அவங்க பிரச்னையே தீரலையே!
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி யில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. சேலம் தாசில்தார் பார்த்தசாரதி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தனர். இதில், ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர். அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவை கேட்டு மனுக்கள் அளித்தனர். இதை பார்த்த பொதுமக்களில் ஒருவர், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நாலரை வருஷமாகியும், அவங்க கட்சிக்காரங்க பிரச்னையே தீராமல் இருக்கும் போல. இன்னும் மனு கொடுத்துட்டு இருக்காங்களே...' என, முணுமுணுத்தார். அவரது அருகில் இருந்தவர், 'அதானே... இதுல, நாம கொடுக்கிற மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்னு தெரியலையே...' என, புலம்பியபடியே, வரிசையில் முன்னோக்கி நகர்ந்தார்.