இதே நாளில் அன்று
ஜனவரி 11, 1932
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் உள்ள செ.மேலப்பாளையத்தில், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியின் மகனாக, 1904 அக்டோபர் 4ல் பிறந்தவர் குமரன்.நெசவு தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், இவரது குடும்பம் திருப்பூரில் குடியேறியது. இளைஞரான குமரன், விடுதலை போராட்டத்துக்காக, 'திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றம்' துவக்கினார். 1932 ஜனவரி 10ல் நடந்த அறப்போராட்டத்தில், தொண்டர் படைக்கு தலைமை ஏற்று, 'வந்தே மாதரம்' எனும் முழக்கத்துடன் பேரணி சென்றார்.அப்போது, போலீசார் தடியடி நடத்தியதில் பூட்ஸ் காலால் உதைபட்ட குமரன், சுயநினைவை இழந்தார். அப்போதும் தேசிய கொடியை விடாமல், கையில் பற்றியபடியே சரிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், மறுநாள் 11ம் தேதி மறைந்தார். அப்போது, இவரது வயது 28 மட்டுமே.தமிழக அரசு, இவரை கவுரவிக்கும் வகையில் நினைவகம், நினைவுத்துாண் எழுப்பியுள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது.'கொடி காத்த குமரன்' நினைவு தினம் இன்று!