சார் என்ன ரிசல்ட் வந்தது?
ராமநாதபுரம் போக்குவரத்து போலீசாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் பங்கேற்று, போலீசாருக்கு உபகரணங்களை வழங்கினார். அப்போது, ஒவ்வொரு கருவியின் பயன்பாட்டையும், பத்திரிகையாளர்களுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டினார். இறுதியாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் கருவியை, தானே வாயால் ஊதி சோதனை செய்து, அதில் பில் போன்று வந்த ரசீதையும் எடுத்துக் காட்டினார். மேலும், 'இந்த கருவியில் கேமரா இருப்பதால், யாரும் இதில் இருந்து தப்ப முடியாது' எனவும் கூறினார். உடனே குறும்புக்கார நிருபர் ஒருவர், 'சார் அந்த கருவியில் என்ன ரிசல்ட் வந்துள்ளது?' என கேட்க, ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த, எஸ்.பி., 'ஜீரோ' என வந்ததை நிருபர்களிடம் காட்ட, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.