| ADDED : ஆக 17, 2026 11:28 PM
தி.மு.க., சார்பில், சென்னை அம்பத்துாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் வேலு மற்றும் சேகர்பாபு கலந்து கொண்டனர். வேலு பேசுகையில், 'சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, த.வெ.க.,வினர் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். 'ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன் விசிலடித்த அனைவரும், இதனால் வாயடைத்து போயுள்ளனர்' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின் போது, அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்னு சொல்லிட்டு, ஆட்சிக்கு வந்ததும், தகுதியான பெண்களுக்கு மட்டும்னு இவங்க ஏமாத்தலையா?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.