உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  கூச்சலிட்டால் உத்தமர் ஆகிவிடுவரா?

 கூச்சலிட்டால் உத்தமர் ஆகிவிடுவரா?

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், தமிழக அரசின் இலச்சினையில் உள்ள, 'வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை உட்பட, பல இடங்களில் தமிழ் வார்த்தைகள் பிழையுடன் எழுதப்பட்டிருந்ததை கண்டு, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் உட்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட இக்கட்சிகள், தமிழை வைத்து, தங்கள் அரசியல் வாழ்வை நிலை நிறுத்திக் கொண்டனவே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக அவர்கள் செய்த நன்மை என்ன? உருது பள்ளிகளில் கூட, அதற்கான ஆசிரியர்களை நியமித்தது திராவிட கட்சிகளின் அரசு. அதேநேரம், தமிழுக்கு என்று தமிழ் ஆசிரியர்களை போதுமான அளவு நியமிக்கவில்லை. பின் எப்படி மாணவர்களால் தமிழை பிழையின்றி, இலக்கண சுத்தமாக படிக்க முடியும்? கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், 40,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை; 40,000 மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தேர்வுக்கு பயந்து தேர்வே எழுதவில்லை. இதுதான், திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த லட்சணம்! அதுமட்டுமல்ல... தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கியவர்கள் இந்த கயவர்கள். வேலை கிடைக்காது எனில் எவர் தமிழ் மொழிப் பாடத்தை எடுத்துப் படிப்பர்? தமிழை முறையாக கற்கவில்லை எனில், அதை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்ல முடியும்? இன்று, தமிழ் எழுதப் படிக்க தெரியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் யார்? புதிதாக வந்த கட்சியா அல்லது 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தை ஆண்ட கட்சிகளா? திட்டமிட்டே தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தவர்கள், இன்று தமிழ் பிழையுடன் எழுதப்பட்டுள்ளதாக கொதிக்கின்றனர். அடிக்கட்டடத்தின் கீழ் பள்ளம் தோண்டி விட்டு, கட்டடம் ஆடுவதைக் கண்டு, 'குய்யோ முறையோ' என்று கூக்குரல் இட்டால், உத்தமர்கள் ஆகிவிடுவரா? ----

காங்., முயற்சி பலிக்குமா?

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் இருந்து ஒருவழியாக முதல்வர் சித்தராமையாவை வீட்டிற்கு அனுப்பி, அந்த இடத்தில் அமர்ந்து விட்டார், துணை முதல்வர் சிவகுமார்.சித்தராமையாவின் ஆட்சியும் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. பெரும்பாலும், தேச விரோத, பிரிவினைவாதிகளுடன் கரம் கோர்த்த ஊழல் ஆட்சியாகவே இருந்தது; சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.இதனால், ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகரித்தது. இதேநிலை நீடித்தால், அடுத்து வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து, 'ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு; சித்தப்பனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு' என்பது போல், சிவகுமாரின் நீண்ட நாள் கோரிக்கையான முதல்வர் பதவியை அவருக்கு அளித்து, காங்., ஆட்சி மீதான அதிருப்தியை தடுக்க அக்கட்சியின் டில்லி தலைமை சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளது.சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ளதால், அவருடைய ஆதரவாளர்கள் தேர்தலில் உள்குத்து வேலைகளில் ஈடுபடலாம் என்பதால், சித்தராமையாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவருடைய மகனுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க முன்வந்துள்ளது, காங்., தலைமை.ஆட்சி முடிய இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள சிவகுமாருக்கு, தங்கள் ஆட்சியின் சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாததால், மக்களை உணர்வு ரீதியாக துாண்டும் வேலைகளை செய்து வருகிறார்.அவ்வகையில், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறார். இது அவ்வளவு எளிதல்ல என்பது சிவகுமாருக்கே தெரியும். ஆனாலும், ஆட்சி மீதான அதிருப்தியை திசைமாற்ற, இந்த கோஷம் அவருக்கு தேவைப்படுகிறது.பொதுவாக, மக்கள் அதிருப்திக்கு ஆளான ஆளுங்கட்சிகள், தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் போது, கணிசமாக ஓட்டு வங்கி உள்ள சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பது, கஜானாவைக் காலி செய்யும் விதமாக, இலவசங்களை வாரி வழங்குவது போன்ற நாடகங்களை அரங்கேற்றுவது வழக்கம்.அதுபோன்ற ஒரு முயற்சி தான், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், முதல்வர் சிவகுமாரின் மேகதாது அணை விவகாரமும்!மக்களை திசை திருப்பும் காங்கிரசின் இந்த தந்திரம் பலிக்குமா என்பது, அடுத்த தேர்தலில் தெரிந்து விடும்!----

அத்துமீறல்களை அடக்குங்கள்!

என்.அருண், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ​ தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தங்களை ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட சூப்பர் பவர் போலீசாரைப் போல் நினைத்துக் கொண்டு அடாவடிகளில் இறங்கி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் கூட்டுறவு சங்க, அம்மா மருந்தகத்தில் த.வெ.க., நிர்வாகிகள் சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை மிரட்டும் விதமாக, 'காலாவதியான மருந்துகளை ஏன் கடைக்குள் வைத்துள்ளீர்கள்?'என்று சண்டைக்கு நின்றுள்ளனர்.ஒரு மருந்தகத்தில் காலாவதியான மருந்துகள் இருந்தால், அதை முறைப்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தானே தவிர, ஓர் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அல்ல.மருந்தக ஊழியர்கள் தங்களின் விளக்கத்தை கூற முற்பட்டபோதும், அதை காதுகொடுத்து கேட்காமல், மிரட்டல் தொனியில் பேசி, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.கட்சி நிர்வாகிகள் தன்னிச்சையாக சட்டத்தைக் கையில் எடுத்து அராஜகம் செய்வதை, முதல்வர் விஜய் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல், ஆரம்பித்திலேயே இதுபோன்ற அத்துமீறல்களை அடக்கி ஒடுக்கி வைத்தால், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூன் 16, 2026 22:28

திராவிட கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை 80% பேர்களுக்கு தமிழ் ஒழுங்காக எழுதப்பபடிக்கத்தெரியாது. இந்த லட்சணத்தில் இவங்க தலைவர் பெரியார் தமிழை எழுத்துகளை சீர்திருத்தம் வேறு செய்தார்.


Lakshminarasimhan
ஜூன் 16, 2026 12:15

தமிழுக்கு திராவிட காட்சிகளை தவிர வேறு எந்த நாதியும் கிடையாது ஆகவே திராவிட காட்சிகளை வசை பாடுவதை தினமலர் நிறுத்தி கொள்ளணும்


G Mahalingam
ஜூன் 16, 2026 09:09

தவெகவினர் என்று பலர் பேசுகிறார். அவர் வானத்தில் இருந்து குவித்தவர் கிடையாது. எல்லாம் வேறு கட்சியில் இருந்தவர். தவெக ஆளும் கட்சி என்பதால் ஆளும் கட்சிக்கு மாறி விட்டார்கள். அடிமட்ட தொண்டர்தான் சாகும் வரை அதே கட்சியில் இருப்பார்கள். மற்ற கட்சிகள் நிர்வாகிகள் கட்சி மாறுவது அதன் மூலம் பலன் பெறுவது அரசியலில் சகஜம்.


D.Ambujavalli
ஜூன் 16, 2026 07:46

'நம் கட்சி. ஆட்சிக்கு. 11. மணிக்கு. நீங்கள் 11 . 05. க்கு. மணல். வேண்டியளவு. அள்ளலாம். '. என்று மாஜி. அன்று. உரக்க. சொல்லிவிட்டார் இன்றைய ஆட்சி. நிர்வாகிகளுக்கு. சொல்லாமலே. கண். ஜாடை. காட்டிவிட்டிருப்பார்களோ. என்று. தோன்றுகிறது. இத்தகைய. . அத்துமீறல்களைப் பார்த்தால் அவர்கள். 5. செய்ததை இவர்கள். 50. நாளிலேயே. செய்து. விடுவார்கள். போலிருக்கிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை