உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 8, 1921 ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில், கும்பசுவாமி - சுந்தரம்மா தம்பதியின் மகனாக, 1921ல், இதே நாளில் பிறந்தவர் உலிமிரி ராமலிங்கசுவாமி. இவர், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., - எம்.டி., முடித்தார்.பின், ஆக்ஸ்போர்ட் பல்கலையின் உதவித்தொகையுடன் நோயியல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றிய ஆய்வுகளை செய்து, பட்டம் பெற்றார். தாய்நாடு திரும்பி, குன்னுாரில் இருந்த தேசிய ஊட்டச்சத்து ஆய்வகத்தில், புரதச்சத்து, அயோடின் குறைபாடு, ரத்த சோகை குறித்து ஆய்வு செய்தார்.பின், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனராகவும், நோயியல் துறை தலைவராகவும் பொறுப்பேற்றார். பீஹார் பஞ்சம், காங்க்ரா பள்ளத்தாக்கு மக்களுக்கு ஏற்பட்ட முன்கழுத்து கழலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அயோடின் கலந்த உப்பின் பயனை விளக்கினார்.தன் மருத்துவ ஆய்வுகளை, சர்வதேச ஆய்வேடுகளில் கட்டுரைகளாக எழுதினார். தேசிய நோய் தடுப்பு கழக தலைவராகவும், உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், 2001, மே 28ல் தன் 80வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை