இதே நாளில் அன்று
டிசம்பர் 26, 2021புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனாக, 1943, டிசம்பர் 10ல் மயிலாடுதுறையில் பிறந்தவர் மாணிக்க விநாயகம்.இவர், தன் மாமாவும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனிடம் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, நாதஸ்வர வாசிப்பை கற்றார். 15,000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்களுக்கு இசையமைத்து, முன்னணி பாடகர்களை பாட வைத்தார்.வித்யாசாகர் இசையில், தில் படத்தில், 'கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி...' என்ற பாடலை பாடி, பின்னணி பாடகராக அறிமுகமானார்.அப்போது அவருக்கு வயது 50. தவசி, கன்னத்தில் முத்தமிட்டால், வெயில், பருத்தி வீரன், சிங்கம் உள்ளிட்ட படங்களில் 'ஹிட்' பாடல்களை பாடினார்.திருடா திருடி, பேரழகன், கள்வனின் காதலி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 'கலைமாமணி, இசை செல்வம்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2021ல், தன் 78வது வயதில் இதே நாளில் மறைந்தார்.இவரது நினைவு தினம் இன்று!