சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை; இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் இளங்கோவன் பேசும்போது, 'அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் பேசுகிறார். 'மறைந்த முன்னாள் அமைச்சரான, வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு தி.மு.க., எந்த நல்லதும் செய்யவில்லை. அவரது மகன் ராஜாவுக்கு, மாவட்ட செயலர் பதவி கொடுத்திருந்தால், நெஞ்சு வலியால் இறந்திருக்க மாட்டார் என, தி.மு.க.,வினரே பேசுகின்றனர்...' என்றார். இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'ஆறுமுகத்தை, அக்கட்சியினர் மறந்துட்டாலும் இவர் மறக்காம இருக்காரே...' எனக் கூற, 'இவர், வீரபாண்டி தொகுதியில நிற்க, 'பிளான்' பண்றாரு... அதான், ஆறுமுகம் ஆதரவாளர்கள் ஓட்டுகளை வளைக்க இப்படி பேசுறாரு...' என்றபடியே கிளம்பினார்.