எஸ்.லிங்கேஸ்வரன், காவல் உதவி ஆய்வாளர் (பணி நிறைவு), செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: தேர்தலில் தோற்றவர்கள், அரசுக்கு எதிராக கையிலெடுக்கும் பிரதான ஆயுதம் தான், தேர்தல் நடைமுறை குறித்த சந்தேகம்! அவ்வகையில், மத்திய பா.ஜ., அரசை எதிர்க்க, தற்போது, ‘இண்டி’ கூட்டணியினரும், தேச விரோத அமைப்புகளும் கையில் எடுத்துள்ள ஆயுதம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்! இவர்கள் தங்கள் எதிர்ப்புக்கு வலு சேர்க்க, இளைஞர்களிடம் தவறான தகவல்களை பரப்பி, மூளைச் சலவை செய்கின்றனர். இவர் களின் அரசியல் யுக்தி தெரியாத இளைஞர்களும், இந்த வஞ்சகர்களின் பின் அணிவகுக்கின்றனர். சரி... இவர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட, நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறதா? பிரதமர் மோடியும், அமைச்சர்களும் ஆடம்பரமாக வாழ்ந்து, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்கின்றனரா? வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடக்காமல், நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளதா? பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறதா? ஆட்சியாளர்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டதா அல்லது நீதிமன்றங்கள் தான் முடங்கி விட்டனவா? எதிர்க்கட்சி தலைவர்களின் சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளனவா? நாட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை கெட்டு விட்டதா? எதற்காக இந்த போராட்டங்களும், கலவரங்களும்? பிரதமர் மோடி, நாட்டை வலிமைமிக்க தற்சார்பு நாடாக கொண்டு செல்வதை, எதிர்க்கட்சிகளாலும், தேசவிரோத சக்திகளாலும், அந்நிய கைக்கூலிகளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், நாட்டின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்க துடிக்கின்றனர். காங்., ஆட்சியில் முனைப்புடன் செயல்பட்ட மவோயிஸ்ட், நக்சல்கள் அட்டகாசங்கள் அடக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களிடம், காங்., கட்சி போல் பேச்சு நடத்தி பொழுதை போக்கவில்லை, பா.ஜ., அரசு; இருக்குமிடம் தேடிச் சென்று, பதிலடி கொடுத்தது. ஒட்டு மொத்த நாட்டின் தலைவலியாக திகழ்ந்த, ஜம்மு – காஷ்மீர், தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றால், அதற்கு காரணம் மோடி! பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளின் ஸ்திரத்தன்மையால், உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்று, வல்லரசு பட்டியலில் உயர்ந்து நிற்கிறது, இந்தியா. இப்படி, நம் நாடு வளர்வதை பொறுத்து க் கொள்ள முடியாத புல்லுருவிகள், தங்கள் சுயலாபத்திற்காக கலவரத்தை துாண்டுகின்றனர். இளைஞர்கள் அவர்கள் பின் அணிவகுக்காமல், நேர்வழியில், நாட்டுப் பற்றுடன் சிந்திக்க வேண்டும்! ஏனெனில், நேர்மையான ஆட்சியாளர்களால் இந்நாடு கட்டமைக்கப்பட்டால் தான், நாளை வலுவான பாரதம் உங்கள் கையில் இருக்கும்!