சீமான் பக்கம் சாய்ஞ்சுட்டாங்களே!
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், துாத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். த.வெ.க., தலைவர் விஜய் தொடர்பான கேள்விக்கு, கொஞ்சம் காட்டமாகவே பதில் அளித்த கீதா ஜீவன், 'அக்கட்சி தொண்டர்களிடையே கண்ணியம், கட்டுப்பாடு இல்லை. த.வெ.க., தலைமை அதை சரி செய்து கொள்ள வேண்டும்' என்றார். நிருபர் ஒருவர், 'விஜய் பிரசாரத்திற்கு கூடிய கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சீமான், விஜய்க்கு மட்டுமல்ல, நடிகை நயன்தாரா வந்தாலும் இதைவிட அதிக கூட்டம் கூடும் என கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன...' என, கேள்வி எழுப்பினார். சற்றும் யோசிக்காமல், 'அது உண்மைதானே...' என்றார், கீதா ஜீவன். அங்கிருந்த தொண்டர் ஒருவர், 'தினமும் தி.மு.க.,வை திட்டி தீர்க்கும் சீமான் பக்கம் அக்கா திடீர்னு சாய்ஞ்சுட்டாங்களே...' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.