உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  நிரந்தர மாற்றமாக விஜய் திகழ்வாரா?

 நிரந்தர மாற்றமாக விஜய் திகழ்வாரா?

எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கோலோச்சி வந்த இரு கழகங்களின் ஆட்சிக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுவரை, தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., மீதான அதிருப்தியால் தி.மு.க.,விற்கும் ஓட்டளித்து வந்த மக்களுக்கு, மூன்றாவது சக்தி இல்லாத குறையை நடிகர் விஜயின் அரசியல் வருகை பூர்த்தி செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zx8vy5nx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ முதல், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரை, மாற்றத்தை முன்னிறுத்தி அரசியலுக்குவந்தவர்கள் தான்; ஆனால், காலப்போக்கில் திராவிடக் கட்சிகளுக்குள் ஐக்கியமாகிப் போயினர். தனித்து நின்ற சீமானின் கொள்கைகளும், நடைமுறைக்கு ஒவ்வாத சீர்திருத்தப் பேச்சுகளும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையத் தவறிவிட்டன. இந்நிலையில், தி.மு.க., அரசின் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அ.தி.மு.க.,வின் உட்கட்சிப் பூசல்களும், ஊழல் புகார்களும் மக்களிடம் சலிப்பை ஏற்படுத்தியதால் மாற்றத்திற்கான பாதையாக விஜயை பார்த்ததன் விளைவே இந்த வெற்றி! தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை விஜய்க்கு மக்கள் வழங்கியிருக்கும் நிலையில், அவர் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டால் மட்டுமே, இனி வரும் காலங்களில் மூன்றாவது சக்தியாக நிலைத்து நிற்க முடியும். இல்லையெனில், மக்கள் மீண்டும் பழைய திராவிடக் கட்சிகளையே நாட வேண்டிய சூழல் உருவாகிவிடும். ​காலமும், விஜயின் நடவடிக்கைகளுமே அவர் தமிழக அரசியலில் ஒரு நிரந்தர மாற்றமா அல்லது வெறும் ஓர் அத்தியாயமா என்பதைத் தீர்மானிக்கும்! lll அழுவாச்சி நாடகம் வேண்டாம்! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ----------------------------------- நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், தோல்வியைத் தழுவிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் முடிவு வெளிவந்த மறுநாளே அவசர அவசரமாக, தன் தொகுதி மக்களை சந்திக்க, முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுடன் சென்னை கொளத்துாருக்கு புறப்பட்டு விட்டார். திறந்த வேனில் ஸ்டாலின், 'ரோடு ேஷா' செல்ல, வாகனத்தின் முன்னும், பின்னும் தி.மு.க., தொண்டர்கள் கோஷம் போட்டு அழுதபடியே சென்றனர். உடனே, 'அழாதீங்க, அழாதீங்க' என்பது போல் தொண்டர்களையும், வேடிக்கைப் பார்த்த மக்களையும் பார்த்து ஸ்டாலின் கையசைத்தபடியே செல்ல, சேகர் பாபு உட்பட உடன்பிறப்புகள் தேம்பித் தேம்பி அழுதபடி சென்றனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோற்றதற்காக இன்று கண் கலங்கும் ஸ்டாலின், இதே, தி.மு.க., அரை நுாற்றாண்டிற்கு முன், பெருந்தலைவர் காமராஜரை ஒரு சாதாரண மாணவனை வைத்து தோற்கடித்த போது, இவரது தந்தை கருணாநிதி கை கொட்டி சிரித்ததையும், எகத்தாளமாக பேசியதையும் எப்படி மறந்தார்? ஸ்டாலின் தோற்றதற்கு இன்று கண்ணீர் சிந்தும் தி.மு.க.,வினர், அன்று காமராஜர் தோற்றபோது இனிப்பு வழங்கி கொண்டாடினரே! அன்று, தி.மு.க., காமராஜருக்கு செய்ததை, இன்று த.வெ.க., செய்துள்ளது; இதில் கண்ணீர் விட என்ன இருக்கிறது! lll மாற்றங்களுக்கு வழிவகுக்கும்! ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நம் நாட்டில் பெட்ரோல், டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இருக்காது; உயிரி எரிபொருட்கள், சி.என்.ஜி., - எல்.என்.ஜி., மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஹைட்ரஜன் வாகனங்கள் நீண்ட துாரம் செல்லும் திறன் மற்றும் குறைவான எரிபொருள் நிரப்பும் என்பதால், ஹைட்ரஜன் தான் எதிர்காலத்திற்கான எரிபொருளாக இருக்கும்' என்று கூறியுள்ளார், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி. பொதுவாக, நம் வாழ்வில் ஏற்படும் சில இடையூறுகள், கஷ்டங்கள் தான் மாற்றங்களுக்கு அல்லது முன் னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது அறிவியல் உணர்த்தும் உண்மை. அவ்வகையில், இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் போரால், உலக வர்த்தக வளர்ச்சி 4.60 சதவீதத்திலிருந்து, நடப்பாண்டில், 1.90 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. போருக்கு முன், 60 டாலர் என்று இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது, 120 டாலரை தாண்டியுள்ளது. போரின் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தியை மூடி, எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஈரான் முடக்கியுள்ளதால், பல நாடுகளில் காஸ் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவையும் ஈரானால் தாக்கப்பட்டு, அவை, தங்கள் எண்ணெய் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், ஏற்பட்ட எரிவாயு வர்த்தக பாதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் தொடரலாம் என்று கூறப்படுகிறது. அதிலும், 'போர்ஸ் மேஜர்' என்ற அவசரகால அறிவிப்பால், ஒப்பந்தப்படி எரிவாயு ஏற்றுமதியை நிறைவேற்ற முடியாது என்று இந்நாடுகள் கூறியுள்ளன. இதனால், உலக நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அபரிமிதமான எரிவாயு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, 10 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசலிலும் எத்தனால் கலப்பு மற்றும் 100 சதவீதம் எத்தனாலால் இயங்கும் வாகனங்கள் போன்ற ஆய்வுகள் தொடர்கின்றன. இன்டக் ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் கெட்டில், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மின்சார கார் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் என்று மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எத்தனாலை எரிபொருளாக கொண்ட சமையல் அடுப்புகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அடுப்பை எரிய வைக்கும் அசாத்திய கண்டுபிடிப்பை கொடுத்திருக்கின்றனர் சில விஞ்ஞானிகள். மீத்தேனிலிருந்து உருவாகும் பி.என்.ஜி., வாயுவை வீடுகளுக்கு நேரடியாக வினியோகிக்க குழாய்கள் பதிக்கும் வேலைகளும் நடக்கின்றன. டில்லி அரசு, பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களை வாங்கினால், ஊக்கத்தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இப்போதைக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இது பல புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை