அதிகாரியே அவமதிக்கலாமா?
சென்னை மாநகராட்சியின் அம்பத்துார் மண்டலக்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது. கூட்டத்தின் துவக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர். ஆனால், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் பொன்னரசி, மொபைல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். இதை கண்ட நிருபர்கள், பொன்னரசியின் செயலை புகைப்படம் எடுத்தனர்; உடனடியாக அவர் மொபைல் போனை கீழே வைத்தார். அதன்பின் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் பேசப்பட்ட எந்த விஷயங்களையும் கவனிக்காத பொன்னரசி, பெரும்பாலான நேரத்தை மொபைல் போன் பார்ப்பதிலேயே செலவிட்டார். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரியே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தால், அவருக்கு அடுத்துள்ள பணியாளர்கள் எப்படி மதிப்பர்?' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.