இவர் பதவிக்கு தான் ஆபத்து!
தென் சென்னை மத்திய மாவட்ட காங்., தலைவர் முத்தழகன் தலைமையில், எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட்பகுதியில் அமைதி பேரணி துவங்கி, அசோக் பில்லர், 100 அடி சாலை வழியாக, ஜாபர்கான்பேட்டையில் உள்ள காமராஜர் சிலை அருகில் முடிந்தது.அப்போது, முத்தழகன் பேசுகையில், 'நாங்கள் டாஸ்மாக் கடைகளின் பார் குத்தகையோ, எங்கள் வக்கீல்களுக்கு நீதிமன்றத்தில் முக்கிய பதவியோ, கோவில் அறங்காவலர் குழுவில் பிரதிநிதித்துவமோ கேட்கவில்லை. ஒன்றை மட்டும் தான் கேட்கிறோம்... தி.மு.க., கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும்.'காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி, பேரணிகளுக்கு போலீசார்அனுமதி மறுக்கின்றனர். எங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எங்களுடன் கூட்டணி வைத்ததால்தான், தி.மு.க., ஆட்சியே நடக்கிறது என்பதை மறக்கக் கூடாது' என்றார்.கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'எல்லாம் உண்மை தான்... இதை செல்வப்பெருந்தகை, இளங்கோவன் போன்றோர் கேட்டால், இவரது பதவிக்கு தான் ஆபத்து...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.