கொடுக்காமல் கட்சிக்காக உழைப்பவருக்கு கொடுக்க வேண்டும்' என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவர்கள் இப்படி கூறக் காரணம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாவட்ட செயலர் ஒருவர் துண்டு போட்டு வைத்துஉள்ளார். அதேநேரம், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் குடும்பத்தோடு தி.மு.க.,விற்கு தாவி விட்டார்.அவர் மகனுக்கு மாவட்ட அளவில் கட்சி பதவி; மகளுக்கு பேரூராட்சி தலைவர் பதவி. இவரும் கவுண்டம்பாளையம் தொகுதி மீது கண் வைத்துள்ளார்.இதற்கு காரணம் மண்டலப் பொறுப்பாளரான, 'கரூர்'காரரின் ஜாதி பாசம்! இதுமட்டுமல்ல... கோவை எம்.பி.,யாக தற்போது இருப்பவர், அ.தி.மு.க.,வில் மேயர் பதவியை அனுபவித்துவிட்டு, 'கரூர்'காரரின் தயவால் தி.மு.க.,விற்கு தாவி மாவட்ட பொறுப்பு பெற்று, எம்.பி., சீட் வாங்கி பதவிக்கும் வந்துவிட்டார். இவரும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். இப்படி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி என்றால், கட்சிக்காக உழைக்கும் பிற சமூகத்தவருக்கு என்ன பலன்? அதனால்தான், வெளியிலிருந்து வருவோரை வேட்பாளர்கள் ஆக்கவேண்டாம் என்ற குரல் எழுந்துள்ளது.இதில், வட்டச்செயலர்கள் ஒரு கோஷ்டி, மன்ற உறுப்பினர்கள் ஒரு கோஷ்டி என்று ஒருபக்கம் அடிதடி என்றால், மறுபுறம் சொத்து வரி, குப்பை, தண்ணீர் வரி என்று மக்களின் மீது அதீத சுமைகள்.சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பு இல்லை.இவற்றை எல்லாம், மக்கள் மனதில் வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதையெல்லாம் மறந்துவிட்டு கோவையில், 10 தொகுதியையும் கைப்பற்றுவோம் என்கின்றனர். கட்சி தொண்டனுக்கு உதவி என்றால் கூட, உதறி விட்டுப் போகும் நிர்வாகிகள் உள்ளவரை, தி.மு.க., எட்டாக்கனியை பார்த்து கொட்டாவி விட்ட நரியைப் போல் தான், கோவையில், 10 தொகுதிகளை வெல்ல நினைப்பது!

முதல்வர் சிந்திக்க மாட்டாரா?

கே.சி.ரவிச்சந்திரன், சிதம்பரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழகம் என்று அடிக்கடி சிலாகித்துக் கொள்கிறார் தமிழக முதல்வர். ஆனால், உண்மை என்ன என்று அனுபவிக்கும் மக்களுக்குத் தான் தெரியும். என் மனைவி, சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரிந்து கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுதிய பலன்கள், 16 மாதங்கள் ஆகியும் வரவில்லை.முதல்வரின் முகவரிக்கு, ஆன்லைனில் புகார் செய்தோம். ஆனால், அப்புகாரை சம்பந்தமே இல்லாமல் கடலுார் அரசு பெரியார் கல்லுாரிக்கு அனுப்பி விட்டனர். அங்கிருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் விஷயத்தை சொல்லவே, புகார் மனு மீண்டும் சம்பந்தமே இல்லாத மற்றொரு துறைக்கு அனுப்பப்பட்டது.திரும்பவும் ஒருமுறை மனு செய்தோம். அது, கடலுார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்!வெறுத்துப்போய், பிரதமர் பொது குறைதீர்ப்பு மையத்தில் புகார் செய்தோம். பிரதமர் அலுவலகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பினர். ஒரு பலனும் இல்லை. கேட்டால், பணம் இல்லை என்று சொல்லி விட்டனர்.பின், பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பினோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன்பின் தான், 'பென்ஷன்' வருகிறது.மற்ற ஒய்வூதிய பலன்கள் எதுவும் வரவில்லை. இதுதான், திராவிட மாடல் ஆட்சியாளர்களின் நிர்வாக திறன்!கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியருக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை என்றால், எப்படி அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது?இது குறித்து முதல்வர் சிந்திக்க மாட்டாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 23, 2025 18:39

‘கும்பி கூழுக்கு அழுததாம், கொண்டை பூவுக்கு அழுததாம் ‘ என்பார்கள் சாமானியன் 35 ஆண்டு உழைத்துக் கொட்டிவிட்டு ஓய்வுஊதியத்தில் காலத்தை ஓட்ட எண்ணினால் அதற்கு நிதி இருக்காது ஆனால் நாறும் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்க்கு வண்ணத்துணி கொண்டு மூட லட்சங்கள் கிடைக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியைக்காணோம் என்று மூக்கால் அழுகிறார்களாம், இவர்கள் ஒய்வு பெற்றவர்களையா கவனத்தில் வைப்பார்கள் ?


புதிய வீடியோ