ஜூலை:மதுரையில், 1952ல், அபுபக்கர் ராவுத்தர் - பாத்திமா பீவி தம்பதியின் மகனாக பிறந்தவர், அ.செ.இப்ராகிம் ராவுத்தர். இவர், மதுரையில், வெத்தலைப்பேட்டை என்ற பகுதியின் தலைவராக இருந்தார். இவரும், நடிகர் விஜயகாந்தும், பால்ய நண்பர்கள். இருவரும் சினிமா ஆசையால் சென்னை வந்து, இயக்குனருக்கு இவரும், நடிக்க அவரும் வாய்ப்பு தேடினர்; விஜயகாந்த் வெற்றி பெற்றார். முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடிக்க,1 லட்சம் ரூபாய்க்கு, விஜயகாந்த் ஒப்பந்தமானார். அதை திருப்பி தந்து, 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, உழவன் மகன் படத்தால் மீண்டும் அவரை வெற்றி நாயகனாக்கினார், ராவுத்தர். 'தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ், ஐ.வி., சினி புரொடெக்சன்ஸ்' என்ற பேனர்களிலும் படங்களை தயாரித்தார். அவருக்கான கதை, நடை, உடை, பேச்சு, அரசியலை இவரே கவனித்தார். இருவரும், பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், உளவுத்துறை, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் உள்ளிட்ட படங்களை தந்தனர். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த இவர், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்தார். இவர் தன், 64வது வயதில், 2015ல் இதே நாளில் மறைந்தார்.மதங்களை கடந்து, மனங்களை வென்ற, மதுரை மைந்தன் மறைந்த தினம் இன்று!