நம்முடன் இருப்பதை மறந்துட்டாரோ?
கன்னியாகுமரி அருகே இரவிபுதுாரில், சமீபத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் அமைப்புச் செயலரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய்சுந்தரம் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'சசிகலா தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து, ஜெயலலிதாவை வழக்கில் சிக்க வைத்தார். சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்ல முடிவு செய்தபோது, கொண்டு செல்ல முடியாத வகையில் தடுத்தவர் சசிகலா. 'ஒரு பணிப்பெண்ணாக ஜெ.,யுடன் இருந்தவர் தற்போது கட்சி ஆரம்பிக்கிறார்; அப்படி என்றால் எவ்வளவு சொத்து இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், நம்ம கூட கூட்டணியில் இருப்பதை இவர் மறந்துட்டாரோ...?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.