பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு: பல மாநிலங்களில், 1,000 ஆண்கள் என்றால், 800 முதல் 900 பெண்கள் தான் உள்ளனர். தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு 994 பெண்கள் உள்ளனர். காரணம், பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்கும் மாநிலம் இது. ஒவ்வொரு வீட்டிற்கும் நம் மகளிரணியினர் சென்று, அரசின் சாதனைகளை கூற வேண்டும். திரையில் பார்ப்பதும், நேரில் பார்ப்பதும் ஒன்று என, சிலர் நினைக்கின்றனர்; அவர்களையும் மாற்ற வேண்டும். அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.நடிகர் விஜயின் ரசிகையாக இருந்த பல பெண்கள், இன்று அவருக்கு ஓட்டு போடும் முடிவில் இருப்பாங்க... 'அவங்களை தடுத்து நிறுத்தணும்'னு சொல்றாங்களோ? த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் பேச்சு: பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை, பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த போர் வாயிலாக, பிரதமர் மோடி நிரூபித்து விட்டார். உலக நாடுகளின் அதிபர்கள், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடியை பாராட்டுகின்றனர். தேசபக்தி கொண்ட அனைத்து மக்களும், இந்திய ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில் அவர்களை வாழ்த்தி, அவர்களின் தியாகத்தை போற்ற வேண்டும்.இந்த விவகாரத்தில், 145 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் பின்தான் நிற்கின்றனர்!மா.கம்யூ., கட்சி மாநிலக்குழு தீர்மானம்: தமிழகம் முழுதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், நீர்நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருக்கும் மற்றும் குடிசை வாழ் மக்களை வெளியேற்று வது நியாயமல்ல. மாநில அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை காரணமாக கூறி, அவர்களை வெளியேற்றும் செயல்களில் ஈடுபடுகிறது. இப்படியான தீர்ப்புகளுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.அது சரி... அப்புறம் மழை வெள்ளம் வந்து மக்கள் தத்தளிக்கிறப்ப, 'அவங்களுக்கு மாநில அரசு நிவாரணம் தரணும்'னும் கோரிக்கை வைப்பாங்களே!ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை: பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து, மக்களுக்கு பாதிப்பின்றி துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தை உலக நாடுகளே பாராட்டுகின்றன. ஆனால், ஆத்திரத்தில் அறிவிழந்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்துஉள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு'ன்னு சொன்ன மாதிரி, அதற்கான பலன்களை பாகிஸ்தான் அனுபவித்தே தீரணும்!