பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளால், 2026ல் மட்டுமல்ல... 2031லும் தி.மு.க., ஆட்சியை பிடித்து விடும் என்ற காழ்ப்புணர்ச்சியால், அ.தி.மு.க., தரப்பில் நீதிமன்றத்தை நாடி, தோல்வி அடைந்துள்ளனர். மக்களுக்காக சிந்திக்கக் கூடியவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கின்றனர். மக்கள் எப்படி போனால் என்ன என்று நினைப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்த நாலரை வருஷமா, இவங்க ஏன் மக்களுக்காக சிந்திக்கலையாம்? தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை: 'பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது துரைமுருகன் கட்டியதுண்டா?' என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேட்டுள்ளார். நான் அமைச்சரான பின், பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியுள்ளேன். இதுபோல கவுண்டன்யா நதி, பொண்ணையாறு, பாம்பாறு, கொசஸ்தலை ஆறு, அகரம் ஆறு, மலட்டாறு, கானாறு, கன்னாறு ஆகியவற்றிலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியதோடு, நடப்பு ஆண்டில் நான்கு இடங்களில் தடுப்பணை பணி நடக்கிறது. துரைமுருகன் குறிப்பிட்ட நதிகள் எல்லாம் எங்கு ஓடுகின்றன என்பதாவது அன்புமணிக்கு தெரியுமா? மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: கோவையில் பாரதியார் பல்கலை அமைக்க, 1977 முதல் 1986ம் ஆண்டு வரை, விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அவர்களுக்கு வட்டியுடன், 60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம், 2022ல் உத்தரவிட்டது. தீர்ப்பை அமல்படுத்த, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்; இல்லாவிட்டால், பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள நிலங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும்.இதுவே, விவசாயிகள் சார்பாக அரசுக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இறுதி எச்சரிக்கையை தி.மு.க., அரசு மதிக்காவிட்டால், கூட்டணி யிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி வெளியேறிடுமா? த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: உடுமலைப்பேட்டை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. மது போதையில் ரகளை செய்தவர்களை விசாரிக்கச் சென்றபோது, கொலை நடந்துள்ளது. இதில் கைதான கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை காலம் தாழ்த்தாமல் நீதிமன்றத்தில் அரசு பெற்று தர வேண்டும். போலீஸ் அதிகாரி கொலை வழக்கு என்பதால், வழக்கை விரைந்து முடிக்க போலீசார் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பாங்க!