விஜயால் இவங்களுக்கு லாபம்தான்!
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன், ஈரோடு மாவட்டம், அறச்சலுார் ஓடாநிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அமெரிக்காவின் திடீர் வரி அதிகரிப்பால், தொழிற்சாலை நடத்தி வருபவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நம் நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது தொடர்பாக, அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். நடிகர் விஜய் போட்டியிடுவதால் எங்களுடைய சில ஓட்டுகள் அவருக்கு செல்லலாம். ஆனாலும், தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'நடிகர் விஜயால் இவங்களுக்கு லாபம் தான்... தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை அவர் பிரிச்சுட்டா, இவங்க ஈசியா ஜெயிச்சிடலாமே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.