த.மா.கா., தனியா தான் நிற்கணும்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு சமீபத்தில் வந்த த.மா.கா., தலைவர் வாசன், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'மேகதாது அணை விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் கூறிய கருத்து, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய நியாயமான உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது. 'உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அவசியம் என்பதை த.மா.கா., உணர்ந்துள்ளது. எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, கூட்டணி குறித்து அறிவிப்போம்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'எங்களுக்கு இத்தனை சதவீதம் இடங்கள் தரும் கட்சியுடன் தான் கூட்டணின்னு, இவர் அறிவிக்கலாமே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர், 'அப்படி நிபந்தனை விதிச்சால், த.மா.கா., தனியா தான் நிற்கணும்' என்றபடியே இடத்தை காலி செய்தார்.