இதே நாளில் அன்று: நவ. 15
நவம்பர் 15: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், உலிஹாட்டு கிராமத்தில் சுக்னா முண்டா – கர்மி ஹாட்டு தம்பதியின் மகனாக, 1875ல் இதே நாளில் பிறந்தவர், பிர்சா முண்டா. பழங்குடியினரான இவர், சால்கா கிராமத்திலும், ஜெர்மன் மிஷன் பள்ளியிலும் ஆரம்ப கல்வி கற்றார். மதுவிலக்கு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சியில் பழங்குடியினர் நிலங்கள் பறிக்கப்படுவதையும், நில பிரபுக்களின் சுரண்டலையும் எதிர்த்து போராடினார். பழங்குடியின மக்களின் கலாசாரம், நில உரிமை, சமூக ஒற்றுமையை பாதுகாக்க, ‘பிர்சாயிசம்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். தொடர்ந்து 1899ல், ‘உல்குலான்’ என்ற பெரும் கிளர்ச்சியை தொடங்கி, நில சீர்திருத்தங்களை நிறைவேற்ற பிரிட்டிஷ் அரசை பணிய வைத்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடியதால், ‘பூமியின் தந்தை’ என போற்றப்பட்டார். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1900 ஜூன் 9ல், தன் 25வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த நாள், 2021 முதல், ‘தேசிய பழங்குடியினர் பெருமை தினமாக’ கொண்டாடப்படுகிறது. ராஞ்சி விமான நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினம் இன்று!