பேச்சு, பேட்டி, அறிக்கை
த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: 'மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்' என, அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் வாரியம் லாபத்தில் இயங்கும் என்பது உண்மையல்ல. மின் வாரியத்தின் இழப்புக்கு காரணம், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக மின் வாரியத்தை லாபத்தில் இயக்க வைக்க முடியும். மின் வாரியம் லாபத்தில் இயங்க துவங்கிட்டால், அதை நிர்வகிக்கிறவங்க, 'பலன்' பெற முடியாம போயிடுமே!தமிழக, காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் பேச்சு: 'தனியார் கல்வி நிறுவனங்களிலும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். தேசிய அளவில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு உச்ச வரம்பு எனும் கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும்' என, குரல் கொடுத்து களமாடுகிறார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல். எப்போதும், எளிய மக்களின், குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்றால், அது மிகையல்ல.நம்ம நாட்டை கிட்டத்தட்ட, 50 வருஷங்களுக்கும் மேலாக, காங்., ஆட்சி செய்தப்ப, குரலற்றவர்களின் குரலை ஏன் கண்டுக்கலை?திருச்சி தொகுதி, ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேச்சு: 'அம்ரித் பாரத்' திட்டத்தில் நாடு முழுதும், தேர்ந்தெடுக்கப்பட்ட, 103 ரயில் நிலையங்களை மத்திய அரசின் ரயில்வே துறை மேம்படுத்தியுள்ளது. அந்த வகையில், என் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையமும் தேர்வாகி, அதில், 6.77 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்.பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டுறாரே... தி.மு.க., தரப்பு, இவர் மீது கோபம் கொள்ளாதா?தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பேட்டி: கடந்த, 2012ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து, கடந்த 13 ஆண்டுகளாக, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், மருத்துவ செலவு, உணவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அடிப்படை செலவுகளுக்கு கடன் வாங்கி, 12,000 குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. எனவே, இந்த ஆண்டின் மே மாத சம்பளம் 12,500 ரூபாயை வழங்கி, 12,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.நியாயமான கோரிக்கை தான்... ஒரு மாதம் முழுதும் யாராலும் சாப்பிடாமல், பட்டினி கிடக்க முடியுமா என்பதை முதல்வர் தரப்பு யோசிக்க வேண்டும்!