உள்ளூர் செய்திகள்

 இதே நாளில் அன்று

டிசம்பர் 6: மத்திய பிரதேச மாநிலம், மாவ் எனும் ஊரில், ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியின் மகனாக, 1891, ஏப்ரல் 14ல் பிறந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால், கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும், 10ம் வகுப்பு முடித்தார். இவரது குடும்பம், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு இடம்பெயர, அங்குள்ள பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். பரோடா மன்னரின் உதவியுடன், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் பாடங்களில் முதுகலை பட்டங்களை பெற்றார். அங்கு இவரது ஆய்வுக் கட்டுரைகளுக்காக, 'டாக்டர்' பட்டம் பெற்றார். நாடு திரும்பி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர், மகாத்மா காந்தியுடன், 'புனே ஒப்பந்தம்' செய்து, பொது ஓட்டெடுப்புடன் கூடிய தனி தொகுதிகளை பெற்றார். சுதந்திரத்துக்கு பின், நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு தலைவராகவும் செயல்பட்டார். பிரதமர் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1951ல் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். ஓய்வின்றி உழைத்தவர், நீரிழிவு நோயால், தன் 65வது வயதில், 1956ல் இதே நாளில் மறைந்தார். 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை