பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர், கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை: ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்திய ராணுவத்தின் இந்த சிறப்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவையும், ஒத்துழைப்பையும், முஸ்லிம் லீக் வழங்குகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் லீக் ஒத்துழைப்பு அளிக்கும்.தி.மு.க.,வுக்கு மட்டுமே காலங்காலமா ஒத்துழைப்பு தந்து வரும் இவர், இந்த பிரச்னையிலும் அவங்க வழியை பின்பற்றியிருப்பது நல்லாவே தெரியுது!தமிழக, பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் பேச்சு: பாகிஸ்தான் பிரதமர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, 'உதார்' விடுகிறார். அவர் கூறியது உண்மை என்றால், அது, 'வீடியோ கேமில்' தான் இருக்க முடியும். இந்தியாவில் ஒரே குரல்; பாகிஸ்தானில் அழுகுரல்... பஹல்காமில் சுற்றுலா பயணியரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 'மோடியிடம் போய் சொல்' என கொக்கரித்தனர். ஆனால், இப்போது, 'போரை நிறுத்தச் சொல்' என கதறுகின்றனர்.'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழி, பாகிஸ்தானுக்கு தான் பக்குவமா பொருந்தும்!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேட்டி: நான் துாங்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். விழித்துக் கொண்டு செயல்படுவதால் தான், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்படி பேசி வருகிறார். அவரை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க., தான். முதல் முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட ரகுபதிக்கு, ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி தரப்பட்டது. தற்போது தீய சக்தி, தி.மு.க.,வில் அடிமையாக உள்ளார்.ரகுபதி மட்டுமா... ராஜ கண்ணப்பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, சேகர்பாபுன்னு அங்க இருக்கும் பலரும், உங்க பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவங்க தானே!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வர, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றோம். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத, தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, தி.மு.க.,விற்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நல்லவேளை, 2024ல் இவரது கட்சி, தே.ஜ., கூட்டணியில் இணைந்தது... இல்லேன்னா, மோடியால் மூணாவது முறையாக பிரதமராகியிருக்கவே முடியாது போலிருக்கே!