அந்த தலைவர்கள் இங்க இல்லையே!
கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலர் அஸ்வத்தாமன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தி, அடுத்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேற்கு வங்கம் போல் விரைவில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்' என்றார். இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'மேற்கு வங்கத்துல நம்ம கட்சிக்கு கடுமையா உழைச்சது மாதிரியான தலைவர்கள் இங்க இல்லையே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.